Pages

Tuesday, September 20, 2011

ஜும்ஆ  தொழுகையை  நபிவழியில்  நடத்துவோம்.
அன்பின்  இஸ்லாமிய  சகோதரர்களே ! உலக மக்கள்  அனைவருக்கும்  நேர் வழி காட்டியாக அனுப்பப்பட்ட  கடைசி  இறைத் தூதர்  நபிகள்  நாயகம் (ஸல்) அவர்கள்.  ஒவ்வொரு முஸ்லிமும்  தனது  வாழ்வை  எப்படி  அமைத்துக்கொள்ள  வேண்டும்  என்பதை  மிக  அழகாக நமக்குக்  காட்டித்  தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வும்  அவனுடைய  தூதர் (ஸல்) அவர்களும்  நமக்கு  எதையெல்லாம்  மார்க்கத்தின் பெயரால்  செய்யும்  படி  ஏவியிருக்கிறார்களோ  அவற்றை  மாத்திரம்  தான்  நாம்  செய்ய வேண்டும்.  எவற்றை  தவிர்ந்துகொள்ளும்  படி  ஏவியிருக்கிறார்களோ  அவற்றை  கண்டிப்பாக நாம்  தவிர்ந்து  நடக்க வேண்டும்.
இந்த  அடிப்படையில்  வௌ்ளிக்கிழமைகளில்  நாம்  நிகழ்த்தும்  ஜும்மாவின்  சட்டங்கள்  பற்றி நபியவர்கள் மிகத் தெளிவான  வழிகாட்டுதல்களை  நமக்கு  வழங்கியிருக்கிறார்கள். ஆனால் இன்று  நமக்கு  மத்தியில்  மார்க்கம்  பேசக் கூடிய  பலர்  இந்த  வழிமுறைகளை  மறந்து அல்லது  வேண்டுமென்று  மறைத்து  மார்க்கத்திற்கு  முரணான  காரியங்களை  ஜும்மாவின் செயல்பாடுகளாக  அமைத்திருப்பதைக்  காணக் கிடைக்கிறது.
ஆகவே  ஜும்ஆவை  நபியவர்கள்  காட்டிய  விதத்தில்  செய்ய  வேண்டும்  என்பதினாலும், நாம் செய்யும்  ஜும்ஆக்களில்  மார்க்கத்திற்கு  மாற்றமாக  இருக்கும்  காரியங்களை  தெளிவுபடுத்த வேண்டும்  என்ற  நன்நோக்கத்திலும்  தான்  இந்தப்  பிரசுரம்  வெளியிடப்படுகிறது.
 ஜும்ஆவிற்கு இரண்டு பாங்குகளா?
ஜும்ஆ நாளில் இரண்டு பாங்கு சொல்லும் வழக்கம் நடைமுறையில் இருக்கின்றது. அனேகமாக எல்லா பள்ளிகளிலும் ஜும்ஆவில் இரண்டு பாங்குகள் கூறுவதை நாம் பார்க்கிறோம்.
தொண்ணூற்றி ஒன்பது சதவீதத்துக்கும் அதிகமான பள்ளிகளில் காணப்படுகின்ற இந்த நடைமுறை பற்றி நபிகள் நாயகம் சொன்னார்களா என்று பள்ளிவாசல் இமாமிடம் கேட்டுப் பாருங்கள். யாரிடம் கேட்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை என்று தான் சொல்வார்கள்.இதற்கு எந்த ஒரு ஹதீசையும் எடுத்துக் காட்ட முடியாது.
சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) அவர்களது காலத்திலும் அபூபக்கர் (ரலி), உமர் (ரலி) ஆகியோரது காலத்திலும் ஜும்ஆ நாளின் முதல் பாங்கு இமாம் சொற்பொழிவு மேடை மீது அமர்ந்ததும் சொல்லப்பட்டு வந்தது. உஸ்மான் (ரலி) அவர்கள் (ஆட்சிக்) காலத்தில் (மதீனாவில்) மக்கள் தொகை அதிகரித்தபோதுஸவ்ராஎனும் கடைவீதியில் (பாங்கு, இகாமத் அல்லாமல்) மூன்றாவது அறிவிப்பை அதிகப்படுத்தினார்கள்.                                                                 (நூல்: புகாரி 861)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் ஜும்ஆவில் ஒரு பாங்கு தான் சொல்லப்பட்டு வந்தது என்பதை இதன் மூலம் அறியமுடிகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வழிமுறைக்கு முரணில்லாத வகையில் உஸ்மான் (ரலி) அவர்களின் செயலை பின்வருமாறு விளங்க முடியும்.
உஸ்மான் (ரலி) அவர்கள் அதிகப்படுத்திய அறிவிப்பு என்பது பாங்கு அல்ல. அவர் பாங்கின் வாசகங்களைக் கூறுமாறு உத்தரவிடவில்லை. மாறாக மக்களுக்கு தொழுகையை ஞாபகப்படுத்துவதற்கு பாங்கு போன்று இல்லாத சாதாரண அறிவிப்பை மட்டுமே அதிகப்படுத்தினார்கள் என்று விளங்கிக் கொண்டால் இந்த முரண்பாடும் வராது. இதனை பின்வரும் அறிவிப்பு உறுதிப்படுத்துகின்றது.
 உஸ்மான் (ரலி) அவா;கள் காலத்தில் சொல்லப்பட்டது இப்போது சொல்லப்படும் முதலாவது பாங்கை போன்றது அல்ல. மக்கள் அதிகமானதால் உஸ்மான் (ரலி) அவா;கள் ஸவ்ரா என்ற இடத்தில் ஒரு அறிவிப்பை சொல்லச் சொன்னார்கள்.’ (இப்னு மாஜா - 1125)
ஒரு பேச்சுக்கு உஸ்மான் (ரலி) அவர்கள் பாங்கைத் தான் அதிகப்படுத்தினார்கள் என்று ஏற்றுக் கொண்டாலும் இதனால் இரண்டு பாங்குகள் கூறுவது மார்க்க வழிமுறையாகாது. ஏனென்றால் நபித்தோழர்களின் சொல் செயல் மார்க்க ஆதாரமாக முடியாது. குறிப்பாக நபிமொழிக்கு மாற்றமாக இருந்தால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியாது.
எனவே,  இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆவில் ஒரு பாங்கு கூறியதையே நாம் பின்பற்ற வேண்டும்.
இவ்விஷயத்தில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றுவதாக கூறும் போலிகள் உண்மையில் உஸ்மான் (ரலி) அவர்களைப் பின்பற்றவில்லை.
உஸ்மான் (ரலி) கடைத்தெருவில் இரண்டாவது அறிவிப்பை அதிகப்படுத்தியதாகவே மேற்கண்ட ஹதீஸில் உள்ளது. இதை இவர்கள் பின்பற்றுவதாக இருந்தால் உஸ்மான் (ரலி) செய்தது போல் கடைத்தெருவில் தான் இரண்டாவது பாங்கு சொல்ல வேண்டும். ஆனால் இரண்டாவது பாங்கு சொல்பவர்கள் யாரும் கடைத் தெருவில் சொல்வதில்லை. மாறாக பள்ளிவாசலுக்குள்ளே சொல்லி வருகிறார்கள்.
மேலும், இந்த நடை முறை உஸ்மான் (ரலி) அவா;களே புதிதாக உருவாக்கியதாக குறிப்பிடும் இமாம் ஷாபீஃ அவா்கள், இதில் தனது விருப்பமும் தீர்வும் என்ன என்பதை பின்வருமாரு குறிப்பிடுகிறார்கள்.
இமாம் பள்ளியினுல் நுழைந்து மிம்பா் மீது அமா்கின்ற போது ஜூம்ஆவுக்கான பாங்கு அமைந்திருப்பது எனக்கு மிகவும் விருப்பமானதாகும்.’
