Pages

Tuesday, September 27, 2011

வித்ரில் குனூத் ஓதுவது

வித்ரில் குனூத் ஓதுவது பற்றி நமது நிலைபாட்டுக்கு எதிராக சில மார்க்க அறிஞர்கள் விமரசனம் செய்து வருகின்றனர், வித்ரில் குனூத் ஓதுவது பற்றிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை எனவும் அவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். அவர்களின் வாதங்களுக்கு பதிலளித்து மவ்லவி அப்துன்னாசர் அவர்கள் ஆய்வுக்கட்டுரை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் உடன்பாடு கண்டு வெளியிடுகிறோம்.
வித்ர் தொழுகையில் குனூத் ஓதும் நடைமுறை தவ்ஹீத் சகோதரர்கள் மத்தியிலும் இன்னும் பலர் மத்தியிலும் வழக்கத்தில் இருந்து வருகிறது. இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் அடிப்படையில் நிரூபணமான ஒன்று என்று அவர்கள் கருதுகின்றனர்.
வித்ரில் குனூத் ஓதுவதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் எதுவும் இல்லை என்ற கருத்தும் நீண்ட காலமாக இருந்து வருகிறது.
தமிழ் கூறும் முஸ்லிம்கள் மத்தியில் வித்ரில் குனூத் ஓதுவது குறித்த அறிவிப்புகள் பலவீனமானவை என்ற கருத்து தற்போது வேகமாகப் பரப்பப்பட்டு வருகிறது. எனவே இது குறித்து சரியான நிலைபாட்டை எடுத்துக் கூறும் அவசியம் கருதி இது வெளியிடப்படுகிறது.

வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது சம்மந்தமாக பலவீனமான ஹதீஸ்களும் உள்ளன. ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன.
அவற்றில் பலவீனமான ஹதீஸ்களைத் தேடிப்பிடித்து அவை பலவீனமானவை என்று மீண்டும் சிலர் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் மூலம் வித்ரு குனூத் தொடர்பான அனைத்து ஹதீஸ்களும் பலவீனமானவை என்ற கருத்தை விதைக்க முடியும் என்று கருதுகிறார்களோ என்னவோ தெரியவில்லை.
வித்ரில் குனூத் ஓதுவது குறித்த பலவீனமான ஹதீஸ்கள் குறித்து நாம் பேசத் தேவை இல்லை. எது ஆதாரப்பூர்வமானது என்று நாம் கருதுகிறோமோ அதற்கு எதிராக எடுத்து வைக்கப்படும் விமர்சனங்கள் பற்றி மட்டுமே நாம் ஆய்வு செய்கிறோம்.

1625 حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ السَّلُولِيِّ عَنْ أَبِي الْحَوْرَاءِ عَنِ الْحَسَنِ بْنِ عَلِيٍّ قَالَ عَلَّمَنِي رَسُولُاللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَلِمَاتٍ أَقُولُهُنَّ فِي قُنُوتِ الْوَتْرِ اللَّهُمَّ اهْدِنِي فِيمَنْ هَدَيْتَ وَعَافِنِي فِيمَنْ عَافَيْتَ وَتَوَلَّنِي فِيمَنْ تَوَلَّيْتَ وَبَارِكْ لِي فِيمَاأَعْطَيْتَ وَقِنِي شَرَّ مَا قَضَيْتَ فَإِنَّكَ تَقْضِي وَلَا يُقْضَى عَلَيْكَ إِنَّهُ لَا يَذِلُّ مَنْ وَالَيْتَ تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ  رواه أحمد

ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்ருடைய குனூத்தில் ஓதுவதற்காக சில வார்த்தைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு கற்றுத் தந்தார்கள். (அந்த வார்த்தைகளாவன)
அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த. வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த. வகினீ ஷர்ர மாகலய்த்த. ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. தபாரக்க ரப்பனா வதஆலைத்த.
நூல் : அஹ்மத் 1625

மேற்கண்ட ஹதீஸ் வித்ரில் குனூத் ஓதுவது குறித்து தெளிவாகப் பேசுகிறது. இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று நாம் கருதுகிறோம்.
மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் வாதிடுகின்றனர். அவ்வாறு வாதிடக் கூடியவர்கள் எடுத்து வைக்கும் காரணங்களைப் பார்ப்போம்.
மேற்கண்ட ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றிய விபரம் வருமாறு

1-   ஹஸன் பின் அலி (ரலி)
2-   அபுல் ஹவ்ரா
3-   புரைத் பின் அபீ மர்யம்
4-   யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்
5-   வகீவு

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பேரர் ஹஸன் (ரலி) அவர்கள் இதை அபுல் ஹவ்ரா என்பவருக்கு அறிவிக்கிறார்.

அபுல் ஹவ்ரா என்பவர் இதை புரைத் பின் அபீ மர்யமுக்கு அறிவிக்கிறார்.
புரைத் பின் அபீ மர்யம் இதை யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பவருக்கு அறிவிக்கிறார்

யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பார் வகீவு என்பாருக்கு அறிவிக்கிறார்.
வகீவு என்பாரிடம் நூலாசிரியர் இமாம் அஹ்மத் அவர்கள் நேரடியாகக் கேட்டு பதிவு செய்துள்ளார்கள்.

மேற்கண்ட அறிவிப்பாளர்களில் ஒருவரோ, பலரோ பலவீனமாக இருந்தால் இந்த ஹதீஸ் பலவீனமாகி விடும். யாரும் பலவீனமாக இல்லாவிட்டால் இந்த ஹதீஸ் பலவீனமாகாது.

இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிடக் கூடியவர்கள் மேற்கண்ட அறிவிப்பாளர்களில் யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பவரை மட்டுமே பலவீனமானவர் எனக் கூறுகின்றனர். மற்றவர்களைப் பலவீனர்கள் எனக் கூறவில்லை. எனவே யூனுஸ் பின் இஸ்ஹாக் பலவீனமானவரா? இல்லையா? என்பதை நாம் முடிவு செய்து விட்டால் இந்த ஹதீஸின் தரம் குறித்து சரியான முடிவுக்கு நாம் வந்து விடலாம்.

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பலவீனமானவரா?
ஒரு அறிவிப்பாளர் பற்றி முடிவுக்கு வருவது என்றால் அவரைப் பற்றி அறிஞர்கள் செய்துள்ள எல்லா விமர்சனங்களையும் எடுத்துக்காட்டி அந்த விமர்சனங்களில் முரண்பாடு இருந்தால் அவற்றில் எது சரியானது என்று ஆய்வு செய்து காரண காரியங்களோடு விளக்குவது தான் ஆய்வு செய்யும் சரியான முறையாகும். மேற்கண்டவாறு விமர்சனம் செய்தவர்கள் இந்த நாணயமான முறையைக் கையாளாமல் யூனுஸ் பின் இஸ்ஹாக் அவர்கள் குறித்து செய்யப்பட்ட விமர்சனங்களில் அவரைக் குறை கூறும் இரண்டு விமர்சனங்களைத் தேடிப்பிடித்து ஆய்வை முடிவுக்குக் கொண்டு வந்து விட்டனர்.

இவர்கள் அணுகிய இந்த முறையில் புஹாரியின் அறிவிப்பாளர்களை ஆய்வு செய்யப் புகுந்தால் புகாரியில் பல நூறு ஹதீஸ்களைப் பலவீனம் என்று முடிவு செய்து விடலாம். புஹாரியின் அறிவிப்பாளர்களில் பலரைக் குறித்து இது போன்ற ஒன்றிரண்டு விமர்சனங்கள் இருக்கத் தான் செய்கின்றன.

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்கைப் பல அறிஞர்கள் பாராட்டிக் கூறியுள்ளனர்.  

