Pages

Friday, August 24, 2012



நுழைவாயில்
எம்.டீ.எம்.பர்ஸான்

கருகும் மியன்மாரும் காத்திருக்கும் இலங்கையும்

உலக வரை படத்தில் அன்பே அடிப்படைஎன்ற கொள்கையைக் கொண்ட பௌத்த தேசம் என அடையாளப்படுத்தப்பட்ட மியன்மார்(ர்மா), இன்று நரமாமிச வேட்டையாடும் அரக்கத்தனத்திற்கு எடுத்துக் காட்டாய் திகழ்கிறது. மேற்கு மியன்மாரின் ராக்கோன் மாநிலத்தில் ஜீவிக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள்பெரும்பான்மை இனமாகிய பௌத்தர்களால் முழுமையான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனா. காவி உடை தரித்த காடையர்களின் தலைமையில், இராணுவ - அரசியல் பின்புலத்துடன் கதறக்கதற வெட்டிச் சாய்த்தும், சுட்டெரித்தும், கற்பழித்தும் கொலை செய்யப்பட்ட அப்பாவி முஸ்லிம் உயிர்களின் எண்ணிக்கை இற்றை வரை 30 000 ஆயிரத்தை அண்மித்துவிட்டது.

சமாதானப் புறாவாக உலகை வலம் வரும் ஜனநாயகவாதி ஆங்சான் சுகி, ஆன்மீக வாதியாக அடையாளப்படுத்தப்படும்  தலாய்லாமா மற்றும் மனித உரிமைக்காய் குரல் கொடுப்பவர்கள் என்று மார்தட்டும் மேற்குலக வல்லாதிக்க நாடுகள் உள்ளிட்ட எவரும் மியன்மாரின் கொலைக்களத்தை கண்டித்து இது வரை எதிர் நடவடிக்கைகள் எடுக்காமல் மௌனம் சாதித்தே வருகின்றனர். மெரிக்காவின் எலும்பை உண்டுவிட்டு வாலை ஆட்டித்திரியும் சாவதேச முஸ்லிம் உம்மத்தின் உறுப்பு நாடுகளான அரபு தேசங்களோ எதுவுமே நடைபெறாதது போன்று சமூக பிரக்ஞையின்றி இருப்பது எமது உம்மத்தின் உணர்வுகள் கூட செத்துவிட்டன என்பதையே வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

தினந்தோரும் குருதிச் சொட்டுக்களால் உறைந்து காணப்படும் மியன்மாரின் அட்டூழியத்தினை இலங்கை தேசத்தின் அரசியல் தலைமைகளாவது கண்டித்து அறிக்கை ஆர்ப்பாட்டங்கள் புரிந்தார்களா என்றால் அதனையும் எங்கும் காணமுடியவில்லை. தன்னினத்தவன் அட்டூழியம் புரிந்தாலும் அது அகிம்சை தான் என்ற இனவாத உணர்வு இன்று நம் மண்ணிலும் ஆழமாய் வேர்விட்டு வளர ஆரம்பித்துள்ளமை நம்மவர்களுக்கான அபாய சமிக்ஞையாகவே கருதவேண்டியுள்ளது.

