Pages

Saturday, September 24, 2011

بسم الله الرحمن الرحيم
(அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பிக்கிறேன்)
அல்லாஹ் என்றால் யாருங்க?
அல்லாஹ் என்பவன் உங்கள் இறைவன்
  • நீங்கள் அல்லாஹ்வை வணங்கினாலும், அவனை வணங்கா விட்டாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வுக்கு இணைவைத்தாலும், அவனுக்கு இணைவைக்காவிட்டாலும் அவன்தான் உங்கள் இறைவன்!
  • நீங்கள் அல்லாஹ்வை விரும்பினாலும், அவனை வெறுத்தாலும் அவன் தான் உங்கள் இறைவன்!
கடவுள் என்று ஏதாவது இருக்கிறதா?
  • சூரியன் வெளிச்சம் தருகிறது அந்த வெளிச்சத்தை நோக்கி பூமி உட்பட அனைத்து கோள்களும் நகர்கிறது இதன் மூலம் பகல்களும், இரவுகளும் ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • பூமி ஒரே சீராக சுழல்வதால் தட்ப வெப்ப சீதோஷ்ணத்தில் மாறுபாடுகள் ஏற்பட்டு குளிர்காலம், மழைக்காலம், வெயில்காலம் ஆகியன ஏற்படுகிறது இதை நிர்வகிப்பது யார் மனிதனா?
  • நீங்கள் சுவாசிக்கும் காற்று உங்களின் சுவாசக்குழாயில் முறையாக வந்தடைகிறது அதை கொடுப்பது யார் மனிதனா?
  • நிலப்பரப்பில் உள்ள ஈர்ப்பு சக்தியால் நாம் நடக்கிறோம், அமர்கிறோம், ஓடுகிறோம் இந்த ஈர்ப்பு சக்தியை நிர்வகிப்பவன் யார் மனிதனா?
  • நிலத்தில் மனிதன் உழுகிறான் அவனுக்கு விதையை அறிமுகப்படுத்தியவன் யார் மனிதனா?
  • கடல் நீரை மழை நீராக்கி பருகுவதற்கும் நிலத்தை உழுவதற்கும் வானிலிருந்து கொட்டச் செய்பவன் யார் மனிதனா?
  • ஆகாயத்தில் பறக்கும் விமானத்திற்கு பாதையாக வானத்தை கொடுத்தவன் யார் மனிதனா?
  • குடும்ப உறவு கொள்ள மனிதர்களின் உடலில் விந்துத்துளிகளை செலுத்தியவன் யார் மனிதனா?
  • வயிற்றுப் பசியை தனிக்க மலம் சாப்பிடுவதில்லை மாறாக உணவு உட்கொள்கிறோம், தாகத்தை தனிக்க சிறுநீரை குடிப்பதில்லை மாறாக சுத்தமான நீரை பருகுகிறோம் மனிதனுக்கு இந்த பகுத்தறிவை கொடுத்தவன் யாரோ அவனே இறைவன்!
இறைவன் இல்லை என்று சொல்பவன் நாத்திகன் இவன் மாபெரும் பொய்யன் இவனுடைய கழுத்தில் கத்தியை வைத்தால் கடவுளே என்பான் காப்பாற்றப்பட்டவுடன் கடவுள் யார் என்பான்!
அல்லாஹ்வுக்கு பிறப்பு உள்ளதா?
ஒவ்வொரு மனிதனும் படைத்த இறைவனை தன்னுடைய பலவீனமான ஸ்தானத்தில் வைத்துத்தான் பார்க்கிறான் படைத்த இறைவனை இறைவன் என்ற ஸ்தானத்தில் வைத்து பார்ப் பதில்லை.
சிந்தித்துப்பாருங்கள்! உங்கள் தாயின் வயிற்றில் நீங்கள் 3 மாத கருவாக இருந்தீர்கள் அந்த குறிப்பிட்ட 3 மாதங்களுக்கு முன்பு நீங்கள் என்னவாக இருந்தீர்கள் என்பதை கூற முடியுமா?
ஒரு மனிதன் தன் தாயின் வயிற்றில் 3 மாத கருவாக இருப்பதற்கு முன் அற்பத்திலும் அற்பமான ஒரு ஆட்டின் புளுக்கையாக கூட இருந்திருக்கவில்லை அப்படிப்பட்ட மனிதனை இறைவன் கருவாக உருவாக்கி, அதனுள் உயிர் கொடுத்து, பெயர் கொடுத்து, பெற்றோரை கொடுத்து கல்வி அறிவைக் கொடுத்து உலகில் வாழவைத்து மனிதனாக்கி சிந்திக்க மூளையை கொடுத்தால் இவன் படைத்த இறைவனின் பிறப்பை பற்றி சிந்தித்து கேள்வி எழுப்புகிறான். இந்த மனிதன் இறைவனுக்கு நன்றியுள்ள அடியானாக இருப்பதை காட்டிலும் நன்றிகெட்டவனாகத்தான் வாழ்ந்து மடிகிறான்!