وعن عبد الرحمن بن مهدى لم يكن به بأس    مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308)

யூனுஸ் பின் இஸ்ஹாக் என்பவரிடம் குறையேதும் இல்லை என்று அப்துர்ரஹ்மான் பின் மஹ்தீ கூறுகிறார்.

وعن يحيىثقة.  (مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308)

யஹ்யா பின் முயீன் அவர்கள் இவர் நம்பகமானவர் என்று கூறியுள்ளார்.
قلتفيونس بن أبي إسحاق أحب إليك أو إسرائيل فقالكل ثقة    (تاريخ ابن معين - الدارمي ص 72)

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் உங்களுக்கு விருப்பமானவரா? அல்லது இஸ்ராயீல் உங்களுக்கு விருப்பமானவரா? என்று கேட்ட போது இருவருமே நம்பகமானவர்கள் தான் என்று யஹ்யா பின் முயீன் விடையளித்தார்கள்   (நூல்: தாரீக் இப்னு முயீன்)

قال بن معين ليس به بأس  (تهذيب التهذيب (11 381)

இவரிடம் குறை இல்லை என்று இப்னு மயீன் கூறியுள்ளார்  (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் :11 பக்கம் : 381)

1621 يونس بن أبي إسحاق ثقة ليس به بأس قاله بن معين (الجرح والتعديل - أبو حاتم الرازي (9 243)

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் நம்பகமானவர். அவரிடம் குறையேதும் இல்லை என இப்னு மயீன் கூறியதாக இமாம் அபுஹாதிம் தன்னுடைய நூலான அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற நூலில் கூறியுள்ளார்.

 وقال النسائىليس به بأس  (مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308)
இவரிடம் குறையேதும் இல்லை என்று நஸயீ கூறுகிறார்.
وقال ابن عدىله أحاديث حسان  (مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308)

இவர் அழகிய பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார் என்று இப்னு அதீ கூறுகிறார்.

وقال أبو أحمد بن عدي (1): له أحاديث حسان، وروى عنه الناس وإسرائيل بن يونس ابنه، وعيسى بن يونس ابنه وها أخوان، وهمأهل بيت العلم، وحديث الكوفة عامته يدور عليهم  (هذيب الكمال للمزي (2 493)

இவர் அழகிய பல ஹதீஸ்களை அறிவித்துள்ளார். இவரிடமிருந்து (அதிகமான) அறிவிப்பாளர்களும் அவருடைய மகன்களான இஸ்ராயீல் இப்னு யூனுஸ், ஈஸா இப்னு யூனுஸ் ஆகியோரும் அறிவித்துள்ளனர். இவர்கள் கல்வியின் வீட்டினர் ஆவர்.கூஃபாவாசிகளின் ஹதீஸ்களில் பெரும்பாலானவை இவர்களைத் தான் சுற்றுகிறது என இப்னு அதீ கூறுகிறார். (தஹ்தீபுல் கமால்)

وذكره ابن حبان فى الثقات،  (مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308) 
இப்னு ஹிப்பான் இவரை நம்பகமானவர் பட்டியலில் சேர்த்துள்ளார்.
وقال بن شاهين في الثقات (تهذيب التهذيب (11 381)

இப்னு ஷாஹீன் இவரை நம்பகமானவர்களில் உள்ளவர் என்று கூறியுள்ளார்
(தஹ்தீபுத் தஹ்தீப்)

باب يونس (2062) يونس بن أبي إسحاق ثقة وقال مرة جائز الحديث   معرفة الثقات - العجلي (2 37)
யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் என்பார் நம்பகமானவர் என்றும் மற்றொரு சந்தர்ப்பத்தில் இவரது ஹதீஸ்கள் செல்லத் தக்கவை என்றும் அஜலீ கூறுகிறார்.
(மஃரிபதுஸ் ஸிகாத்)

وكان ثقة إن شاء الله تعالى  (تهذيب التهذيب (11 381)
அல்லாஹ் நாடினால் இவர் நம்பகமானவராகி விட்டார் என இப்னு ஹஜர் கூறியுள்ளார்.
(தஹ்தீபுத் தஹ்தீப்)

وقال الساجي صدوق كان يقدم عثمان على علي وضعفه بعضهم (تهذيب التهذيب (11 381)
இவர் உண்மையாளர். உஸ்மானை விட அலியை முற்படுத்துபவராக இருந்தார். இவரைச் சிலர் பலவீனர் எனக் கூறியுள்ளனர்.
(தஹ்தீபுத் தஹ்தீப்)

قال الحاكم : لست أعلم بين أئمة هذا العلم خلافا على عدالة يونس بن أبي إسحاق  (_المستدرك - (ج 2  ص 187)
யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் நம்பகத் தன்மையின் மீது ஹதீஸ் கலை அறிஞர்களின் கருத்து வேறுபாட்டை நான் அறிந்ததில்லை என இமாம் ஹாகிம் கூறியுள்ளார்.
(முஸ்தத்ரக்)

روى له البخارى فى كتاب القراءة خلف الإمام،.  (مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308)
இமாமுக்குப் பின்னால் ஓதுதல் என்ற நூலில் புகாரி இமாம் இவரது அறிவிப்பைப் பதிவு செய்துள்ளார்கள்.
(மகானில் அக்யார்)

இப்படி பல அறிஞர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் நம்பகத் தன்மையைப் பாராட்டியுள்ளனர்.

இவரைப் பற்றி நாம் சரியான முடிவுக்கு வருவது என்றால் அவரைப் பாராட்டும் இந்த விமர்சனங்களுடன் அவரைக் குறை கூறும் விமர்சனங்களை இணைத்துப் பார்த்து காரண காரியங்களின் அடிப்படையில் தான் முடிவு செய்தாக வேண்டும்.

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி குறை கூறிய அறிஞர்கள்.

அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனம்

இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி குறை கூறியுள்ளார்கள்.
. وقال أبو حاتمكان صدوقًا إلا أنه لا يحتج بحديثه  (مغانى الأخيار فى شرح أسامى رجال معانى الآثار (5 308) 
இவர் உண்மையாளராவார். என்றாலும் இவருடைய ஹதீஸ்களைக் கொண்டு ஆதாரம் பிடிக்கப்படாது
(மகானில் அக்யார்) 

யூனுஸ் விசயத்தில் இமாம் அபூ ஹாத்திம் அவர்களின் விமர்சனம் ஏற்றுக் கொள்ள முடியாததாகும். ஏனென்றால் இதற்கு நேர் மாற்றமாக யூனுஸ் நம்பகமானவர் என்றும் இமாம் அபூ ஹாத்திம் அவர்கள் கூறியுள்ளார்கள்.

1621 يونس بن أبي إسحاق ثقة ليس به بأس قاله بن معين (الجرح والتعديل - أبو حاتم الرازي (9 243)

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் நம்பகமானவர். அவரிடம் குறையேதும் இல்லை. இதை இப்னு மயீன் கூறியுள்ளார் என்று இமாம் அபுஹாதிம் தன்னுடைய நூலான அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற நூலில் கூறியுள்ளார்.

எனவே ஒரே அறிவிப்பாளரைப் பற்றி இமாம் அபூ ஹாத்திம் முரண்பாடான இரண்டு விமர்சனங்களைக் கூறியுள்ளதால் இரண்டு விமர்சனங்களுமே ஏற்றுக் கொள்ளத்தக்கல்ல.எனவே பிற அறிஞர்களின் விமர்சனங்களை வைத்துத் தான் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்கைப் பற்றி நாம் முடிவு செய்ய வேண்டும்.  