(பார்க்க: அல் உம்மு : பாகம் - 1, பக்கம் - 334)
ஜூம்ஆவின் முன் ஸூன்னத்திற்கான முஅத்தினின் அழைப்பு
பெரும் பாலான பள்ளிகளில் ஜூம்ஆ தினத்தன்று அதான் சொல்லப்பட்டவுடன், வருகை தந்திருப்போரை பார்த்துஸலாது ஸூன்னதில் ஜூம்ஆ ரஹிமகுமுல்லாஹ் -  ஜூம்ஆவின் முன் ஸூன்னத்து இரண்டு ரக்அத்துகளை தொழவாருங்கள்! அருள்பாலிக்கப்படுவீர்கள்!’ என்று முஅத்தின் ஒரு வாசகத்தை மொழிவார். ஆனால், இவ்வாறு சொல்வதற்கு நபிமொழிகளில் எந்தவொரு சான்றும் கிடையாது.தவிர்க்க வேண்டிய பித்அத்துகளில் இதுவும் ஒன்றாகும்.
மஃஷா் ஓதல் மார்க்கமாகுமா?
ஜூம்ஆ உரை நிகழ்த்துவதற்கு இமாம் வருகை தரும் போது, முஅத்தின் கையிலே அஸாவை ஏந்தியவாறு மஃஷா் என்ற பெயரில் பின்வரும் செய்தியை நபிமொழி என்ற பெயரில் சப்தமிட்டு கூறுவார். “முஸ்லிம்களே! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக! நபி (ஸல்) அவா்கள் கூறிய செய்தியை அபுஹூரைரா (ரலி) அவா்கள் அறிவிக்கிறார்கள்.இது புகாரி, முஸ்லிம் என்ற ஹதீஸ் புத்தகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜூம்ஆ என்பது ஏழைகளுக்கு ஹஜ்ஜாக இருக்கிறது. பரம ஏழைகளுக்கு பெருநாளாக இருக்கிறது.அவை இரண்டு ரக்அத்துகளுக்கு சமமானது. உரை நிகழ்த்துபவா் மிம்பரில் ஏறிவிட்டால் யாரும் பேசாதீர்கள்!” இதன் பிறகே அஸா இமாமின் கையில் வழங்கப்படும். இப்படி அஸாவை வழங்கும் முன்னா் மஃஷா் ஓதுவது நபி வழியில் இல்லாத பித்அத்தாகும். அத்தோடு, இப்படியொரு செய்தி புகாரியிலோ முஸ்லிமிலோ இடம்பெறவேயில்லை. ‘ஜூம்ஆ உரை நிகழ்த்தும் போது அமைதியாக இருங்கள்!’ என்பது மட்டுமே ஆதாரபுர்வமான நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. இதை மஃஷராக ஓதலாமா? என்றால் அதனை நபியவா்கள் ஓதியதாக எந்தவொரு அறிவிப்புக்களும் இல்லை. எனவே, இதுவும் ஜூம்ஆ அன்று நடைபெறும் ஒரு பித்அத்தாகும்
ஜும்ஆ செய்பவர் தடி (அஸா) வைத்துக்கொள்ள வேண்டுமா?
ஜும்ஆ குத்பாவை நிகழ்த்தக் கூடியவர் மிம்பரில் தனது கையில் ஒரு தடியை வைத்துக் கொள்ளும் வழமை நம்மவர்களிடத்தில் இருந்து வருகிறது. ஆனால், முஅத்தின் மஃஷா் ஓதி அஸாவை இமாமுக்கு வழங்குவதற்கும்.  மிம்பரில் பிரச்சாரம் செய்பவர் கையில் தடியை (அஸா) வைத்துக் கொள்வதற்கும் எந்த ஆதாரமும் ஸஹீஹான ஹதீஸ்களில் இல்லை. இது தொடர்பாக மாற்றுக் கருத்துடையவர்கள் காட்டும் செய்திகள் எதுவும் ஆதாரமாக எடுக்கத் தகாத பலவீனமான செய்திகள் ஆகும்.
