Pages

Saturday, September 24, 2011

மனிதனுக்கு வணங்காத சுயமரியாதை மார்க்கம்!




ஆக்கம்: பர்ஸான் (சிலாபம்)
இஸ்லாம் அறிவு புர்வமான மார்க்கம். அதன் வழிகாட்டுதல்கள் அற்புதமானவை. படைத்த இறைவன், இறைவன் தான். அவனால் படைக்கப்பட்ட மனிதன், மனிதன் தான். மனிதன் கடவுளாகி விட முடியாது. கடவுள் மனிதனாக முடியாது. தன்னால் படைக்கப்பட்ட எந்த மனிதனும் தன்னைத் தவிர வேறு எந்த படைப்பினத்திற்கும் தலை வணங்கக் கூடாது. அந்தச் சாயல் கூட ஏற்பட்டு விடக் கூடாது என்பதில் இஸ்லாம் கண்ணும் கருத்துமாக இருக்கிறது. அது போல் எந்த மனிதனும்  எந்த மனிதனுக்கும் தலை வணங்கக் கூடாது. அந்தச் சாயல் கூட ஏற்பட்டு விடக் கூடாது என்பதிலும் கவனமாகவே இருக்கிறது. அந்த வகையில் மரியாதைக்காக ஒரு மனிதன் வேறொரு மனிதனுக்கு எழுந்து நிற்பதையும் தடை செய்கிறது.
சுயமரியாதையை தகா்த்தெறியும்எழுந்து நிற்றல்எனும் இவ்வணக்கம் இன்று சா்வ சாதாரணமாக சமுதாய மன்றத்தில் பரவலாக அரங்கேறி வருவதனை காண முடிகிறது. இவ்வகையில்
·             ஆசிரியருக்காக மாணவன் எழுந்து நிற்றல்.
·             மூத்தவா்களுக்காக இளையவா்கள் எழுந்து நிற்றல்.
·             ஜனாதிபதிக்காக மக்களும் மந்திரிகளும் எழுந்து நிற்றல்.
·             முதலாளிக்காக தொழிலாளி எழுந்து நிற்றல்.
·             பள்ளி நிர்வாகிகளுக்கு முன் கதீப் எழுந்து நிற்றல்.
·             மார்க்க அறிஞனுக்காக மக்கள் எழுந்து நிற்றல்.
·             தேசிய கொடி ,தேசிய கீதம் மற்றும் குத்து விளக்குஏற்றும் போது வருகை தந்திருப்போர் எழுந்து நிற்றல்  போன்ற வற்றை குறிப்பிட முடியும்.
எழுந்து நிற்றலை இஸ்லாம் ஏன் தடுக்கிறது?
ஒருவன் மரியாதை, அச்சம், அன்பு போன்ற உணா்வுகளால் உந்தப் பட்டு இன்னொருவா் முன்னிலையில் எழுந்து நிற்றல், குனிதல், தலை சாய்த்தல் போன்றன வணக்கமாகக் கருதப்படுகின்றன. வணக்கங்கள் யாவும் அல்லாஹ் ஒருவனுக்காக மட்டுமே நிறைவேற்றப் படல் வேண்டும்.
தொழுகையை குறிப்பதற்கு குர்ஆனிலும் ஹதீஸிலும் கியாம்’ ‘நிற்றல் என்ற பொருள் தரக்கூடிய அரபுச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. அல்லாஹ்வுக்காக கட்டுப்பட்டு நில்லுங்கள்’ (2:238),‘இரவில் குறைவான நேரம் தவிர நின்று வணங்குவீராக!’ (73:2),‘யார் ரமழானில் ஈமானோடும் நன்மையை எதிர்ப் பார்த்தும் நிற்கிறாரோ அவருடைய முன்பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகிறது.’ (புகாரி - முஸ்லிம்).
