Pages

Tuesday, May 31, 2011

கீழாடையும் அதன் எல்லையும்


எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.
கரண்டைக் காலில் ஆடை படும் வகையில் கீழாடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.

ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறிக் கொண்டு வருகிறோம்.

நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

பெருமையை மையமாக வைத்து சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்கு பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்தும் வருகின்றனர்.

பெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் கீழாடை படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக கீழாடை கரண்டையில் படுவதாலோ கரண்டையை மூடினாலோ தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும்.

இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில்

  • ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும்
  • இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது)

ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொற்களுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டு விடலாம்.

ஜர்ரு மற்றும் இஸ்பால் என்பதன் பொருள்

ஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளை தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது.

பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 புஹாரி 5783

தரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம்
நூல் : அபூதாவூத் (3562)

மேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விட்டார் என்பதாகும்.
லிசானுல் அரப் (பாகம் : 11 பக்கம் : 319)

நடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.
நூல் : அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம் : 2 பக்கம் : 846)

இஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.
நூல் : துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம் : 1 பக்கம் : 407)

இஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதாகும்.
நூல் : அவ்னுல் மஃபூத் (பாகம் : 2 பக்கம் : 340)

எனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன

இதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன
கரண்டையைத் தாண்டி தரையில் இழுபடுவதைத் தடுக்கும் ஹதீஸ்களை கரண்டையில் படுவதைத் தடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

கீழாடை கணுக்கால்களைத் தொடலாமா?

கீழாடையின் எல்லையைப் பற்றி பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாக கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும்  கீழாடை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (5787)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : சமுரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (19309)

இவ்விரு செய்திகளில் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)
நூல் : அபூதாவுத் (3562)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (13115)

கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களை தொடும் வகையில் அணிவது தவறல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அபூதாவுத் (3570)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : தப்ரானீ

மேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
இந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.

கணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்

மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.

ஹுஜைம் குலத்தைச் சார்ந்தவரான ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) நீ கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை உடுத்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : பைஹகீ (5853) அபூதாவுத் (3562)

இந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.
சுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடாத அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.
தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.

ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

நபியவர்களால் கண்டிக்கப்பட்டவர்கள்

கணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.
மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித் தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.

ஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று அல்லாஹ்வை அஞ்சிக் கொள். உனது கீழாடையை உயர்த்து என்று கூறினார்கள். நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக் கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்) என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதே என்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார்.
நூல் : அஹ்மது (18656)

முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, "நீர் யார்?'' என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்' என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்'' என்றார்கள்.
முஸ்லிம் (4236)

முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு "(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்'' என்று (இடித்துக்) கூறலானார்கள்.
பிறகு "அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் "அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்' என்று கூறினார்கள்'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (4239)

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு) இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், "அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து  வாருங்கள்'' என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), "எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு  அஞ்சி நடப்பதுமாகும்'' என்று கூறினார்கள்.
புகாரி (3700)

கணுக்காலில் ஆடை படக்கூடாது என்போரின் ஆதாரங்கள்

முதல் ஆதாரம்

ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (15389)

இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார்.  இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ் ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.

இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.

காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.
அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.

காலிதுடைய அறிவிப்பு

கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மது (22121)

அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு

உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (3562)

அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) அபூசயீத் (ரலி) அனஸ் (ரலி) சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.
எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.

மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்து கூறப்படுகின்றது.

ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.

பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது ஆதாரம்

அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக் கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (10151)

இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்தச் செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.

அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மது (7519)

முஹம்மது பின் இப்ராஹீம் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது

மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்த சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.

எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.

மூன்றாவது ஆதாரம்

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடம். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பா விட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)

இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச்சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.

இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)

இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.

ஆய்வின் சுருக்கம்

கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன

எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.

அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாக பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பா விட்டாலே இதற்கு அடுத்த நிலையை கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.