இன்னும்; அவன்தான் உங்களை வாழச் செய்கிறான்; பிறகு அவனே மரணம் அடையச் செய்கிறான். அதன் பின்னர் அவனே உங்களை உயிர்ப்பிப்பவன் (எனினும்) நிச்சயமாக மனிதன் நன்றிகெட்டவனாக இருக்கிறான் (அல்குர்ஆன் 22:66)
அல்லாஹ்வுக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனரா?

ஒரு மனிதனுக்கு மனைவியும், பிள்ளைகளும் இருப்பது அவனுடைய வம்சத்தை பல்கிப் பெருகுவதற்காகவே தவிர வேறு எதற்கும் இல்லை. ஒரு ஆணும் பெண்ணும் குடும்ப வாழ்வில் ஒன்று சேருவதன் மூலமாக தந்தை, மகன், பேரன், கொள்ளுப்பேரன் என்று வம்சம் அபிவிருத்தியாகும் அதே நேரம் குடும்பத்தில் மரணங்கள் சம்பவிக்கும் காரணம் மனிதன் மரணிக்க பிறந்தவன்! இதோ மனித இனமும் அவனது குடும்ப அபிவிருத்தி பற்றிய விழிப்புணர்வு படம்.
மனிதனுக்கு அவனுடைய குடும்பம் சோதனைக் களமாக இருக்கிறது அவன் தன் தாயை, தந்தையை, சகோதர உறவை, மனைவியை, மக்களை என்று அனைவரையும் முறையாக கவனிக்கிறானா? இவர்களுக்காக உழைக்கிறானா? திருடுகிறானா? அல்லது இவன் குடும்பத்தை மறந்து தவறான பாதையில் செல்கிறானா? என்பதுதான் அந்த சோதனை! இந்த சோதனைகளை கொடுப்பவன் இறைவன் எனவே இறைவனை எவனும் சோதிக்க இயலாது மேலும் அவனுக்கு குடும்பமும் கிடையாது!
அல்லாஹ் ஒருவன்என (முஹம்மத்) நீர் கூறுவீராக!. அல்லாஹ் தேவையற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை (யாருக்கும்) பிறக்கவும் இல்லை. மேலும் அவனுக்கு நிகராக ஒருவரும் இல்லை. (அல்குர்ஆன்- 112)
அல்லாஹ் ஒருவன், அவனுக்கு இணை துணை கிடையாது!
இஸ்லாம் போதிக்கும் கடவுள் கொள்கை உலகில் உள்ள மற்ற மதங்களின் இறைக் கொள்கைகளை விட சற்று வேறுபட்டு நிற்கிறது. காரணம் இஸ்லாம் ஓரிரைக் கொள்கையை போதிக்கிறது மற்ற மதங்கள் அனைத்தும் பல கடவுள் கொள்கையை போதிக்கிறது!
ஒரு இறைவன் என்ற ஓரிரைக் கொள்கைதான் உண்மை என்பதற்கு கீழ்கண்ட காரணங்கள் தெளிவாக விளக்கும்
நீதி செலுத்த ஒரு இறைவன்தான் இருக்க வேண்டும்!