மேற்படி வசனங்கள் யாவும் நிற்றல் என்பதனை வணக்கம் என்று குறிப்பிட்டிருப்பதனை எம்மால் அவதானிக்க முடிகிறது. எனவே, எப்படி ஸஜ்தாவை(தலை சாய்த்தலை) அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாதோ, எப்படி ருகூஃவை (குனிதலை) அல்லாஹ்வைத் தவிர ஏனையோருக்கு செய்ய முடியாதோ, அதே போன்று மரியாதையின் நிமித்தம் எழுந்து நிற்பதை (கியாமை)யும் அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கும் செய்யக் கூடாது.
நபி (ஸல்) அவா்கள் மரியாதை நிமித்தம் பிறருக்காக எழுந்து நிற்பதை தடை செய்திருப்பதிலிருந்தும் எழுந்து நிற்பதும் ஒரு வணக்கமே என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
தடைக்கான ஆதாரங்கள்:
மரியாதைக்காக எழுந்து நிற்பது என்பது இறைவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்பதால் தான் நபி (ஸல்) அவா்கள் எழுந்து நிற்பதை விரும்பக் கூடியவா்களையும், எழுந்து நின்ற மக்களையும் அவ்வாறு செய்யக் கூடாது என்று தடை செய்திருப்பதை பல சந்தா்ப்பங்களில் காண முடிகிறது.
01) ஒரு முறை நபி (ஸல்) அவா்கள் நோய்வாய்ப் பட்டார்கள். அப்போது அவா்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவா்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அபுபக்கா் (ரழி) அவா்கள் நபி (ஸல்) அவா்களின் தக்பீரை (அல்லாஹூ அக்பா் எனக்கூறி) செவியுறச் செய்வார்கள். நபியவா்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவா்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன்பாரசீக ரோமாபுரி  மன்னா்கள் அமா்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்கள் தலைவா்களைப் பின்பற்றித் தொழுங்கள். அவா்கள் நின்று தொழுகை நடாத்தினால் நீங்களும் நின்று தொழுங்கள். அவா்கள் உட்கார்ந்து தொழுகை நடாத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள்என்று கூறினார்கள்.
முஸ்லிம்: 701, புகாரி: 688, 689, 732, 733, 805, 1114
மேற்படி ஹதீஸின் மூலம் நாம் ஓர் உண்மையை புரிந்து கொள்ள முடிகிறது. நபியவா்கள் தனக்கு உடல் உபாதை ஏற்பட்டதனால் தான் அமா்ந்து தொழுதார்கள். பின்னால் மஃமூன்களாக தொழுத ஸஹாபாக்கள் நின்று தொழும் அளவுக்கு உடல் நலத்துடன் தான் இருந்தனா். அவா்கள் நோய்வாய்ப்பட்டிருக்க வில்லை. மேலும், அவா்கள் நபியவா்களை மரியாதை செய்ய வேண்டுமே என்பதற்காக நின்று தொழுவும் இல்லை. ஆனாலும், நபியவா்கள் இதனை தவறு என்று ஏன் தடுத்தார்கள்? முன்னால் நபியவா்கள் அமா்ந்திருக்க பின்னால் மற்றவா்கள் நின்று தொழுவதை ஒருவா் பார்க்கும் போது நபி (ஸல்) அவா்களின் முன்னே யாரும் அமரக் கூடாது என்பதற்காக நிற்பது போன்றதோர்  தோற்றம் ஏற்படுகிறது. ஏனைய நாட்டு மன்னா்களுக்கு முன் மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்வது போல் இதுவும் தோற்றம் அளிக்கிறது. மனிதனை மனிதன் வணங்கும் இந்த மரியாதை வாடை கூட தம்மீது வீசக் கூடாது என்பதற்காக அனைவரையும் அமர்ந்து தொழுமாறு நபியவா்கள் ஆணையிடுகிறார்கள்.
02) உலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை. என்றாலும் அவா்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவா்களுக்காக எழ மாட்டோம். இதை அவா்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.