Sunday, May 29, 2011

அன்பன் இஸ்மத் அலியின் மடலுக்கு அன்பார்ந்த பதில்



அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...
ப்ரிய இஸ்லாமிய தோழா!


உங்கள் உடல் மற்றும் ஈமானிய ஆரோக்கியத்திற்காய் உளமாற வேண்டியவனாய் உங்களுடனான சினேகபுர்வ உரையாடலை இம்மடல் மூலம் ஆரம்பிக்க முனைகிறேன்.


சொந்த விருப்பு வெருப்புகளைத் தாண்டி, மறுமை வெற்றியை மட்டும் இலக்காய்க் கொண்டு எம் கருத்துப் பரிமாற்றங்கள் காத்திரமான பங்களிப்பை நல்குவதற்கு இறைவனை வேண்டுகிறேன்.


”இறைவா! சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் வேறுபிரித்தறியும் ஆற்றலை எமக்கு வழங்குவாயாக!”


தோழா!


ஜாமியா நளீமியா வளாகத்தில் கடந்து போன எம் வாழ்வின் சிலப்பதிவுகளை நினைவு கூர்ந்து, பழையதை நினைவு படுத்தி, புதியவை குறித்து வினா தொடுத்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளீர்கள்.


உங்கள் ஆதங்கத்தையும், அன்பொழுகும் அரவனைப்பையும் நினைத்து அகமகிழ்கிறேன். என்னைக் குறித்த உங்கள் மடலின் சாராம்சங்களாய் பின்வரும் அம்சங்களை குறிப்பிட முடியும்


1)ஜமாஅதே இஸ்லாமி எனும் தெளிவான கொள்கையிலிருந்து தடம் புரள்வதற்கான காரணம் என்ன?


2) கருத்துக்களை விமர்சிப்பதை விட ஏன் தனிமனித விமர்சனங்களை முடுக்கிவிடுகறீர்கள்?


3)ஜமாஅத்தின் தஃவா அனுகுமுறையில் கண்ட தவறுகள் எவை?


4)ஷிர்க் - பித்அத் ஒழிப்பால் மட்டும் சமூக மாற்றம் சாத்தியமாகாது.


5)ஜமாஅத் கடைபிடிக்கும் ஒற்றுமை, நடுநிலைப் போக்கு என்பன மார்க்கத்துக்கு எவ்வகையில் முரணானது?


6)பிக்ஹூல் அவ்லவியாத் (தஃவாவில் முதன்மைப்படுத்த வேண்டியது எது என்பது பற்றிய தெளிவு தவ்ஹீத் வாதிகளுக்கு பரிச்சயமற்ற ஒன்று)


7)தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சார அனுகு முறை உள்ளத்திலும் உலகிலும் அமைதியை சீர்குழைக்கிறது.


மேற்குறித்தவை நீங்கள் என்னைக்குறித்து எழுதிய வரிகளின் சுருக்கம்.


முதலில், விமர்சனங்களை திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டு, விமர்சனத்தில் நியாயங்கள் இருப்பின் என் தவறுகளை களைவதற்கான மனதுடனும், நியாயமற்றதாயின் அதற்குண்டான தெளிவுகளை வழங்க வேண்டும் என்ற கடமைப்பாட்டுடனுமே நான் உங்கள் மடலையும் உள்வாங்கிக்கொள்கின்றேன் என்பதை பதிவு செய்ய ஆசைப்படுகிறேன்.


இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து வரும் மடல்களில் என் குறித்த உங்கள் புரிதல்கள் மற்றும் தவ்ஹீத் ஜமாஅத் குறித்த உங்கள் நிலைப்பாடுகள், ஜமாஅதே இஸ்லாமி தொடர்பான உங்கள் பிடிமானம் சம்பந்தப்பட்ட அம்சங்கள் குறித்து கருத்துப்பரிமாற்றம் செய்ய மிகுந்த ஆவலுடன் உள்ளேன் என்பதை அறியத் தருகிறேன்.