அரபியில் தான் ஜும்ஆ உரை அமைய வேண்டுமா?
பொதுவாக பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மாவின் ஆரம்ப உரையை தமிழ் மொழியிலும் இரண்டாவது உரையை அரபியிலும் செய்யும் வழமை இருந்து வருகிறது.
நபியவர்கள் ஜும்ஆவின் இரண்டு உரைகளையும் அரபியில் தான் செய்திருக்கிறார்கள். ஏன் என்றால் அவர்களின் தாய் பாஷை அரபி. அதனால் தான் அரபியில் உரையாற்றினார்கள். ஜும்ஆ உரை என்பது வந்திருக்கக் கூடியவர்களுக்குரிய ஒரு உபதேசமாகும். அந்த உபதேசம் அவர்களின் தாய் மொழியில் தான் அமைய வேண்டும். அப்போதுதான் மிம்பரில் இருப்பவர் என்ன சொல்கிறார் என்பது மக்களுக்குப் புரியும்.மக்களுக்கு போதனை செய்வதும், அதன் மூலம் மக்கள் திருந்த வேண்டும் என்பதும்  தான் குத்பாவின் அடிப்படை நோக்கம் என்பதை நபிகளாரின் குத்பா பற்றிய செய்தி எமக்கு உணா்த்துவதனை காணலாம்.
 நபி (ஸல்)  அவா்கள் இரண்டு குத்பாக்கள் நிகழ்த்துவார்கள். இரண்டிற்கும் இடையே (சொற்பொழிவின் போது) அமா்வார்கள். குர்ஆன் வசனங்களை ஓதுவார்கள்.மக்களுக்கு போதனை செய்வார்கள்.’ (ஜாபிர் இப்னு ஸமுரா (ரலி), நூல்: முஸ்லிம்)
இமாம் சொல்லும் நான்கு விடயங்களை அறிந்து வாழ்வை வழமாக்க வேண்டிய குத்பாக்கள் இந்நோக்கத்தை இன்று நிறைவேற்றுகின்றனவா? இன்று நடைமுறையில் உள்ள இரண்டாம் குத்பாவை அரபியில் ஓதுவதால் இமாம் என்ன சொல்கிறார் என்பதையே அறிய முடியாத துர்ப்பாக்கிய நிலை உருவாகி விடுகிறது. எனவே, இரண்டு குத்பாக்கள் செய்வது தான் நபிவழியே தவிர அரபு மொழியில் தான் உரை நிகழ்த்த வேண்டும் என்பதல்ல. ஆனால் நம்மவர்கள் இரண்டாவது உரையை அரபியில் செய்வார்கள் முதல் உரையை தமிழில் செய்வார்கள். இரண்டாவது உரை அரபியில் தான் அமைய வேண்டும் என்பது இவர்களின் வாதமாகும். இரண்டாம் உரையை அரபியில் தான் செய்ய வேண்டும் என்று சொல்பவர்கள் முதல் உரையையும் அரபியில் செய்ய வேண்டியதுதானே அதை மாத்திரம் ஏன் தமிழில் செய்ய வேண்டும்?
ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா?
அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களினகுடும்பத்தினா்களின் பெயர்களையும் வாசித்து குத்பாவில் துஆ செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது. தனக்குப் பின் யார் கலீபாவாக வரவேண்டும் என்பதையே மக்களுக்கு அறிவிக்காத போது, எப்படி தனக்குப் பின் வந்த நான்கு கலீபாக்களின் பெயரைச் சொல்லி நபிகளார் துஆ செய்திருக்க முடியும்;? மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்ட காலத்திலும் இப்படி ஒரு நடை முறை அவர்களால் அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஒவ்வொரு வாரமும் அந்த நபித்தோழர்களின் பெயர்களைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்பதும் அவர்களுக்காக துஆ செய்வது ஜும்மாவின் விதிமுறைகளில் ஒன்றாகும் என்ற நிலையை ஏற்படுத்துவதும் பித் அத்தாகும். இது பாவமான செயலாகும். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
இமாம் இரு குத்பாக்களுக்கிடையில் அமரும் போது முஅத்தின் ஸலவாத்துச் சொல்லுதல்
இமாம் முதலாவது உரையை செய்துவிட்டு சற்று அமா்வார்.மீண்டும் இரண்டாவது குத்பாவுக்காக எழும்புவார்.இவ்வாறு இரு குத்பாக்களுக்கிடையில் இமாம் அமரும் போது, அவரை எழுந்து நிற்கச் செய்வதற்காக முஅத்தின்அல்லாஹூம்ம ஸல்லிவசல்லிம் வபாரிக் வசல்லிம் அலைஎன்று ஸலவாத்துச் சொல்லும் நடைமுறை பெரும்பாலான பள்ளிகளில் இருக்கிறது.இதுவும் நபிவழியில் இல்லாத புது வழியாகும். நபிகளார் இவ்வாறு அமரும் போது பிலால் (ரலி) அவா்கள் ஸலவாத்துச் சொன்னதாக எந்தவொரு செய்தியும் வரவில்லை.எனவே, இதை செய்வதும் பித்அத்தாகும்.
 ஜும்ஆத் தொழுகை நிறைவேற  40 பேர் அவசியமா?
ஜும்ஆத் தொழுகை நடத்துவதற்கு குறைந்தது 40 நபர்கள் இருக்க வேண்டும் என்று மத்ஹப் நூற்களில் சட்டம் கூறப்பட்டுள்ளது. ஆனால் இவ்வாறு நிபந்தனையிடுவதற்கு குர்ஆனிலோ ஏற்கத்தகுந்த நபிமொழிகளிலோ எந்த ஆதாரமும் இல்லை. இதனை ஹதீஸ் கலை அறிஞர்களான இமாம் இப்னு ஹஜா் அஸ்கலானி, இமாம் சுயுத்தி போன்றோரும் குறிப்பிடுகின்றனா்.(பார்க்க: பத்ஹூல் பாரி, பாபுல் ஜூம்ஆ, அல் ஹாவி லில் ஃபதாவா - பாகம்: 1, பக்கம் : 101-104) எனவே, மார்க்கத்தில் கூறப்படாத நிபந்தனைகளை இடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை.
ஜும்ஆவிற்கு நாற்பது நபர்கள் இருக்க வேண்டும் என்ற அளவுகோல் தவறு என்பதை பின்வரும் ஹதீஸ் மூலமும் தெரிந்துகொள்ளலாம்.
ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) கூறினார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (ஜும்ஆத்) தொழுது கொண்டிருந்தபோது உணவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒட்டகக் கூட்டம் ஒன்று வந்தது. அதை நோக்கி மக்கள் சென்று விட்டனர். பன்னிரெண்டு நபர்களைத் தவிர வேறு எவரும் எஞ்சியிருக்கவில்லை. இந்த நேரத்தில் தான், ‘அவர்கள் வணிகப் பொருட்களையோ கவனத்தை ஈர்க்கக் கூடியதையோ கண்டால் உம்மை நிலையில் விட்டுவிட்டு அதை நோக்கிச் சென்று விடுகின்றனர்.’ (62:11) என்ற வசனம் இறங்கியது. (புகாரி - 936)
நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நடத்திக் கொண்டிருந்த போது பன்னிரண்டு நபர்கள் மட்டுமே இருந்துள்ளனர். ஜும்ஆவிற்கு 40 நபர்கள் அவசியம் இருக்க வேண்டும் என்றால் பன்னிரெண்டு நபர்களை மட்டும் வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ நடத்தியிருக்க மாட்டார்கள். எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கும் ஜும்ஆவிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதால் தான் நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து ஜும்ஆவை நடத்தியுள்ளார்கள்.