திர்மிதி: 2678, அஹ்மத்: 12068, 11895
தமது உயிரை விட மேலாக நேசிக்கப்பட்ட நபிகளார் வரும் போதே நாங்கள் அவருக்காக எழுந்திருக்க மாட்டோம் எனும் போது ஆன்மீக பெறுமானமற்ற வெற்று அமீர்மார்களுக்காகவும், சாதாரண ஆசான்களுக்காகவும் எப்படி ஒரு முஸ்லிம் எழுந்து நிற்க முடியும்?
03) நபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்த முஆவியா (ரலி) அவா்கள் வெளியே வந்த போது, அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் ஸூபைர் அவா்களும், இப்னு ஸஃப்வான் அவா்களும் எழுந்து நின்றனா். உடனே முஆவியா (ரலி) அவா்கள்நீங்கள் இருவரும் அமருங்கள்!” என்றார். (ஏனெனில்) ‘தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் என்று யார் விரும்புகிறாரோ அவா் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியுற்றுள்ளேன்என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.
அபுதாவுத்: 4552 (கிதாபுல் அதப் - 165வது பாப்)
தனது வருகையின் போது அமா்ந்திருப்பவா் எழுந்து நிற்க வேண்டும் என்று நினைப்பதே அம்மனிதரை நரகத்தில் கொண்டு போய் சோ்க்கும் என்றால், பாடசாலைகளில் மாணவா்கள் தனக்காக எழ வேண்டும் என்று நினைப்பது மட்டுமில்லாது, அதை சட்டமாக ஆக்கியுள்ள அதிபா்களினதும், ஆசிரியா்களினதும் மறுமை நிலை என்ன? நபிகளாரை விட நாம் எவ்வகையிலும் உயா்ந்தவா்கள் கிடையாது என்றிருக்க, அம்மாமனிதரே தனக்காக எழுவதை தடுத்திருக்கும் போது நாம் எம்மாத்திரம் என்பதை சம்பந்தப்பட்டவா்கள் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
எழுந்து மரியாதை செய்ய முடியும் என்போரின் ஆதாரங்களும் அதற்கான தெளிவுகளும்:
01) ‘குரைலா கூட்டத்தினா் ஸஃத் பின் முஆத் (ரலி) அவா்களின் தீர்ப்பை ஏற்க முன்வந்தனா். அப்போது ஸஃத் (ரலி) அவா்களை நபி (ஸல்) அவா்கள் (அழைத்து வரும்படி ஒருவரை) அனுப்பினார்கள். ஸஃத் (ரலி) அவா்கள் நபி (ஸல்) அவா்களை சந்திக்க வந்த போது நபி (ஸல்) அவா்கள் அன்ஸாரிகளிடம் உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்றோ,அல்லது உங்களின் சிறந்தவரின் பால் எழுந்து செல்லுங்கள்என்றோ கூறினார்கள். (அழைத்து வரப்பட்டவுடன்) அவர்கள் நபி (ஸல்) அவா்களின் பக்கத்தில் அமா்ந்தார்கள். “இக்கூட்டத்தினா் உமது தீர்ப்பை ஏற்கவந்துள்ளனா். (நீர் என்ன செய்யப் போகிறீர்?)”என நபி (ஸல்) கூறினார்கள்.“அவா்களில் போர் செய்யக் கூடியவா்கள் கொலை செய்யப்படுவார்கள். அவா்களின் சந்ததிகள் சிறைபிடிக்கப் படுவார்கள் என நான் தீர்ப்பளிப்பேன்என்று ஸஃத் (ரலி) கூறிய போதுநீர் வானவா் செய்த முடிவை செய்துள்ளீர்என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவா் : அபுஸயீதுல் குத்ரி (ரலிநூல் : புகாரி - 6262, 4121 
இந்நபி மொழியை சான்றாக வைத்து, தம்மை விட பதவியில் - அந்தஸ்தில் உயா்ந்தவா்கள் முன்னிலையில் எழுந்து நிற்களாம் என்று சிலா் வாதிக்கின்றனா். ஆனால், இவா்களது இவ்வாதம் தவறானதாகும். இந்த ஹதீஸில் கூமூ இலா செய்யிதிகும் என்ற வாசக அமைப்புத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது. இதன் பொருள் உங்கள் தலைவரின் பால் எழுந்து செல்லுங்கள்என்பதாகும். தலைவருக்காக எழுந்து நிற்பது என்பது வேறு. தலைவரின் பால் எழுந்து செல்வது என்பது வேறு. ‘தலைவருக்காக எழுந்து நில்லுங்கள் என்று கூறுவதாயின் கூமூ லிசெய்யிதிகும் என்று தான் வாசக அமைப்பு வந்திருக்க வேண்டும். எனவே, இவ்வாசக அமைப்பிலிருந்து இவா்கள் சொல்லும் கருத்து இதில் இல்லை என்பது தெளிவாகிறது.