இமாம் அஹ்மத் பின் ஹன்பலின் விமர்சனம்
யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய அறிவிப்புகளை பலவீனம் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்புகள் மட்டும் தான் பலவீனமானவை. ஏனைய அறிவிப்பாளர்கள் வழியாக அவர் அறிவித்தால் அந்த ஹதீஸ் பலமானதாகும். வித்ரு குனூத் சம்பந்தமாக வரக்கூடிய ஹதீஸ் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கவில்லை. எனவே அது ஸஹீஹான ஹதீஸாகும் என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.

பின்வரும் காரணங்களைக் கூறி சிலர் இதை மறுக்கின்றனர்.
தனது தந்தை வழியாக யூனுஸ் அறிவிப்பவை மட்டும் தான் பலவீனமானவை என்று கூறுவதாக இருந்தால் அதற்குரிய தனிப்பட்ட காரணம் இருக்க வேண்டும்

இமாம் அஹ்மத் பின் ஹம்பல் இப்படி கூறினாலும் மற்ற அறிஞர்கள் இவர் தனது தந்தை வழியாக அறிவிப்பதையும் மற்றவர்கள் வழியாக அறிவிப்பதையும் விமர்சனம் செய்துள்ளதால் இவரது அறிவிப்புகள் அனைத்துமே பலவீனமானவை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
எனவும் அவர்கள் வாதிடுகின்றனர்.

மேற்கண்ட இரண்டு வாதங்களுமே தவறானவையாகும்.
இவர் தனது தந்தை வழியாக அறிவிக்கும் ஹதீஸ்களில் மட்டும் தான் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறுவதற்கு தனிப்பட்ட காரணம் உள்ளது. இவர் அறிவித்த ஏராளமான அறிவிப்புகளை ஆய்வு செய்த அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவர் தனது தந்தை வழியாக அறிவிப்பவைகளில் மட்டுமே குறைபாடு உள்ளதைக் கண்டறிந்து தான் இவ்வாறு சொல்கிறார்கள். 

இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி பொதுவாகச் சில விமர்சனங்களைச் செய்துள்ளார்கள்.

3424   يُونُس بْن أَبِي إِسْحَاق قَالَ حَدِيثه حَدِيث مُضْطَرب  (العلل ومعرفة الرجال لأحمد رواية ابنه عبد الله (2 519)

எனது தந்தையிடம் யூனுஸ் இப்னு  இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் அவரது அறிவிப்புக்கள் குழப்பமுள்ளவை என பதிலளித்தார்கள்.

سألت أبي عن عِيسَى بْن يُونُس فَقَالَ عن مثل عِيسَى يسأل قلت فأبوه قَالَ كذا وكذا  (الكامل في ضعفاء الرجال (8 526 )

எனது தந்தையிடம் யூனுஸ் இப்னு இஸ்ஹாக் பற்றிக் கேட்டேன். அதற்கவர் இப்படிப்பட்டவர் இப்படிப்பட்டவர் எனப் பதிலளித்தார்கள். 

இந்த வார்த்தை இமாம் அஹ்மத் அவர்கள் ஒருவரைப் பலவீனமானவர் என்பதைக் குறிக்கப் பயன்படுத்தும் வார்த்தையாகும். 

இப்படி பொதுவாக யூனுஸ் அவர்களை விமர்சனம் செய்த அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் தனது தந்தை வழியாக அறிவிப்பவை மட்டுமே பலவீனமானவை எனவும் கூறியுள்ளனர். 

ஒரு பேரீச்சம்பழத்தின் சிறு பகுதியைத் தர்மம் செய்தாவது நரகில் இருந்து காத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு நபி மொழி உள்ளது. இந்த நபி மொழியை அறிவிக்கும் போது ஒரு அறிவிப்பாளாரை விட்டு விட்டு அறிவித்துள்ளார் என்பதே இதற்குக் காரணமாகும்.

அதாவது இந்த ஹதீஸை யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பின்வருமாறு அறிவிக்கிறார்.

நபிகள் நாயகம் (ஸல்)
அதீபின் ஹாத்திம் (ரலி)
அபூ இஸ்ஹாக்

என்ற அறிவிப்பாளர் வரிசைப்படி அறிவிக்கிறார்.
இதே ஹதீஸை சுஃப்யான் பின் உயைனா, ஷுஃபா ஆகிய இருவரும் பின்வரும் அறிவிப்பாளர் வரிசையில் அறிவிக்கிறார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்)
அதீபின் ஹாத்திம் (ரலி)
அப்துல்லாஹ் பின் மஃகில்
அபூ இஸ்ஹாக் 

இரண்டு அறிவிப்பாளர் வரிசைக்கும் இடையே உள்ள வித்தியாசத்தைக் கவனியுங்கள்.

அபூ இஸ்ஹாக் என்பவர் அதீபின் ஹாதிமிடம் நேரில் கேட்டது போல் யூனுஸின் அறிவிப்பு உள்ளது. ஆனால் சுப்யான், ஷுஃபா ஆகியோர் அபூ இஸ்ஹாக் என்பவர் மஃகில் என்பவரிடம் கேட்டு மஃகில் என்பவர் தான் அதீ பின் ஹாதமிடம் கேட்டார் என்று உள்ளது.

இதில் இருந்து யுனுஸ் ஒரு அறிவிப்பாளரை இடையில் விட்டு விட்டார் என்பது தெரிகிறது 

இந்தக் காரணத்தைத் தான் அஹ்மத் பின் ஹம்பலும் யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் அவர்களும் ஒரே மாதிரியாகக் கூறுகிறார்கள்.

தமது தந்தை வழியாக அறிவிக்கின்ற இந்த அறிவிப்பில் ஒரு அறிவிப்பாளரை விட்டுவிட்ட காரணத்தினால் யூனுஸ் அவர்களிடம் கவனமின்மை உள்ளது என யஹ்யா அல்கத்தான் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

ஆனால் இந்த விமர்சனம் சரியானது அல்ல. குறிப்பிட்ட ஒரு ஹதீஸில் ஒரு அறிவிப்பாளரை ஒருவர் விட்டு விட்ட காரணத்தால் அவர் முற்றாகப் புறக்கணிக்கப்பட மாட்டார். அந்த ஒர் ஹதீஸ் தான் புறக்கணிக்கப்பட வேண்டும். யூனுஸ் பின் இஸ்ஹாக் அவர்களின் மனன சக்தி நம்பகத் தன்மை ஆகியவைகளுக்கு பல மேதைகள் நற்சான்று தந்திருக்கும் போது ஒரு ஹதீஸில் அவர் தவறாகக் கூறி விட்டார் என்பதற்காக அவரது அனைத்து ஹதீஸ்களையும் புறக்கணிக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியாது.

எனவே இரண்டு அறிஞர்கள் என்ன காரணத்துக்காக குறை கூறினார்கள் என்பதை விபரமாக ஆராயாமல் மாற்றுக் கருத்துடையவர்கள் தவறாகக் கூறியுள்ளனர் என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

நாம் கூறியதற்கான ஆதாரம் தஹ்தீபுல் கமால் தத்தீபுத் தஹ்தீப் ஆகிய நூல்களில் உள்ளது. அதைக் கீழே காண்க.