ஆக, ஜும்ஆ தொழுகைக்கும் எண்ணிக்கைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.இருவா் இருந்தாலேயே ஒருவா் ஜூம்ஆ உரை நிகழ்த்தி மற்றவா் அவருடன் இணைந்து ஜூம்ஆ தொழுகையம் நடாத்த முடியும்.
மிம்பரில் வைத்து கூட்டு துஆ கேட்டல்.
பெரும்பாலான பள்ளிகளில் ஜும்மா குத்பா நடத்தும் இமாம் குத்பாவின் போது மிம்பரில் இருந்து கொண்டு முஸ்லிம்களுக்காகவும், உத்தமா்களுக்காகவும், நமது பாவங்களுக்காகவும் துஆ செய்வார். கீழே இருக்கக் கூடியவர்கள் அதற்கு சப்தமாக ஆமீன் சொல்லுவார்கள். இது நபியவர்கள் காட்டித் தராத பித்அத்தான பாவமான காரியமாகும்.
நன்மை என்று நினைத்துக் கொண்டு செய்யும் இக்காரியத்தினால் நன்மைக்குப் பதில் பாவம் தான் நமக்குக் கிடைக்கிறது. இந்த பித்அத்தான காரியத்தை நாம் கண்டிப்பாக தவிர்ந்து கொள்ள வேண்டும். இறைவனிடம் துஆ செய்யும் போது பணிவுடனும், இரகசியமாகவும் கேட்குமாறு குர்ஆன் ஏவுகிறது. கூட்டு துஆ எனும் நடைமுறை இதற்கு எதிராக இருப்பதை காணலாம். உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்தனை செய்யுங்கள்.! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (7 : 55)
நபியவர்களின் வாழ்க்கையில் ஒரு தடவை கூட தனது தொழுகையில் கூட்டு துஆ ஓதியதற்கோ நபித் தோழர்கள் ஆமீன் சொன்னதற்கோ எந்தவித ஆதாரமும் சுன்னாவில் கிடையாது. நபியவர்களின் குத்பாக்களில் இன்று பள்ளிகளில் துஆ ஓதுவதைப் போன்ற ஒரு நடை முறை இருக்கவேயில்லை. ஆக இப்படியொரு வழிமுறையை நாம் நடைமுறைப் படுத்துவது பாவமான பித்அத்தான காரியமாகும்.
ஐங்காலத் தொழுகையின் பின் கேட்கப்படும்; கூட்டு திக்ரும், கூட்டு துஆவும்
இன்று அனைத்து பள்ளிகளிலும் தொழுகை முடிந்ததன் பிறகு இமாம் சப்தமிட்டுஸூப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்,அல்லாஹூ அக்பா் எனும் திக்ருகளையும், சில பள்ளிகளில் அப்ழலுத் திக்ர் லாஇலாஹ இல்லல்லாஹ் எனும் திக்ரையும் மஃமூன்களுக்கு சொல்லிக் கொடுக்கும் நடைமுறையையும், இதன் பிறகு இமாம் துஆ கேட்க மஃமூன்கள் ஆமீன் சொல்லும் காட்சியினையும் காண முடிகிறது. இவ்வாறு திக்ருகளை சப்தமிட்டு சொல்வதற்கும், துஆக்களை சப்தமிட்டு கேட்பதற்கும் நபிவழியில் எந்தவொரு சான்றும் இல்லை. நபியவா்கள் 10 ஆண்டு காலங்கள் ஜமாஅத்தாக தொழுகை நடாத்தினார்கள்.ஆனால், ஒரு வக்து தொழுகையின் பின்னா் கூட திக்ருகளை ஸஹாபாக்களுக்கு சப்தமிட்டு சொல்லிக் கொடுத்ததாகவோ, நபியவா்கள் துஆ கேட்க ஸஹாபாக்கள் ஆமீன் சொன்னதாகவோ ஒரு ஹதீஸை கூட மறுமை நாள் வரை காண்பிக்க முடியாது. எனவே, இதுவும் ஒழிக்கப்பட வேண்டிய பித்அத்தாகும்.