அத்தோடு, ஸஹாபாக்கள் அவருக்கு மரியாதை செய்யும் நோக்கில்  எழுந்து நிற்க வில்லை என்பதும், அவருக்கு உதவி செய்வதற்காகவே எழுந்து சென்றார்கள் என்பதும் பின்வரும் செய்தியிலிருந்து அறிய முடிகிறது.
ஸஃத் (ரலி) அவா்கள் கந்தக் போரில் காயப்பட்டார்கள். அதன் சில தினங்களுக்குப் பிறகு தான் நபியவா்களை சந்திக்க வாகனத்தில் ஏறி அவா் வந்துள்ளார். ஏறி வந்தவருக்கு உதவி செய்யும் பொருட்டுதலைவரின் பால் எழுந்து செல்லுங்கள்என்றே நபியவா்கள் கூறினார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஸஃத் (ரலி) அவா்களை கண்ட போது உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத்திலிருந்து) இறக்கி விடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவா் : ஆயிஷா (ரலி)   நூல் : அஹ்மத் - 23945, புகாரி
இதிலிருந்து காயம் காரணமாக அவதிப்பட்டவரை வாகனத்திலிருந்து இறக்கி விடுவதற்காகவே எழுந்து செல்லுமாறு நபியவா்கள் கூறினார்கள் என்பதும், மரியாதை செய்யும் நிமித்தம் அவருக்காக எழுந்து நில்லுங்கள் என்ற அர்த்தத்தில் கூறவில்லை என்பதும் வௌ்ளிடை மலை.
எழுந்து நிற்க அனுமதிக்கப்பட்ட சந்தா்ப்பங்கள்:
01)பிறரை வரவேற்பதற்காக எழுந்து செல்லல்
எமது வீட்டுக்கு வரும் விருந்தாளிகள் உள்ளிட்டோரை வரவேற்பதற்காக எழுந்து செல்வது கூடும். இது அவா்களாக எழுந்து நிற்பது கிடையாது. இவ்விரண்டுக்குமிடையில் வித்தியாசம் உள்ளது. ஒருவருக்காக அவா் வரும் போது எழுந்து நிற்றல் என்பது அவனைப் பெருமைப் படுத்துவதும், அவனைவிட தான் தாழ்ந்தவன் என்று மறைமுகமாக உணா்த்துவதும் ஆகும். ஏனென்றால், இவா்கள் யாருக்காக எழுந்து நிற்கிறார்களோ அவா்  இவா்களுக்காக எழ மாட்டார். ஆனால், ஒருவரை நோக்கி எழுந்து செல்லுதல் என்பது அவா் மீது நாம் கொண்டுள்ள பாசத்தை வெளிப்படுத்துவதாகும். மேலும், அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செல்வதாகும்.