. وقال عبدالله بن أحمد بن حنبل، عن أبيهحدثنا يحيى بن سعيد، قالكان يونس بن أبي إسحاق يقولحدثنا أبو إسحاق، قالسمعتعدي بن حاتم عن النبي صلى الله عليه وسلم: ” اتقوا النار ولو بشق تمرة ”.وحدثنا سفيان وشعبة عن أبي إسحاق، عن عبدالله بن معقل،عن عدي بن حاتم، يعني بهذا الحديث (تهذيب الكمال للمزي (2 493)

وقال صالح بن أحمد بن حنبل (1)، عن علي ابن المدينيسمعت يحيى، وذكر يونس بن أبي إسحاق، فقالكانت فيه غفلة وكانت فيهسجية، كان يقولحدثني أبي، قالسمعت عدي ابن حاتم: ” اتقوا النار ولو بشق تمرة ” قال يحيىوهذا حدثنا سفيان وشعبة عن أبيإسحاق، عن ابن معقل، عن عدي بن حاتمقال يحيىوكانت فيه غفلة.   (تهذيب الكمال للمزي (2 493)

யூனுஸ் பின் இஸ்ஹாக் அவர்கள் ஒரு குறிப்பிட்ட ஹதீஸில் தவறாகக் கூறி விட்டார்என்பதற்காக அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் ஒட்டு மொத்தமாகப் புறக்கணிக்க வேண்டும் என்று கூறி இருந்தாலும் அது ஏற்கத்தக்கது அல்ல. ஓரிரு ஹதீஸ்களில் தவறாகக் கூறாத அறிவிப்பாளர்கள் அரிதாகவே இருப்பார்கள். இப்படி இருக்கும் அனைவரையும் ஒட்டு மொத்தமாகப் பலவீனர் பட்டியலில் சேர்க்க இந்த ஆய்வாளர்கள் தயாராக இருக்கிறார்களா என்பதைத் தெளிவுபடுத்தட்டும்.
மேலும் அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் கூட ஒட்டு மொத்தமாக அவரைக் குறை கூறவில்லை. மாறாக யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தனது தந்தையாகிய அபூ இஸ்ஹாக் மூலம் அறிவிப்பதில் தான் பிரச்சனை உள்ளது மற்றவர்கள் வழியாக அறிவிப்பதில் அல்ல என்று அஹ்மத் பின் ஹம்பல் கூறியதை நான் கேட்டேன் என்று அபூபக்ர் அல் அஸ்ரம் அவர்களும் அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹானீ அவர்களும் கூறுகிறார்கள்.

وقال أبو بكر الاثرمسمعت أبا عبدالله، وذكر يونس بن أبي إسحاق فضعف حديثه عن أبيهوقالحديث إسرائيل أحب إلي منه (هذيبالكمال للمزي (2 493)

யூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவராவார் எனவும் அஹ்மத் கூறினார்..

(தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 11 பக்கம் : 381)

قال حدثنا أحمد بن محمد بن هاني قال سمعت أبا عبد الله وذكر يونس بن أبي إسحاق وضعف حديثه عن أبيه وقال حديث إسرائيل أحبإلي منه  (ضعفاء العقيلي - (ج 4  ص 457)

யூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவராவார் என இமாம் அஹ்மத் கூற செவியேற்றதாக அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹானீ கூறுகிறார்
(லுஅஃபாவுல் வுகைலி)

யூனுஸ் மற்றும் இஸ்ராயீல் ஆகிய இருவரில் அபூ இஸ்ஹாக்கிடமிருந்து  யாருடைய அறிவிப்பு சிறந்தது என்று கேட்கும் போது மேற்கண்ட பதிலை இமாம் அஹ்மத் கூறவில்லை. அப்படி இருந்தால் தான் இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் பலவீனப்படுத்தவில்லை என்ற கருத்து உண்மையாகும்.

மாறாக இமாம் அஹ்மத் அவர்கள் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகள் பலவீனம் என்று கூறிவிட்டு  அத்துடன் இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவர் என அஹ்மத் அவர்கள் சேர்த்துக் கூறுகிறார்கள்.

எனவே அஹ்மத் அவர்கள் பொத்தாம் பொதுவாக யூனுஸினுடைய அனைத்து அறிவிப்புகளையும் பலவீனப்படுத்தவில்லை. மாறாக அவர் தனது தந்தை வழியாக அறிவிக்கின்றவைகளை மட்டும் தான் பலவீனப்படுத்தியுள்ளார் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது. 

தந்தை வழியாக அறிவிப்பதை மட்டும் பலவீனப்படுத்த சிறப்பான காரணமும் உள்ளது. அதாவது யூனுஸ் அவர்கள் மற்றவர்களிடம் இருந்து அறிவிக்கும் போது தான் நேரடியாக கேட்டு அறிவிக்கிறார். ஆனால் தந்தை வழியாக அறிவிக்கும் போது தந்தை எழுதி வைத்த நூலில் இருந்து அறிவிக்கிறார்.

قال احمد بن حنبل يونس بن أبى إسحاق حديثه فيه زيادة على حديث الناس قلت يقولون انه سمع في الكتاب فهو أتم قال إسرائيل ابنهقد سمع من أبى إسحاق وكتاب فلم يكن فيه زيادة مثل ما يزيد يونس  (الجرح والتعديل - (ج 9  ص 243(

அபூதாலிப் கூறுகிறார் : யூனுஸ் உடைய ஹதீஸில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட சில அதிகப்படியான விசயங்கள் உள்ளன என இமாம் அஹ்மத் பின் ஹன்பல் கூறினார்கள். அவர் தன் தந்தையின் புத்தகத்திலிருந்து செவியேற்றுள்ளார். அது முழுமையானது என்று அறிஞர்கள் கூறுகிறார்களே என நான் கூறினேன். அதற்கு இமாம் அஹ்மத் அவர்கள் அவருடைய மகன் இஸ்ராயீலும் அபூ இஸ்ஹாக்கிடமிருந்தும் அவருடைய புத்தகத்திலிருந்தும் செவியேற்றுள்ளார். அதில் யூனுஸ் அதிகப் படுத்தியிருப்பதை போன்று அதிகப்படியான விசயங்கள் இல்லையே என்று கூறினார்கள்.

யூனுஸ் உடைய ஹதீஸ்களில் பிற அறிவிப்பாளர்களின் ஹதீஸை விட அதிகப்படியான வாசகங்கள் உள்ளது என பொதுவாகக் கூறிவிட்டு யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கின்ற அறிவிப்புகளை மட்டும் இமாம் அஹ்மத் அவர்கள் குறிப்பாக்கி கூறியிருப்பதை மேற்கண்ட விமர்சனத்திலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. 

நாம் மட்டுமல்ல பல ஹதீஸ்களை அறிஞர்களும் இந்தக் கருத்தைக் கூறியுள்ளார்கள்.

وقال أبو بكر الأثرم : سمعت أبا عبد الله ( يعني أحمد بن حنبل ) وذكر يونس بن أبي إسحاق ، فضعف حديثه ، وقال : ” حديثإسرائيل أحب إلي منه ” ( 1084)قلت : فهذا تضعيف ليونس مقارنة بابنه إسرائيل عن أبي إسحاق خاصة ، وليس ضعفاً مطلقاً ، فلايصح القول : يونس ضعيف عند أحمد مثلاً
) تحرير علوم الحديث (ج 1 ص 308 )

யூனுஸ் தன்னுடைய தந்தை வழியாக அறிவிக்கும் செய்திகளை இமாம் அஹ்மத் பலவீனமாக்குகிறார். (யூனுஸின் மகன்) இஸ்ராயீல் அவரை விட எனக்கு விருப்பமானவராவார் என இமாம் அஹ்மத் கூறியதாக அபூ பக்கர் அல்அஸ்ரம் கூறுகிறார்.

மேற்கண்ட கூற்றிற்கு விளக்கமாக தஹ்ரீருல் உலூம் என்ற நூலாசிரியர் பின்வருமாறு கூறுகிறார்.