இமாமுக்கு என்று பிரத்தியேக உடை உண்டா?
இன்று, ஒருவா் ஜூம்ஆ உரை நிகழ்த்த வேண்டுமாயின் அவா் ஏனையவா்களை விட்டும் தன்னை வேறுபடுத்திக் காட்டும் விதத்தில் அமைந்த உடைகளை அணிந்திருக்க வேண்டும் என்ற நிலை பெரும் பாலான ஊர்களில் நிலவுவதை காணலாம்.தொப்பி, அதன் மீது தலைப்பாகை, ஜூப்பா எனும் நீண்ட அங்கி, தோள்களின் மீது சால்வை,கால் பாதங்களுக்கு காலுறை(சொக்ஸ்) எனும் ஆடைகள் ஒரு இமாமின் ஆடைகளாக இன்று மாறிப்போய் இருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு, ஜூம்ஆ உரை நிகழ்த்தும் இமாம் உடையணிந்திருக்க வேண்டும் என்றோ, இன்ன ஆடையைத் தான் இமாம் அணிய வேண்டும் என்றோ நபி (ஸல்) அவா்கள் சொன்னதாக எந்தவொரு செய்தியும் ஹதீஸ்களில் வரவில்லை.மாற்றமாக பிறரை விட்டும் தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டும் விதமாய் ஆடையணிவதை தடை செய்யும் நபிகளாரின் அறிவிப்பைத் தான் ஹதீஸ்களில் காண முடிகிறது. ஒருவரது அவ்ரத்தை மறைக்கும் விதமாய் எந்த ஆடையை அணிந்தாலும் அது குற்றமாக ஆகமாட்டாது.இதற்கு மாற்றமாக இதைத்தான் அணிய வேண்டும் என்று யாராவது கூறுவார்களாயின் அவா்கள் தங்களது கூற்றுக்கு நபிவழியிலிருந்து ஆதாரங்களைக் காட்ட வேண்டும்.
பித்அத்துவாதிகளே எச்சரிக்கை!
நாம் புரியும் எந்தவொரு வணக்கமாக இருந்தாலும் அது நபி (ஸல்) அவா்கள் காட்டித்தந்த அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். நபிவழிக்கு மாற்றமாக எந்தப் பெரிய அறிஞா் சொல்லியிருந்தாலும் அது புறக்கணிக்கப்பட வேண்டிய குப்பை என்பதில் எள்முனையளவு கூட சந்தேகமில்லை. நாளை மறுமையில் நம் வணக்க வழிபாடுகள் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, நாம் வெற்றிபெற வேண்டுமாயின் எமது வாழ்விலும் வணக்கத்திலும் பித்அத்துகள் இடம் பெறக் கூடாது. யாருடைய வாழ்வில் பித்அத் எனும் நபிவழியல்லாத புது வழிகள் இடம்பெற்று விடுகிறதோ அவரின் அமல்கள் யாவும் அல்லாஹ்வினால் நிராகரிக்கப்பட்டு விடும். எனது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் (நூல் : முஸ்லிம், 3442), இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் (நூல் : புகாரி, 2697)
எனவே, நாமும் நபிவழியில் நடப்பதோடு, பிறரையும் அதன் பால் அழைக்கும் நன்மக்களாக மாறவேண்டும். தூய நபிவழியை பின்பற்றுவதற்காக பித்அத்துகளை விட்டும் விலகி நடப்பவா்களை யார் எதிர்க்கின்றனரோ அவா்கள்  நாளை மறுமையின் இறைவனின் விசாரணை மன்றத்தினை அஞ்சிக் கொள்ளட்டும்!