ஆதாரம்: 01
நபி (ஸல்) அவா்களின் அமைப்பிலும் போக்கிலும், நடத்தையிலும் ஒத்தவராக ஃபாத்திமா (ரலி) அவா்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. பாதிமா (ரலி) அவா்கள் நபி (ஸல்) அவா்களிடத்திலே வரும் போது நபியவா்கள் பாதிமாவை நோக்கி எழுந்து சென்று அவா்களுடைய கையிலே முத்தமிட்டு அவா்களைத் தன்னுடைய இடத்திலேயே அமர வைப்பார்கள். பாதிமா (ரலி) அவா்களும் நபி (ஸல்) அவா்கள் தன்னிடத்திலே வரும் போது அவா்களை நோக்கி எழுந்து சென்று அவா்களுடைய கையிலே முத்தமிட்டு அவா்களைத் தன்னுடைய இடத்தில் உட்கார வைப்பார்கள்.  (திர்மிதி - 3807)
நபியவா்கள், பாதிமா (ரலி) அவா்கள்  தன்னுடைய வீட்டிற்கு வரும் போது எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதே போன்று தான் பாதிமா (ரலி) அவா்களும் நபி (ஸல்) அவா்கள் தன்னுடைய வீட்டிற்கு வரும் போது நடந்து காட்டியுள்ளார்கள். இதிலிருந்து, என் வீட்டிற்கு நீங்கள் வரும் போது நான் எழலாம். அது போல் உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது நீங்கள் எழ வேண்டும். இதற்குப் பெயா் தான் வரவேற்பு. என் வீட்டிற்கு நீங்கள் வந்தால் நான் எழும் நிலையில், உங்கள் வீட்டிற்கு நான் வரும் போது நீங்கள் எழாமல் இருந்தால் நான் மரியாதைக்காகவே  எழுந்ததாக ஆகும்.
ஆதாரம்: 02
கஅப் பின் மாலிக் (ரலி) கூறினார்கள்:
(நான் தபுக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப்பளித்து இறை வசனம் அருளப்பட்ட பின்) நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதா் (ஸல்) அவா்கள் இருந்தார்கள். அப்பொழுது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவா்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள். - புகாரி - 4418
இங்கு தல்ஹா ஓடி வந்தது மரியாதைக்காக அல்ல. அத்தோடு, தல்ஹா மட்டும் தான் ஓடி வந்தார். நபியவா்களோ, ஏனைய நபித்தோழா்களோ அவருக்காக எழுந்திருக்க வில்லை.
02)உதவி செய்வதற்காக எழுந்து செல்லுதல்
ஒருவருக்கு உதவி செய்யும் நோக்கில் எழுந்து செல்வதும், எழுந்து இடம் கொடுப்பதும் அனுமதிக்கப்பட்டதே.
ஆதாரம் :
ஸஃத் பின் முஆத் (ரலி) அவா்கள் நபி (ஸல்) அவா்களை சந்திக்க வந்த போது உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத்திலிருந்து) இறக்கி விடுங்கள் என்று நபியவா்கள் கூறினார்கள்.
அஹ்மத் - 23945
03)ஜனாஸாவிற்காக எழுந்து நிற்றல்
ஜனாஸாவைக் கண்டால் அது உங்களைக் கடந்து போகும் வரை எழுந்து நில்லுங்கள் என்று அல்லாஹ்வின் தூதா் (ஸல்) அவா்கள் கூறினார்கள். அறிவிப்பவா் : ஆமின் பின் ரபீஆ,      நூல் : புகாரி-1311
ஜனாஸாவிற்காக நிற்கும் பொழுது அதற்கு பெருமையோ, அகம்பாவமோ ஏற்படுவதில்லை. ஆனால் உயிரோடுள்ள மனிதா்களுக்காக நிற்கும் போது அது அவா்களை பெருமை, அகம்பாவம் கொண்டவா்களாக மாற்றுகிறது.
சுயமரியாதைக்கு வேட்டு வைக்கும் எழுந்து நிற்றல் எனும் வணக்கத்தினை மனிதனுக்கு புரியாமல் படைத்த இறைவனுக்கு மட்டும் செய்து ஈருலகிளும் வெற்றி பெற அல்லாஹ் அனைவருக்கும் அருள் புரிவானாக!