யூனுஸ் அவர்களை அவருடைய மகன் இஸ்ராயீலுடன் ஒப்பிட்டு பலவீனப்படுத்துதல் என்பது அபூ இஸ்ஹாக் வழியாக வருகின்ற அறிவிப்புகளுக்கு மட்டும் தான். பொதுவாக பலவீனப்படுத்துதல் என்பது கிடையாது. (பொதுவாக அனைத்து அறிவிப்புகளிலும்) இமாம் அஹ்மதிடம் யூனுஸ் பலவீனமானவர் என்று கூறுவது சரியானது கிடையாது.
(தஹ்ரீரு உலூமுல் ஹதீஸ்)

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் குறித்த அனைத்து விமர்சனங்களையும் ஆய்வு செய்து விட்டு இப்னு ரஜப் அவர்கள் பின் வருமாறு கூறுகிறார்கள்.

ومنهم يونس بن أبي إسحاق :ففي تاريخ الغلابي : (( كان يونس بن أبي إسحاق مستوي الحديث في غير أبي إسحاق مضطرباً في حديثأبيه ))  (شرح علل الترمذي لابن رجب - (ج 1  ص 382(

யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தம் தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய ஹதீஸ்கள் தவிர மற்ற ஹதீஸ்களில் சரியானவர் ஆவார். இவர் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் ஹதீஸ்களில் தடுமாறியுள்ளார்.
(ஷரஹ் இலலுத் திர்மிதி பாகம் : 1 பக்கம் : 382)

மாபெரும் ஹதீஸ்கலை மேதையான இமாம் அலிய்யிப்னுல் மதீனீ அவர்கள் யூனுஸ் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்பை சரியான அறிவிப்பு என்று உறுதிப்படுத்தியுள்ளார்கள்.

وَقَالَ قَبِيصَة بْن عُقْبَة : جَاءَنِي عَلِيّ بْن الْمَدِينِيّ فَسَأَلَنِي عَنْ هَذَا الْحَدِيث ؟ فَحَدَّثْته بِهِ عَنْ يُونُس بْن أَبِي إِسْحَاق عَنْ أَبِي بُرْدَة عَنْ أَبِيمُوسَى لَمْ يَذْكُر فِيهِ أَبَا إِسْحَاق فَقَالَ : اِسْتَرَحْنَا مِنْ خِلَاف أَبِي إِسْحَاق . قُلْت : وَكَذَلِكَ رَوَاهُ الْحَسَن بْن مُحَمَّد بْن الصَّبَّاح عَنْ أَسْبَاط بْنمُحَمَّد عَنْ يُونُس عَنْ أَبِي بُرْدَة عَنْ أَبِي مُوسَى ذَكَرَهُ الْحَاكِم فِي الْمُسْتَدْرَك فَهَذَا وَجْه .( تهذيب سنن أبي داود وإيضاح مشكلاته - (ج 1 ص 286)

கபீஸா பின் உக்பா கூறுகிறார் : அலியிப்னுல் மதீனீ என்னிடம் வந்தார். (லா நிகாஹ இல்லா பி வலிய்யின் பொறுப்பாளர் இல்லாமல் பெண் திருமணம் செய்யலாகாது - என்ற) அந்த ஹதீஸைப் பற்றி என்னிடம் கேட்டார். நான்

அபூ மூஸா
அபூ புர்தா
யூனுஸ்

என்ற அறிவிப்பாளர் வரிசையில் உள்ள ஹதீஸை கூறினேன்.
அபூ மூஸா
அபூ புர்தா
அபூ இஸ்ஹாக்
யூனுஸ்

என்ற அறிவிப்பை நான் கூறவில்லை.
அதாவது அபூ இஸ்ஹாக்கை நான் குறிப்பிடவில்லை. அதற்கு அலிய்யிப்னுல் மதீனீ அவர்கள்: அபூ இஸ்ஹாக் தொடர்பான கருத்து வேறுபாட்டிலிருந்து நாம் நிம்மதி பெற்று விட்டோம் என்று கூறினார்.
(தஹ்தீப் சுனன் அபீதாவூத்)

மேற்கண்ட ஹதீஸை யூனுஸ் இரு வழிகளில் அறிவித்துள்ளார். ஒன்று தன் தந்தை வழியாக  அறிவித்தது. மற்றொன்று தன் தந்தை வழியாக இல்லாமல் நேரடியாக அபூ புர்தா வழியாக அறிவித்தது.

இந்த இரண்டு வழிகளில் யூனுஸ் தனது தந்தையாகிய அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிக்காத அறிவிப்பைக் கேட்ட போது நல்ல வேளை அபூ இஸ்ஹாக் வழியாக இதை அறிவிக்கவில்லை. இது நிம்மதியைத் தருகிறது எனக் கூறுகிறார்.

ஷுஃபாவுடைய விமர்சனம் 
யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களுடைய அனைத்து அறிவிப்புகளையும் பலவீனப்படுத்துவதற்கு ஆதாரமாக யூனுஸ் பற்றிய ஷுஃபா உடைய விமர்சனத்தைச் சிலர் ஆதாரம் காட்டி பின்வருமாறு வாதிட்டுள்ளனர்.

18- وذكر له يونس بن أبي إسحاق ، فقال : لا ينتهي يونس ، حتى يقول : سمعت البراء .قال لي أبو زُرْعَة : فانظر كيف يرد أمره  (سؤالات البرذعي لأبي زرعة الرازي ومعه كتاب أسامي الضعفاء له - ص 79)

இமாம் அபூ ஸுர்ஆ யூனுஸ் பற்றிக் கேற்கப்பட்ட போது நபித்தோழர் பராஃ இடம் கேட்டேன் என்று ஒரு நாள் சொல்லும் வரைக்கும் (அவரது தவறுகள்) தொடரும்.’ ‘எவ்வாறு அவரது அறிவிப்புக்கள் (இளகுவாக) நிராகரிக்கப்படுகிறது என்று அவதானியுங்கள் என ஒரு முறை எனக்குக் கூறினார். அறிவிப்பவர்: அவரது மாணவர் பர்தஈ 

யூனுஸ் அவர்களை எப்படியாவது பலவீனமாக்கி விட வேண்டும் என்பதற்காக அபூ சுர்ஆவுடைய விமர்சனத்திற்கு அடைப்புக் குறிக்குள் தமது கற்பனையை எல்லாம் கலந்து இவர்கள் அடித்து விட்டுள்ளனர்.

அதனுடைய சரியான மொழிபெயர்ப்பைக் காண்போம்.
யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் பற்றி கேட்கப்பட்ட போது : நான் (நபித்தோழர்) பராஃ இடம் செவியேற்றேன் என்று சொல்லும் வரை அவர் இறுதியடைய மாட்டார். அவரது விசயம் எப்படி மறுக்கப்படுகிறது என்று பார் எனக் கூறினார்.

இதனை அவரது மாணவர் பர்தஈ அறிவிக்கின்றார்.
ஒரு நாள் வரை அவரது தவறுகள் தொடரும் என்றெல்லாம் கூறுவது இவர்களாக மூலத்தில் இல்லாமல் சுயமாகச் சேர்த்துக் கொண்டவையாகும்.
பரா பின் ஆசிப்  வழியாக யூனுஸ் அவர்கள் அறிவிக்கின்ற அறிவிப்புகள் அனைத்தும் தனது தந்தை வழியாகச் செவியேற்றவை தான். அதிலும் குறிப்பாக நான் பராபின் ஆசிபிடம் செவியேற்றேன் என்று அவர் கூறுவது அவருடைய தந்தை வழியாக அறிவிக்கின்றவை தான்.