ஒருவனுக்கு அநீதி இழைக்கப்படும் போது அநீதி இழைக்கப் பட்டவனுக்கு உரிய நீதியை முறையாக செலுத்த வேண்டும் உதாரணமாக மூன்று கடவுள்கள் இருந்தால்
படைக்கும் கடவுள்
இந்த மனிதனை நான் படைத்தேன் இவன் பாவியாகிவிட்டான் இவன் என்னை வழிபட்டான் எனவே படைத்த நானே இவனை மன்னிக்கிறேன் என்று கூறும்
கண்காணிக்கும் கடவுள்
இந்த பாவியை நான் கண்காணித்து வந்தேன் என் கண்ணால் கண்ட நான் இவனை எவ்வாறு மன்னிக்க இயலும் என்று கூறும்
அழிக்கும் கடவுள்
படைக்கும் கடவுள் மனிதனை படைத்துவிட்டது, கண்காணிக்கும் கடவுள் பாவியை கண்காணித்துவிட்டது எனவே அழிக்கும் கடவுளாகிய நான்தான் இவனை தண்டிப்பதா? மன்னிப்பதா என்று தீர்மானிக்கும் உரிமை படைத்தவன் என்று கூறும்
ஒன்றுக்கு மேமற்பட்ட அல்லது மூன்று கடவுள்களாகவோ இருந்தால் தங்களுக்குள் பிரச்சினையை தீர்க்க முடியாமல் வெவ்வேறு கருத்து வேறுபாடுகளைக் கொண்டு தங்களுக்குள் உட்பூசல்கள் ஏற்படுத்திக்கொள்ளும் ஆனால் ஓரிரைக் கொள்கையை போதிக்கும் இஸ்லாம் அல்லாஹ் ஒருவனை மட்டும் கடவுளாக முன் நிறுத்துகிறது அந்த ஒரு இறைவனாகிய அல்லாஹ் தான் நாடினால் தனக்கு இணை கற்பித்த பாவத்தை தவிர மற்ற பாவங்களை செய்த பாவியைக் கூட மன்னிப்பதாகவும் தான் நாடினால் தனக்கு இணை கற்பிக்காமல் தான் வகுத்த சட்டத்தை மீறிய நல்ல அடியானைக் கூட தண்டிப்பதாகவும் கூறுகிறது.
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப்பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.’ (அல்குர்ஆன் 4:48)
ஒரு இறைவனாக இருந்தால் எதற்கும் அடிமையாக முடியாது!
பல கடவுள்கள் இருந்தால் அத்தனை கடவுள்களும் கருத்து வேறுபாடுகள் தோன்றும் இறுதியாக ஏதாவது ஒரு கருத்தின் பக்கம் தலைசாய்க்க ஒரு வஸ்துவிடம் அனைத்து கடவுள்களும் கை கட்டி நின்று கட்டுப்பட வேண்டிய சூழ்நிலை ஏற்படும் இப்படிப்பட்ட நிலையில் அந்த ஒரு வஸ்து அனைத்து கடவுள்களுக்கும் அறிவுரை கூறி அவர்களை கட்டுப்படுத்தி விட்டால் அந்த வஸ்து கடவுளாகவும் அந்த வஸ்துவுக்கு முன் குழுமி நின்று கைகட்டி நிற்பவை அனைத்தும் அந்த வஸ்துவின் அடிமையாகத்தான் இருக்கும் எனவே கட்டுப்படும் கடவுள்கள் என்று எதுவும் கிடையாது.
அல்லாஹ் ஒருவன், அவன் தனித்தவன் அவன் கட்டுப்படுத்தும் அதிகாரம் படைத்தவன் தவிர தான் படைத்த வஸ்துக்களிடம் கட்டுப்பட வேண்டிய இழிவான சூழ்நிலை அவனுக்கு இல்லை எனவேதான் அல்லாஹ் உங்கள் இறைவனாக இருக்கிறான் இந்த இறைவனுக்கு நீங்கள் அடிமையாக இருக்க சந்தோஷப்பட வேண்டும்!
அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தை கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கிறானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும்என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் (அவனை) எப்பொழுதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன்: 17:111)
ஒரு இறைவனால் அனைத்தையும் நிர்வகிக்க இயலும்!

உங்கள் உடம்பில் கோடிக்கணக்கான இரத்த அணுக்கள் காணப்படுகின்றன, நூற்றுக்கணக்கான உறுப்புகள் இயங்குகின்றன அத்தனை உறுப்புக்களையும், கோடானு கோடி இரத்த நாளங்கள் மற்றும் இரத்த அணுக்களையும் நிர்வகிப்பதற்கு உங்கள் உடம்பில் உங்கள் உயிரை அல்லாஹ் படைத்துள்ளான் நீங்கள் உங்களை அறியாமலேயே உங்கள் உடலை நிர்வகிக்கிறீர்கள் இப்படிப்பட்ட உங்களுக்கே இப்படியொரு ஆற்றலை இறைவன் கொடுத்திருக்கும் போது கடவுளாகிய அல்லாஹ்வுக்கு அண்டசரா சரங்களையும் ஒருவனாக இருந்து நிர்வகிக்க ஆற்றல் இருக்காதா? என்ன!