முரண்பாடுகள் உடன்பாடுகளாய் மாற வேண்டுமாயின் முரண்பட்டு நிற்பவர்கள் தம் கௌரவத்தை விட்டு, ஒரு மேசையில் அமர்ந்து வஹியின் ஒளியில் தீர்வுகளை தேட முற்பட வேண்டும். இதுவே, ஆரோக்கியமான பிரச்சாரக் களத்திற்கு ஏற்றமான முறையாகும் என்பதில் அழுத்தமான நம்பிக்கை எனக்குண்டு.


அத்தகையதோர் திறந்த கலந்துரையாடலை ஆசித்தவனாய் என் முதல் மடளுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறேன்.


“எம் என்னங்களை இறைவன் தூய்மை படுத்தி எம் பணிகளை பொறுந்திக் கொள்வானாக!”


   

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்
மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.
மிஃராஜ் ஓர் அற்புதம்
மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)
ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிலிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.
ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய  இறைவனுக்கு இது சாத்தியமானதே!
அழகிய தோற்றமுடைய வலிமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்லின் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)
ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதலில் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.
இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.
ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)
இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.
முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)
இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.
நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.
அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.
எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ்  என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.
மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.
மிஃராஜ் நடந்தது எப்போது?
மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.
நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.
ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில்
கூறப்பட்டுள்ளது. உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள். யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள். ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.
இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.
நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.
எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை
நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில்  சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?
மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்
எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.
ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.
"மிஃராஜ் இரவில் வானத்திலிருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்'' என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.
இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்லிஸ்கள், மவ்லித் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.
அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு. அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.
6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கலிமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.
3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.
இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், லிஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர். இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.
இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: புகாரீ (2697)
நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத  காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். 
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),  நூல்: முஸ்லிம் (3243)
இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்
உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16)
அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.
லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும். இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது,  நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.
இவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா?
யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.
இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (59:7)
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.
"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!
"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (3:31, 32)
எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.
இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205)
உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55)
ஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:  செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: நஸயீ (1560)