பின்வரும் ஆதாரத்தின் அடிப்படையிலும் இவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

 2088    يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عِيسَى قَالَ: حَدَّثَنَا بُنْدَارٌ قَالَ: قَالَ سَلْمُ بْنُ قُتَيْبَةَ: قَدِمْتُ مِنَ الْكُوفَةِ فَقَالَ لِيشُعْبَةُ مَنْ لَقِيتَ؟ قَالَ: لَقِيتُ فُلَانًا وَفُلَانًا وَلَقِيتُ يُونُسَ بْنَ أَبِي إِسْحَاقَ قَالَ: مَا حَدَّثَكَ؟ فَأَخْبَرْتُهُ فَسَكَتَ سَاعَةً وَقُلْتُ لَهُ قَالَ: حَدَّثَنَا بَكْرُ بْنُمَاعِزٍ قَالَ: فَلَمْ يَقُلْ لَكَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ  (الضعفاء الكبير للعقيلي4457)

ஸல்ம் இப்னு குதைபா கூறுகிறார் : கூஃபாவிலிருந்த நான் ஊர் திரும்பிய போதுயாரையெல்லாம் சந்தித்தீர்கள்என்று ஷுஃபா என்னிடம் கேட்டார். அதற்கு நான் இன்னார் இன்னாரைச் சந்தித்தேன். யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகையும் சந்தித்தேன் என்று கூறினேன். யூனுஸ் எவைகளை உமக்கு அறிவித்தார் என ஷுஃபா கேட்டார். நான் சிலவற்றைச் சொன்னேன். சற்று நேரம் அமைதியாக இருந்தார். தொடர்ந்து நான் எனக்கு பக்ர் இப்னு மாஇஸ் அறிவித்தார் என்று யூனுஸ் கூறியதாக சொன்னேன். அதற்கு அவர்கள் நபித்தோழர் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் அவருக்கு அறிவிப்புச் செய்ததாகச் சொல்வில்லையா? எனக் கேட்டார்கள்.

மேற்கண்ட ஷுஃபா அவர்களுடைய விமர்சனம் சரியானது என்று வைத்துக் கொண்டாலும் அபூ இஸ்ஹாக் வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை மட்டும் தான் ஷுஃபா பலவீனப்படுத்துகிறார் என்பதையே இது உறுதிப்படுத்துகிறது.

ஏனென்றால் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் வழியாக யூனுஸ் அவர்கள் அறிவிக்கின்ற அறிவிப்புகள் அனைத்தும் தனது தந்தை வழியாகச் செவியேற்றவை தான்.

இப்னு மஸ்வூத் அவர்களுடைய ஹதீஸ்களை தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக யூனுஸ் செவியேற்றிருக்கிறார் என்பதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது.

உதாரணமாக இப்னுமாஜா 1009, 1882, அஹ்மத் 4082 மற்றும் இன்ன பிற அறிவிப்புகள் அனைத்திலும் தனது தந்தை வழியாகவே யூனுஸ் அறிவித்திருக்கின்றார். எனவே சுஃபாவுடைய விமர்சனமும் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளில் மட்டுமே பலவீனமானவர் என்பதை உறுதிப்படுத்துகிறது.

மேலும் இமாம் அபூ அஹ்மதுல் ஹாகிம் அவர்கள்

وقال أبو أحمد الحاكم ربما وهم في روايته  ( تهذيب التهذيب (11 381)

சில நேரங்களில் இவருடைய அறிவிப்புகளில் சந்தேகம் ஏற்படும்
(தஹ்தீப்)

இப்னு ஹர்ராஷ் அவர்கள்

وقال ابن خراشفي حديثه لين.  ( ميزان الاعتدال - (ج 4  ص 483)

இவருடைய ஹதீஸில் பலவீனம் உள்ளது என்று பொதுவாக விமர்சித்துள்ளனர்.

இவர்களுடைய இந்த விமர்சனம் பொதுவானதாக இருந்தாலும் இமாம் அஹ்மத்,அலியிப்னுல் மதீனீ, ஆகியோர்; யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிப்பதில் மட்டும் தான் பலவீனம் உள்ளது என்று கூறியுள்ளதாலும், ஷுஃபா, அபூ சுர்ஆ ஆகியோரின் விமர்சனங்கள் தந்தை வழியாக அறிவிப்பவை மட்டும் தான் குறையுடையவை என்பதை உறுதிப்படுத்துவதாலும் இவர்களுடைய அந்த பொதுவான விமர்சனம் யூனுஸ் தனது தந்தை வழியாக அறிவிக்கக் கூடிய அறிவிப்புகளுக்கு மட்டும் தான்.

இப்படித் தான் ஹதீஸ் கலை ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளார்கள். இமாம் திர்மிதி அவர்கள் கூட யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தனது தந்தையல்லாத மற்றவர்கள் வழியாக அறிவிக்கும் அறிவிப்புகளை ஹஸன் ஸஹீஹ் என்ற சரியான ஹதீஸிற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அதனுடைய தரத்தை தெளிவு படுத்தியுள்ளார்கள். அதற்குச் சில சான்றுகளைத் தருகின்றோம்.

1628 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ عَنْ الْعَيْزَارِ بْنِ حُرَيْثٍ عَنْ أُمِّ الْحُصَيْنِالْأَحْمَسِيَّةِ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فِي حَجَّةِ الْوَدَاعِ وَعَلَيْهِ بُرْدٌ قَدْ الْتَفَعَ بِهِ مِنْ تَحْتِ إِبْطِهِ قَالَتْ فَأَنَا أَنْظُرُ إِلَىعَضَلَةِ عَضُدِهِ تَرْتَجُّ سَمِعْتُهُ يَقُولُ يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا اللَّهَ وَإِنْ أُمِّرَ عَلَيْكُمْ عَبْدٌ حَبَشِيٌّ مُجَدَّعٌ فَاسْمَعُوا لَهُ وَأَطِيعُوا مَا أَقَامَ لَكُمْ كِتَابَ اللَّهِ قَالَأَبُو عِيسَى وَفِي الْبَاب عَنْ أَبِي هُرَيْرَةَ وَعِرْبَاضِ بْنِ سَارِيَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رُوِيَ مِنْ غَيْرِ وَجْهٍ عَنْ أُمِّ حُصَيْنٍ  رواهالترمدي

1690 حَدَّثَنَا يُوسُفُ بْنُ عِيسَى حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ عَنْ الشَّعْبِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّصَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِسَ جُبَّةً رُومِيَّةً ضَيِّقَةَ الْكُمَّيْنِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ  رواه الترمدي

2730 حَدَّثَنَا سُوَيْدٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَقَ حَدَّثَنَا مُجَاهِدٌ قَالَ حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّىاللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي جِبْرِيلُ فَقَالَ إِنِّي كُنْتُ أَتَيْتُكَ الْبَارِحَةَ فَلَمْ يَمْنَعْنِي أَنْ أَكُونَ دَخَلْتُ عَلَيْكَ الْبَيْتَ الَّذِي كُنْتَ فِيهِ إِلَّا أَنَّهُ كَانَ فِي بَابِالْبَيْتِ تِمْثَالُ الرِّجَالِ وَكَانَ فِي الْبَيْتِ قِرَامُ سِتْرٍ فِيهِ تَمَاثِيلُ وَكَانَ فِي الْبَيْتِ كَلْبٌ فَمُرْ بِرَأْسِ التِّمْثَالِ الَّذِي بِالْبَابِ فَلْيُقْطَعْ فَلْيُصَيَّرْ كَهَيْئَةِ الشَّجَرَةِوَمُرْ بِالسِّتْرِ فَلْيُقْطَعْ وَيُجْعَلْ مِنْهُ وِسَادَتَيْنِ مُنْتَبَذَتَيْنِ يُوطَآَنِ وَمُرْ بِالْكَلْبِ فَيُخْرَجْ فَفَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ ذَلِكَ الْكَلْبُ جَرْوًالِلْحَسَنِ أَوْ الْحُسَيْنِ تَحْتَ نَضَدٍ لَهُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَفِي الْبَاب عَنْ عَائِشَةَ وَأَبِي طَلْحَةَ  رواهالترمدي

இதில் மற்றொரு கேள்வியையும் சிலர் எழுப்புகின்றனர். சுஃபா உடைய அறிவிப்பில் அல்லாஹும் மஹ்தினீ.... என்ற துஆவை கற்றுத் தந்துள்ளார்கள் என்று மட்டுமே இடம் பெற்றுள்ளது. வித்ர் என்ற வார்த்தையோ, குனூத் என்ற வார்த்தையோ இடம் இடம் பெறவில்லை.
ஷுஃபா என்பவர் மனனத் தன்மையில் மலை போன்றவர். அவருக்கு மாற்றமாக யூனுஸ் என்பவர் மேற்கண்ட துஆவை வித்ர் குனூத்தில் ஓத வேண்டும் என்று அறிவிப்பதால் யூனுஸ் உடைய அறிவிப்பு ஷாத் என்ற பலவீனமான நிலையை அடைகிறது எனக் கூறுகின்றனர்.

