ஆனால் கடாபி தன்னைச் சுடவேண்டாம் எனக் கெஞ்சியுள்ளார். நான் உங்களுக்கு என்ன செய்தேன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். கடாபியின் மகன்களில் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் காலில் சிறு காயங்களோடு பிடிபட்டார் என முதலில் அறிவித்த கிளர்ச்சியாளர்கள் பின்னர் அவர் இறந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். அதேபோல மற்றைய மகனும் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



புரட்சி படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட லிபிய முன்னாள் அதிபர் கடாபியின் உடலை புதைப்பதில் இடைக்கால அரசின் அதிகாரிகள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் கடாபி உடல் அனாதையாக கிடக்கிறது. இது லிபிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் கடாபி உடல் அனாதையாக கிடக்கிறது. இது லிபிய மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்ரிக்கா நாடான லிபியாவை புரட்சி மூலம் கைப்பற்றி 42 ஆண்டுகள் ஆட்சி செய்தவர் கடாபி(69). கடந்த பிப்ரவரியில் அவருக்கு எதிராக கிளர்ச்சி தொடங்கியது. அவரை எதிர்த்தவர்கள் ஓரணியில் திரண்டு புரட்சி படை என்ற பெயரில் தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு அமெரிக்கா உட்பட நேட்டோ படைகளும் ஆதரவு அளித்தன.
கடந்த ஆகஸ்ட் 23ம் திகதி தலைநகர் திரிபோலியை புரட்சி படை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது. அப்போது முதல் 2 மாதமாக தலைமறைவாகி இருந்த கடாபி அவரது சொந்த ஊரான சிர்தி யில் நெடுஞ்சாலைக்கு அடியில் செல்லும் பாதாள சாக்கடை குழாயில் பதுங்கி வாழ்ந்துள்ளார்.
அவரது இருப்பிடத்தை நேற்று முன்தினம் புரட்சி படையினர் கண்டுபிடித்தனர். துப்பாக்கி முனையில் அவரை வெளியே இழுத்துப் போட்டனர். அப்போது சுட்டு விடாதீர்கள் என்று கடாபி கதறியதாக புரட்சி படை வீரர் ஒருவர் தெரிவித்ததாக தகவல் வெளியானது.
இருப்பினும் அவர் தப்ப முயன்றதாகவும், அவரது ஆதரவாளர்கள் துப்பாக்கியால் சுட்டதாகவும் கூறி புரட்சி படையினர் சுட்டதில் கடாபி பலியானார்.
அவரது உடலை மிஸ்ரடா பகுதியில் முன்பு இறைச்சி கூடமாக பயன்படுத்தப்பட்ட இடத்தில் வைத்துள்ளனர். கடாபி உடலை அடக்கம் செய்வதில் இடைக்கால அரசை சேர்ந்தவர்கள் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மத வழக்கப்படி உடலை உடனடியாக அடக்கம் செய்ய வேண்டும் என்று ஒரு பிரிவினர் கூறினர்.
ஆனால் சர்வாதிகார ஆட்சி நடத்திய கடாபி பலியானதில் சந்தேகம் ஏற்படாமல் இருக்க சில நாட்கள் அவரது உடலை வைத்திருக்கலாம் என்று சிலர் தெரிவித்தனர்.
ஈராக்கில் தூக்கிலிடப்பட்ட சதாம் உசேனை மத சடங்குகள்படி அடக்கம் செய்தது போல கடாபியையும் அடக்கம் செய்ய ஒரு பிரிவினர் வலியுறுத்தினர்.
ஆனால் கடாபியை அடக்கம் செய்யும் இடத்தை ரகசியமாக வைத்திருக்கவும், அவரது ஆதரவாளர்கள், உறவினர்களுக்கு தெரிந்து நினைவிடமாக வழிபடாமல் தடுக்கவும் வேண்டும் என்று சிலர் கூறினர். வேறு சிலரோ மகன் உட்பட உறவினர்கள் இருப்பதால் அவர்களை கொண்டு இறுதி சடங்கு செய்ய வேண்டும் என்றனர்.
இதனால் பலியாகி 2 நாட்கள் ஆகியும் கடாபி உடல் அடக்கம் செய்யப்படாமல் கிடக்கிறது. இதுபற்றி தேசிய மாற்று அரசு கவுன்சில்(என்.டி.சி) கமாண்டர் அப்துல் சலாம் கூறுகையில்,“கடாபி உடல் முழு மரியாதையுடன் இஸ்லாமிய வழக்கப்படி 24 மணி நேரத்துக்குள் அடக்கம் செய்யப்படும்” என்றார்.
இதற்கிடையே கடாபி உயிருடன் பிடிபட்டும் அவரை சுட்டதுடன், ரத்த காயங்களுடன் கதறிய அவரை புரட்சி படையினர் அடித்து சுட்டுக் கொன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில் அதிர்ச்சி அளிக்கும் செல்போன் வீடியோ காட்சிகள் நேற்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மனித உரிமைகளை காப்பதாக கூறும் அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகள் இதற்கு என்ன பதில் சொல்லும் என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடாபியிடம் நடந்த மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த ஐ.நா மனித உரிமை அமைப்பு உத்தரவிட்டுள்ளது. மேலும் கடாபி மறைவுக்கு பிறகு லிபியாவில் ஜனநாயகம் மலர்ந்துள்ளதாக அமெரிக்கா கூறியுள்ள நிலையில் புதிய அரசு அமைப்பதில் புரட்சி படைக்குள் கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாகவும், தலைமை பொறுப்புக்கு மோதல் உருவாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
