Pages

Sunday, June 5, 2011

உன்னத உம்மத்தின் உயர்பண்பு : தீமை ஒழிப்பு!


நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (3:110)

ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் என்று படைக்கப்பட்டார்களோ, அன்று முதல் இன்று வரை சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான கொள்கைப் போராட்டம் ஆரம்பித்து விட்டதை நாம் அறிவோம். சத்தியவான்கள் நன்மைகளை வாழ வைக்கும் பணியிலும், அசத்திய வான்கள் தீமைகளை கட்டவிழ்த்து விடும் கயமைத்தனத்திலும் களமிறங்கியிருப்பதை பார் எங்கும் பரவலாக அவதானிக்க முடிகிறது.

ஷைத்தானிய சுழ்ச்சியில் சிக்குண்ட மனித குலம், தம் அற்பத்தனமான ஆசைகளை அடைவதற்காய், மானிடப் பண்புகளை மறந்து, ஈவிரக்கமற்ற மா பாதகச் செயல்களை கூட நாணமற்றுச் செய்யும் நிலைக்கு தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எத்திசை நோக்கினும் தீமைகளின் சுவாலை சுட்டெறித்த சுவடுகள் எச்சங்களாய் எஞ்சியிருப்பதை காணமுடிகிறது.
பள்ளிப் பாலகன், முதல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வரை ஆண் - பெண் வித்தியாசமின்றி குற்றச் செயல்கள் இழைத்து குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தப்படும் அவலம் சர்வசாதாரணமாய் அரங்கேறி வருகிறது, எதிர் காலம் குறித்த ஐயப்பாடுகள் அனைவர் அகத்திலும ஆழமாய் வேரூண்றி வருகிறது என்றால் மிகையாகாது.

உலகையே ஆக்ரமித்து ஆரத்தழுவியிருக்கும் அராஜகங்களின் பிடியிலிருந்து இம்மனித குலத்தை மீட்டெடுக்கும் மகத்தான பொறுப்பு, ஏகன் அல்லாஹ்வை ஏற்றிருக்கும் ஏகத்துவ வாதிகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளதை நம்மவர்கள் புரிந்து கொள்ளாமை கசப்பான உண்மையாகும்.

ஒரு புறத்தில், ஈமானைப்பறித்து மனிதர்களை நரகின் நிரந்தர எறிகற்களாய் மாற்றும் முஸ்தீபுகளில் பல வழிகெட்ட இயக்கங்கள் முனைப்புடனும், திட்டமிட்ட அடிப்படையிலும் இந்நாட்டில் வேர் பிடித்து வளர்ந்து வருகின்றன. அல்குர்ஆனை மறுத்து, அருமை ஸஹாபாக்களை காபிர்களாக்கும் ஷீயாயிஸம், போராக்கள், தஃவதே இஸ்லாமி போன்ற சீர்கெட்ட சிந்தனைகள் நுணுக்கமாய் தம் காய் நகா;த்தல்களில் ஈடுபடுவதை காணமுடிகிறது. வெளிகமையைச் சேர்ந்த மிலேனியம் கல்வி ஸ்தாபனம், ஓட்டமாவடியைச் சேர்ந்த மன்பஉல் ஹூதா அரபுக்கல்லூரி  போன்ற கல்வி நிறுவனங்கள் ஊடாகவும், முஸ்லிம் வர்த்தகச் சேவையில் வாழ்வும் பண்பாடும்என்ற நிகழ்ச்சியின் மூலமும், கருத்துக்களம் என்ற தொடர் வெளியீடுகள் வாயிலாகவும் இவர்களின் கருத்துகள் முஸ்லிம்களின் காதுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

மறுபுறத்தில் இறுதி நபித்துவத்தை மறுதலித்து, மீண்டும் ஒரு நபி வருவார் எனும் நச்சுக்கருத்தைக் கொண்ட காதியானிஸம், மஹ்தி பவுண்டேஷன் உள்ளிட்ட வழிகேடுகள் நீர்கொழும்பு , கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வேகமாய் படர்ந்து வருகின்றன. இன்னொரு புறம், இயற்கை பொருட்கள் யாவும் அல்லாஹ் எனும் அத்வைத சிந்தனையை ஏந்திப்பிடிக்கும் தரீகதுல் முப்லிஹீன்’, யாழ்ப்பாணம் ஸூபி பாவா முஹியத்தீன்,காத்தான்குடி அப்துர் ரஊப் போன்றோரின் கருத்துக்கள் இன்றளவும் துளிர் விட்டவன்னம் உள்ளன. பிரிதொரு புறம், மரணித்தவர்களின் சமாதிகளில் வீழ்ந்து, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் தர்கா வழிபாடு, தரீகா களியாட்டங்கள் தென் மாகாணம், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் புறையோடி வருகின்றன. மறுபுறம், முஸ்லிம்களை காபிராக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீன், கிலாபத் கோஷமிடும் ஜமாஅதே இஸ்லாமி, ஹிஸ்புத்தஹ்ரீர், இஹ்வானிஸம் போன்ற நவீனத்துவ வாதிகள் எழுச்சியடைந்து வருகின்றனர்.

நபிவழியை கொச்சை படுத்தும் கத்தம், பாதிஹா, கொடியேற்றம், வெட்டு குத்து ராதிபு, கந்தூரி, மீலாது, மவ்லூது போன்ற அனாச்சாரங்கள் முன்பைவிட உத்வேகத்தோடு எழுச்சி பெறுவதை காணமுடிகிறது. கொள்கை ரீதியான இத்தீமைகள் ஒருபுறம் வளர, மறுபுறம் சமூகத்தை சிதறடிக்கும் தீமைகள் வேகமாய் அதிகரித்தும் வருகின்றன.
விபச்சாரம், ஆபாசம், கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் சேஷ்டைகள், கொலை, கொள்ளை, மது, சுது, சீதனம், அரசியல் பலிவாங்கள்கள், கருத்துச் சுகந்திரம் பறிக்கப்படல் போன்ற வன்கொடுமைகள் களைகட்டி வலம் வந்தவன்னம் உள்ளன.

இத்துனை தீமைகளுக்கும் முன்னால் எதிர்த்து நின்று போராட வேண்டிய தவ்ஹீதுவாதிகள் இத்தீமைகளை கண்டுகொள்ளாது மௌனம் சாதிப்பது எம் பொறுப்புக்களை உதாசீனப்படுத்துவதாக மாட்டாதா? தீமையை கண்டால் கரத்தால் தடுக்க வேண்டிய சமூகம் கையாலாகாத சமூகமாய் கைக்கட்டி வாய் பொத்தி நின்றால் அது தீமைகளுக்கு துணைபோனதாக மாட்டாதா? உன்னத சமூகமென படைத்தவனால் பட்டம் சுட்டப்பட்ட நாம் தீமைகளுக்கு முன் உயிர்த்துடிப்பற்று உறக்க நிலையில் இருக்கலாமா?

கொள்கைவாதிகளே! உங்கள் பணியின் சுமையை உணர்ந்து களப்பணி புரிய உங்களை அன்புடன் அழைக்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத். ஓன்று படுவோம்! ஓரணிப்படுவோம்! தீமைகளுக்கெதிராய் குரல் கொடுக்கும் உன்னத சமூகமாய் எழுந்து நிற்போம்!