நம்பகமான ஒரு அறிவிப்பாளர் அவரை விட கூடுதல் நம்பகத் தன்மை உடைய ஒருவருக்கு முரணாக அறிவித்தால் நம்பகத் தன்மை குறைவாக உள்ளவரின் அறிவிப்பை ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது என்று கூறுவர்.

மேலும் ஒரு செய்தியை ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் அறிவித்து எல்லா மாணவர்களும் நம்பகத் தன்மையில் சமமாக இருந்து ஒருவர் மட்டும் ஏனைய மாணவர்களின் அறிவிப்புகளுக்கு முரணாக ஒரு செய்தியை அறிவித்தால் அந்தச் செய்தியையும் ஷாத் என்ற வகையைச் சார்ந்த பலவீனமான செய்தி என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் குறிப்பிடுவர்.
ஆனால் இந்தச் செய்தியும் ஷாத் என்ற பலவீனமான வகையில் சேராது.
ஒருவரின் அறிவிப்பில் துஆவைக் கற்றுத் தந்தார்கள் என்றும் மற்றொரு அறிவிப்பில் வித்ர் குனூத்தில் ஓதுவதற்காகக் கற்றுத் தந்தார்கள் என்றும் இடம் பெறுவது முந்தைய செய்திக்கு முரணானது அல்ல. தேவையான கூடுதல் விளக்கம் தான் இதில் இடம் பெற்றுள்ளது.

ஒருவரின் அறிவிப்பில் வித்ர் குனூத்தில் ஓதினார்கள் என்றம் மற்றொருவர் அறிவிப்பில் சுபுஹ் குனூத்தில் ஓதினார்கள் என்றும் அறிவித்திருந்தால் அதையே முரண்பாடு என்று சொல்லலாம்.

ஆனால் வித்ர் குனூத்தில் ஓதுவதற்கு கற்றுத் தந்தார்கள் என்பது கூடுதலான செய்தியே தவிர முரணான செய்தி அல்ல. மேலும் இந்தச் செய்தியில் தான் எங்கு ஓத வேண்டும் என்ற சரியான விளக்கம் இடம் பெற்றுள்ளது. எனவே வித்ரு குனூத்தில் ஓதுவதற்கு கற்றுத் தந்தார்கள் என்பது ஷாத் என்ற பலவீனமான வகையைச் சார்ந்தது அல்ல.

எனவே வித்ரில் குனூத் ஓத வேண்டும் என்று வருகின்ற ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்பது தான் நமது ஆய்வில் உறுதியாகின்றது,
அடுத்து இதே ஹதீஸ் குறித்து வேறு விதமான கருத்துக்களையும் சிலர் இலங்கையில் பரப்பி வருகின்றனர்.

அவர்கள் பரப்பும் கருத்து இது தான்.
புரைத் இப்னு அபீ மர்யம் வழியாக ஷுஃபாவின் அறிவிப்பு இப்னு குஸைமாவில் 1096 ல் பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நபியவர்களை நீங்கள் எவ்வாறு நினைவு கூறுகிறீர்கள்? என்று நான் ஹஸன் ரலியல்லாஹ் அவர்களைக் கேட்டேன். அதற்கு அவர் நபியவர்கள் எமக்குஅல்லாஹும்மஹ்தினீ பீமன் ஹதைத…” என்ற துஆவை ஓதுமாறு கற்றுத் தந்தார்கள்என்று கூறினார்.      அறிவிப்பவர்: அபுல் ஹவ்ரா

இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் இப்னு குஸைமா பின்வருமாறு குறிப்பிடுகிறார்:

صحيح ابن خزيمة لمحمد النيسابوري - (2 152 ولم يذكر القنوت ولا الوتر و شعبة أحفظ من عدد مثل يونس بن أبي إسحاق و أبوإسحاق لا يعلم أسمع هذا الخبر من بريد أو دلسه عنه اللهم إلا أن يكون كما يدعي بعض علمائنا أن كل ما رواه يونس عن من روىعنه أبوه أبو إسحاق هو مما سمعه يونس مع أبيه ممن روى عنه ولو ثبت الخبر عن النبي صلى الله عليه و سلم أنه أمر بالقنوت فيالوتر أو قنت في الوتر لم يجز عندي مخالفة خبر النبي ولست أعلمه ثابتا

வித்ரில் என்ற வார்த்தையோ குனூத் என்ற வார்த்தையோ ஷுஃபாவுடைய அறிவிப்பில் இல்லை. யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகைப் போன்ற பலரின் மனனத்தை விட ஷுஃபா மிக மனனமுள்ளவர். அபூஇஸ்ஹாக் அஸ்ஸபீஈ இந்தச் செய்தியை நேரடியாக புரைதிடமிருந்து கேட்டாரா அல்லது ஆசிரியரைச் சொல்லாமல் மயக்கமாக அறிவிக்கிறாரா என்றும் அறிய முடியவில்லை. அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈயின் ஆசிரியரும் யூனுஸ் இப்னு அபீ இஸ்ஹாகின் ஆசிரியரும் ஒரு அறிவிப்பில் ஒன்றாக இருந்தால் அபு இஸ்ஹாக் அஸ்ஸபீஈயி அந்த அறிவிப்பை குறிப்பிட்ட ஆசிரியரிடமிருந்து நேரடியாகக் கேட்டிருக்கிறார் என்று எமது அறிஞர்களில் சிலர் கூறுகின்றனர். அல்லாஹ்வே சில வேளைகளில் இந்தக் கூற்று உண்மையாக இருந்தாலே தவிர இந்த செய்தி ஆதாரமாக வாய்ப்பில்லை. நபியவர்கள் வித்ரில் குனூத் ஓதச் சொன்னார்கள். அல்லது ஓதினார்கள் என்று பலமான ஒரு ஹதீஸ் இருந்தால் நபியவர்களின் வழிமுறைக்கு மாற்றமாக நடக்க ஒரு போதும் நான் அனுமதிக்க மாட்டேன். நானறிந்த வகையில் அவ்வாறு எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் இல்லை.

இமாம் இப்னு குஸைமா அவர்கள் ஹிஜ்ரி 200களில் வாழ்ந்த மிகப்பெரும் ஹதீஸ்கலை அறிஞர்களில் ஒருவர். இவரின் பிரபல்யமான ஹதீஸ் கிரந்தங்களில் ஒன்றே ஸஹீஹ் இப்னு குஸைமா. இவர் சாபிஈ மத்ஹப் அறிஞர்களில் ஒருவர். அவர் இந்த ஹதீஸைப் பலமற்றது என்று தெளிவாக தனது நூலில் மேற்கண்டவாறு பதிந்துள்ளார்.