கருகும் மியன்மாரின் தீப்பொறி இலங்கையையும் கருகச் செய்யுமோ என்று சிந்திக்க வேண்டிய தருணத்தில் இன்று இலங்கை முஸ்லிம்கள் உள்ளனர். தம்புள்ளை, குருனாகல, தெஹிவலை என்று ஆரம்பித்த முஸ்லிம் விரோதப் போக்கு இன்று பல்பரிணாமம் பெற்று வியாபித்து வருவது கவலைக்கிடமானது, கண்டிக்கத்தக்கது. தம்பகம மஸ்ஜிதுல் அர்க்கம் ஜூம்ஆ பள்ளிவாசல் முற்றவெளியில் பிரித் ஓதி தொழுகையை இடை நிறுத்துமாறு பிக்குமார்கள் நடாத்திய அராஜகம், கொழும்பு - 07 எம்.எச்.எம்.அஷ்ரப் மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் அதனை அண்டிவாழும் குடும்பங்களையும் இடம்பெயரச் செய்து விட்டு அவ்விடத்தில் ரஷ்ய தூதுவராலயத்தின் 4 மாடி கட்டடத்தை நிர்மாணிக்க புர்வாங்க ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை, ராஜகிரிய கிரீடா மாவத்தையில் அமைந்துள்ள பள்ளிவாசலில் முஸ்லிம்கள் வழமைக்கு மாற்றமாக அதிகமாக வந்ததனை சாட்டாக வைத்து தொழுகையை தடுப்பதற்கு பிக்குமார்கள் ஒன்று திரண்டமை, கிண்ணியா பாலத்திற்கு அருகில் முஸ்லிம் கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வரவேற்பு கோபுர நிர்மாணப்பணிகளை இடைநிறுத்துமாறு பேரின அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளமை, திருகோணமலை மாவட்ட அநுராதபுர எல்லைக்கிராமமான ரொட்டவௌ பகுதியில் பரம்பரை பரம்பரையாக செய்து வரப்பட்ட சேனைப் பயிர்ச்செய்கை காணியும் விவசாயக் காணியும் வனவள அதிகாரிகளினால் பரிமுதல் செய்யப்பட்டு வருகின்றமை, மன்னார் உப்புக்குளம் முஸ்லிம் மீனவர்களுக்குரிய கோந்தப்பிட்டி துறியனையை விடத்தல் தீவு கிறிஸ்தவ மீனவர்களுக்குரியதாக நீதிபதியினால் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை, மன்னார் நானாட்டான் பிரதேசத்தில் நொச்சிக்குளத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களுக்கெதிராய் ஆர்ப்பாட்டம் செய்தமை, சன்னார் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மீள்குடியேற வந்த போது அவர்களது காணிகளை கொடுக்காததோடு வேறு இடத்திலும் காணிகளை வழங்கக் கூடாது என்று மன்னார் ஆயா ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியமை, புதுக்குடியிருப்புக்கும் எருக்கலம்பிட்டிக்கும் இடைப்பட்ட பகுதியில் 200 முஸ்லிம்களுக்கு சொந்தமான 1500 ஏக்கர் காணியினை தனியொரு தமிழருக்கு வழங்கியமை, ரியும் தீயில் எண்ணெய் வார்ப்பது போல் தம்புள்ளை புனித புமி பிரச்சினைக்கு அடுத்த இரண்டு மாதங்களில் தீர்வு கிடைக்காவிட்டால் பாரிய அழிவுகள் ஏற்படும்என்று அஸ்கிரிய மகாநாயக்க உடுகம ஸ்ரீபுத்தரக்கித்த தேரர் விடுத்துள்ள மிரட்டல், ‘இன்று எமக்குள்ள பிரச்சினை தமிழ் பயங்கரவாதமல்ல! இஸ்லாமிய தீவிரவாதமே! இதற்காக ஆர்ப்பாட்டங்கள் செய்ய வேண்டும்என்று இனவாதத்தை கக்கியவண்ணம் களமிறங்கியுள்ள பௌத்த செயல் முன்னணியின் சுடு பரக்கும் அறிக்கை, தமிழ் மக்களை முஸ்லிம்களுக்கெதிராய் கிளர்ந்தெழச் செய்யும் விதத்தில் கல்முனைக்குச் செல்லும் தமிழ் பெண்கள் முஸ்லிம் வியாபாரிகளிடம் இலவசமாக பொருட்களைப் பெற்றுக் கொள்ளும் நோக்கில் விபச்சாரத்தில் ஈடுபடுகின்றார்கள்முஸ்லிம்கள் தன்னினப் பெண்களை அடக்குமுறையில் வைத்து விட்டு எமது தமிழ் பெண்கள் மீது சுகம் கொள்கின்றார்கள்என்ற வரிகளுடன் மட்டக்களப்பில் விநியோகிக்கப்பட்ட துண்டுப்பிரசுரம் உள்ளிட்ட அண்மைய முன்னெடுப்புகள் யாவும் இலங்கை முஸ்லிம்களை இலக்கு வைத்து பேரின மற்றும் தமிழ் கிறிஸ்தவ இனவாதிகள் தொடுக்கும் இனவாத தாக்குதலாகவே கருதப்பட வேண்டியுள்ளது.

ரியும் மியன்மார் தீச்சுவாலையின் பின்புலத்தில் இருந்து கொண்டு இலங்கை முஸ்லிம்களையும் அவர்களின் இருப்பையும் சேர்த்து கருகச்செய்வதற்கான காய் நகர்த்தல்களாகவே மேற்படி நிகழ்வுகளை எம்மால் நோக்க முடிகிறது. பதவிகளை தக்க வைப்பதற்காய் போராடி சிதறிய செங்கற்கள் துகள்களாய் நாட்புறமும் சிதறிக் காணப்படும் வங்குரோத்து முஸ்லிம் அரசியல் தலைமைகளை நம்பி நம் சமுதாயத்தின் இருப்பை ஸ்தீரப்படுத்த நினைப்பது வெறும் பகற்கனவாகவே அமைய முடியும்.

அல்லாஹ்வின் அச்சத்தை உள்ளத்தில் இருத்தி, கட்சி அரசியலுக்கு அப்பால் நின்று, சமுதாய அக்கறையுடன் களத்தில் இறங்கும் மாற்று சக்திகள் குறித்து முஸ்லிம்கள் சிந்திக்க வேண்டிய தருணத்தில் இருக்கிறார்கள். சிந்திக்குமா நம் சமுதாயம்???
 

ஆகஸ்ட் மாத அழைப்பு இதழின் ஆசிரியர் கருத்து