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும்
நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!
மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்
மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.
1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, "சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டிலில் உறங்குகின்றார்'' என்று அல்லாஹ் கூறினானாம்.
2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். "என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?'' என்று நபிகளார் கேட்ட போது, "இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினாராம்.
3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, "முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்'' என்று அபூபக்ர் (ரலி)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்று நபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளே போய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ் இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, "நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறினானாம். "அபூபக்ரின் குரல் கேட்டதே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, "நீர் பயந்து
விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்று ஒரு மலக்கைப் பேச வைத்தேன்'' என்று அல்லாஹ் கூறினானாம்.
4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டு ரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று ஜிப்ரீல் நினைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று அல்லாஹ்வும் நினைத்தானாம். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம்.
5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ் என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் இரண்டு வகையுண்டாம்.  உடலில்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிக்கும் தரிசனத்திற்கு ரூஹானியத்தான மிஃராஜ் என்றும், நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மிஃராஜ் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் கதை விட்டுள்ளார்கள்.
6. ரூஹானிய்யத்தான மிஃராஜ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய நபிமார்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், அவுலியாக்கள் போன்ற நல்லடியார்களுக்கும் இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ் ஏற்பட்டுள்ளது என்று கதை விட்டு, மாபெரும் அற்புத நிகழ்வான நபிகள் நாயகத்தின் விண்ணுகப் பயணத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளனர்.
7. நபி (ஸல்) அவர்களுக்கு ரூஹானிய்யத்தான மிஃராஜ் 33 தடவை ஏற்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாம். முஹைதீன் அப்துல் காதர் ஜீலானிக்கு ரூஹானியத்தான மிஃராஜ் ஏற்பட்ட போது முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினானாம். அப்போது நடந்த உரையாடலில் நாசூத், மலகூத், ஜபரூத், லாஹுத் என்பதையெல்லாம் அல்லாஹ் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கற்றுக் கொடுத்தானாம்.
இன்னும் இது போன்ற ஏராளமான கதைகளையும், கப்ஸாக்களையும் மிஃராஜின் பெயரால் அவிழ்த்து விட்டுள்ளனர்.
சில சம்பவங்களை விமர்சிக்கும் போது, இந்த வசனத்திற்கு இந்தச் சம்பவம் மாற்றமாக அமைந்துள்ளது என்றும், இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் விளக்கமளிப்போம். ஆனால் குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டு விளக்க முடியாத அளவுக்கு, சாதாரண மக்கள் இவற்றைப் படித்தால் கூட கப்ஸாக்கள் என்று விளங்கும் அளவுக்கு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.
அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் காட்டுவதற்காக, நபி (ஸல்) அவர்களுக்கு அவன் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதத்தைக் கூற வந்தவர்கள் அல்லாஹ்வைக் கேலி செய்யும் விதமாக, அவனைப் பலவீனமானவனாக சித்தரிக்கக் கூடிய கதைகளை எழுதி வைத்து, பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.
முஃமின்களின் ஈமானைச் சோதிப்பதற்காக மிஃராஜ் எனும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்தினான். ஆனால் இவர்களோ ஈமானுக்கே வேட்டு வைக்கக் கூடிய விதத்தில் அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும், ஜிப்ரீல் (அலை) அவர்களையும் மட்டம் தட்டி எழுதி வைத்துள்ளது தான் வேதனை!
அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? (அல்குர்ஆன் 7:37)
"என் மீது பொய் சொல்வதென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல.  என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.
அறிவிப்பவர் : முகீரா (ரலி), நூல் : முஸ்லிம்
அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் மாபாதகச் செயலாகும். எனவே இது போன்ற கதைகளைப் புறக்கணிப்போமாக!
விண்ணுலகப் பயணத்தில்அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?
 ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.
நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும் திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.
அல்லாஹ்வை இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாது என்பதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் சான்றுகள் நிறைந்துள்ளன.
வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்42:51)
இவ்வசனத்தில் அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று வழிகளில்தான் பேசுவான் என்று தெளிவாக கூறுகிறான். இவை அல்லாத வேறு வழிகள் இல்லை என்பதை விளக்கமாகக் குறிப்பிடுகிறான்.
இறைவன் மனிதர்களிடம் பேசும் முறைகள் மூன்று. அவை. 1. வஹீயின் மூலம் 2. திரைக்கு அப்பால் இருந்து 3. ஒரு தூதரை அனுப்பி
இந்த வழிகளில் நேரடியாக பேசுவதைப் பற்றி கூறாததிலிருந்து அல்லாஹ் அவ்வழியை அடைத்து விட்டான் என்பதை விளங்கலாம். ஏனெனில் நமது கண்களுக்கு அவனைப் பார்க்கும் அளவிற்கு சக்தி கிடையாது.
அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103)
இக்கருத்தை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான். உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகலில் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.
அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி), நூல்: முஸ்லிம் 293, அஹ்மத் 18765,18806
யாரும் இறந்து மறு உலகை அடையாமல் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.
உங்களில் எவரும் தன் இறைவனை அவர் இறக்காத வரை பார்க்க முடியாது என்பதை அறிந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5215)
மேலும் நபி (ஸல்) அவர்களே மிகத் தெளிவாக நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறிய செய்தி ஹதீஸ் நூற்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நான் நபி (ஸல்) அவர்களிடம்  நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி)
நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204, அஹ்மத் 20427, 20522, 20547
நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாகத் தீôப்பளித்திருக்க பல ஆலிம் பெருந்தகைகள் தங்கள் பயானில் நபி (ஸல்) அவர்கள் மிராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.
நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் இதே கருத்தை கூறியுள்ளதை ஸஹீஹுல் புகாரியில் பார்க்க முடிகிறது.
முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை நேரில் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தோற்றத்திலும் அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி 3234