வித்ரில் குனூத் சம்பந்தமான ஹதீஸ்கள் எதுவும் ஆதாரப்பூர்வமானதல்ல. அல்லாஹும்மஹ்தினீ என்றாரம்பிக்கும் பிரார்த்தனையை நபியவர்கள் தனது பேரர்ஹஸனுக்குக் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே அதனை நாம் ரம்பனா ஆதினா பித்துன்யா…” போன்ற பொதுவான பிரார்த்தனைகளில் ஒன்றாக ஓதலாம். அதை வித்ரிலோ அல்லது வித்ருக் குனூத்திலோ ஓதுவது சம்பந்தமான அறிவிப்புகள் அனைத்தும் பலஹீனமானவைகள். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இது தான் அந்த விமர்சனம்.
யூனுஸ் பின் இஸ்ஹாக் மட்டுமின்றி இன்னும் பலரும் மேற்கண்ட ஹதீஸை அறிவித்துள்ளனர். குறிப்பாக ஷுஃபா அவர்கள் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக்கை விட பன்மடங்கு அதிக மனன சக்தி உள்ளவர். அவர் இந்த ஹதீஸை அறிவிக்கும் போது வித்ரில் என்ற வார்த்தையைக் கூறவில்லை. யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் தான் வித்ரில் என்ற வார்த்தையைக் கூறியுள்ளார். எனவே ஷுஃபா அவர்களின் அறிவிப்புக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பொதுவாக இதை ஓதலாமே தவிர வித்ரில் ஓதுவது சரியல்ல என்பது இவர்களின் வாதம்.

இவர்களின் இந்த வாதம் சுயமாக ஆய்வு செய்து கூறப்படவில்லை. இப்னு குஸைமா அவர்கள் கூறியதை இவர்கள் எடுத்துக் கூறியுள்ளனர். ஆனால் ஆய்வு செய்திருந்தால் இவர்கள் இப்னு குஸைமா தவறான தகவலை அடிப்படையாகக் கொண்டு வாதிட்டுள்ளார்என்பதை அறிந்திருப்பார்கள்.

ஷுஃபா அவர்கள் வித்ரில் என்ற வார்த்தையைக் கூறவில்லை என்று இப்னு குஸைமா கூறியது தவறாகும். வித்ரில் என்ற வார்த்தையை ஷுஃபா அவர்களும் அறிவித்துள்ளார்.அந்த அறிவிப்பு இப்னு குஸைமாவுக்குக் கிடைக்காததால் இப்படி கூறி விட்டார்.

2707 -
 حدثنا محمد بن محمد التمار حدثنا عمرو بن مرزوق أنا شعبة عن بريد بن أبي مريم : عن أبي الحوراء قال سمعت الحسنبن علي رضي الله عنه قال : علمني رسول الله صلى الله عليه و سلم أن أقول في الوتر : اللهم اهدني فيمن هديت وتولني فيمن توليتوعافني فيمن عافيت وبارك لي فيما أعطيت وقني شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك إنه لا يذل من واليت ولا يعز من عاديتتباركت وتعاليت (المعجم الكبير - (ج 3  ص 75)

ஹஸன் பின் அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் வித்ரில் ஓதுவதற்காக நபி (ஸல்) அவர்கள்
அல்லாஹூம் மஹ்தினீ ஃபீமன் ஹதய்த்த. வதவல்லனீ ஃபீமன் தவல்லய்த்த வஆஃபினி ஃபீமன் ஆஃபய்த்த வபாரிக்லீ ஃபீமா அஃதய்த்த வகினீ ஷர்ர மாகலய்த்த ஃபஇன்னக தக்லீ வலா யுக்லா அலைக்க. இன்னஹூ லாயதில்லு மன்வாலைத்த. வா யுஇஸ்ஸ மன் ஆதய்த்த  தபாரக்க வதஆலைத்த என்ற துஆவை கற்றுத் தந்தார்கள்.
நூல் : அல் முஃஜமுல் கபீர் (2707) பாகம் : 3 பக்கம் : 75

வித்ர் என்ற வார்த்தை இல்லாமல் ஷுஃஅபா அவர்களிடமிருந்து சில அறிவிப்புகள் வந்திருந்தாலும் மேற்கண்ட நம்பகமான அறிவிப்பாளர் வழியாக வித்ரில் ஓதுவதற்காக என்றும் வந்துள்ளது.
நம்பகமான ஒருவர் விளக்கமாக அறிவிப்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டியதாகும்.

ஆனால் இமாம் இப்னு குசைமா அவர்கள் ஷுஃஅபா அவர்களிடமிருந்து வித்ர் என்ற வார்த்தையோ குனூத் என்ற வார்த்தையோ எந்த அறிவிப்பிலும் வரவில்லை என்று கூறியுள்ளது தவறு என்பதை இதில் இருந்து அறியலாம்.

ஷுஅபா உடைய அறிவிப்பில் வித்ர் தொழுகையில் ஓதுவதற்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்று வந்துள்ள அறிவிப்பு இமாம் இப்னு குஸைமாவிற்குக் கிடைக்காததால் இவ்வாறு கூறியுள்ளார்கள். அவ்வாறு வருவது எனக்குத் தெரியவில்லை எனவும் கூறியுள்ளார்கள்.
ஷுஃபா உடைய அறிவிப்பில் வித்ர் தொழுகையில் ஓதுவதற்காகத் தான் கற்றுக் கொடுத்தார்கள் என்று வந்துள்ளது. அந்தச் செய்தியை நாம் மேலே குறிப்பிட்டுள்ளோம்.

ஒரு சிலர் மேற்கண்ட ஷுஃபா உடைய அறிவிப்பில் இடம் பெறும் அம்ர் பின் மர்சூக் என்ற அறிவிப்பாளரை பலவீனமானவர் என்ற விமர்சனம் செய்துள்ளனர். ஆனால் அவர்களுடைய அந்த விமர்சனம் தவறானதாகும்.
ஒரு வாதத்திற்கு அந்த விமர்சனங்கள் சரி என்று வைத்துக் கொண்டாலும் இமாம் புகாரி அவர்கள் அம்ர் பின் மர்சூக்கின் பல அறிவிப்புகளை துணைச் சான்றாக ஸஹீஹுல் புகாரியில் பதிவு செய்துள்ளார்கள்.

அதன் அடிப்படையில் யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் வழியா சரியான அறிவிப்பாளர் தொடரில் வித்ர் குனூத் பற்றி ஹதீஸ் வந்துள்ள காரணத்தினால் அம்ர் பின் மர்சூக் உடைய அறிவிப்பை துணைச் சான்றாக எடுத்துக் கொள்வதில் எந்தத் தவறும் கிடையாது. 

இமாம் இப்னு குஸைமா அவர்கள் இப்போது இருந்திருந்தால் இந்த ஆய்விற்குப் பிறகு தங்களுடைய கருத்தை மாற்றியிருப்பார்கள். ஏனென்றால் நபியவர்களிடமிருந்து உறுதியாக வந்து விட்டால் நான் அதற்கு முரண்பட மாட்டேன் என இமாமவர்கள் கூறியுள்ளார்கள்.

இமாம் இப்னு குஸைமாவின் ஆய்வை அப்படியே ஏற்று அதை மிகப் பெரும் ஆதாரமாகக்  கூறியவர்களும் தங்கள் கருத்தை மாற்றிக் கொள்வார்கள் என்றே நம்புகிறோம்.

எனவே வித்ர் தொழுகையில் குனூத் ஓதுவது தொடர்பான செய்தி பலமான ஆதாரப்பூர்வமான ஹதீஸ் என்பது உறுதியாகிறது.

சுஅபாவுடைய அறிவிப்பு, யூனுஸ் பின் அபீ இஸ்ஹாக் அவர்களின் அறிவிப்பு ஆகிய இரண்டு அறிவிப்புகளைக் கொண்டு இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Change Settings

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்