உங்கள் உடம்பில் உங்களுடைய ஒரு உயிர் இருப்பதால்தான் உங்கள் உடம்பிற்கான கட்டளைகளை உங்களால் சீராக செலுத்த முடிகிறது அதுவே இரண்டு ஆதம்மாக்கள் உங்கள் உடம்பில் இருந்தால் கட்டளைகளில் முரண்பாடு ஏற்பட்டு மூளை பலவீன மடைந்துவிடும்! இதே போலத்தான் ஒரு இறைவன் (அதாவது அல்லாஹ்) இந்த அண்டசராசரங்களுக்குத் தேவையான கட்டளைகளை பிரப்பித்து நிர்வகித்து வருகிறான் மாறாக ஒன்றுக்கு மேற்பட்ட கடவுள்கள் இருந்தால் கட்டளைகள் ஒழுங்காக சென்று சேராது! அல்லாஹ் அவன் மிக்க அறிவாளியாகவும் ஞானமுள்ளவனாகவும் உள்ளான் இதைப் பற்றி அருள்மறை குர்ஆன் கீழ்கண்டவாறு வர்ணிக்கிறது!
உங்களுடைய நாயன் அல்லாஹ் ஒருவன்தான்; அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறில்லை எல்லாப் பொருட்களிலும் ஞானத்தால் விசாலமானவன்என்றும் கூறினார்.(அல்குர்ஆன் 20:98)
உங்கள் இறைவன் அல்லாஹ் குற்றம் இல்லாதவன்!
பாவம் செய்வது மனித இயல்பு பாவமற்றவன் இறைவன் எனவேதான் கடவுள் என்று எண்ணி ஒரு வஸ்துவுக்கு கை, கால்கள் கொடுத்து நெற்றியில் கண்ணை பதித்து மனித ரூபத்தில் ஒரு சாரார் ரசித்தனர் இறுதியல் அந்த வணங்கப்படும் வஸ்துவை நோக்கி நெற்றிக்கண் திறந்தாலும் குற்றம் குற்றமே என்று கூறி தங்கள் கடவுள் கூட பாவம் செய்யும் என்ற கண்ணோட்டத்தில் கண்டார்கள். ஆனால் இப்படிப்பட்ட இழிவு அல்லாஹ்வுக்கு கிடையாது அவன் குற்றம் குறையற்றவன்.
இரண்டு கடவுள்கள் இருந்தால்தானே நம்மை போன்று குற்றம் குறை கண்டுபிடித்து சண்டை போடவோ அல்லது பொய் சொல்லவோ முடியும் ஆனால் படைத்த இறைவன் ஒருவனாக இருக்கும்போது குற்றம் என்ற பேச்சுக்கே இடமில்லை அந்த ஓரிரைவன் எதை செய்தாலும் நிறையாகவே காணப்படும்!
உங்கள் இறைவன் அல்லாஹ் குறை இல்லாதவன்!
இரண்டு கடவுள்கள் இருந்தால்தான் இந்த கடவுளுக்கு இந்த குறை உள்ளது அந்த கடவுளுக்கு அந்த நிறை உள்ளது என்று கூறமுடியும் மாறாக ஒரே கடவுள் இருந்தால் அதனிடம் எந்த குறையும் தென்படாது அதனிடம் உள்ள அனைத்தும் நிறை வாகத்தான் இருக்கும்! எனவேதான் அல்லாஹ் குறையில்லா தவனாக இருக்கிறான் காரணம் அவன் தனித்தவனாக இணை துணையில்லாதவனாக இருப்பதே அவனுடைய சிறப்பு!
உங்கள் இறைவன் அல்லாஹ் அளவற்ற அருளாளன்

  • ஒன்றுமில்லாமல் இருந்த உங்களை கருவாக ஆக்கினான்
  • கருவுக்குள் உயிரை ஊதி, உடலை கொடுத்தான்
  • உடலுக்குள் உறுப்புகளை கொடுத்தான்
  • உறுப்புகளுக்கு கட்டளை செலுத்த மூளையை படைத்தான்
  • மூளைக்கு சிந்திக்கும் ஆற்றல் கொடுததான்
  • பசி எடுக்கும் போது குழந்தையிடம் அழுகை கொடுத்ததான்
  • அழுத குழந்தைக்கு தாய்ப்பால் மற்றும உணவு கொடுத்தான்
  • உணவுக்காக உலகை கொடுத்தான்
  • உலகில் நிலம், நீர், காற்று, மழை, வெயில், குளிர், உஷ்ணம் என்று அனைத்தையும் கொடுத்தான்
  • உடல் சுகத்தை தணிக்க மனைவியை கொடுத்தான்
  • வயோதிக பருவத்தில் பெற்ற மக்களை போர்வை யாக்கினான்
  • மரணித்தபின் உங்கள் உடலை புதைக்க மண்ணை  கொடுத்தான்.
இத்தனையும் கொடுத்த இறைவன்
  • நாம் நுகரும் காற்றிற்கு உங்களிடம் விலை பேசவில்லை,
  • பருகும் நீருக்கு கட்டணம் நிர்ணயிக்கவில்லை
  • வசிக்கும் நிலத்திற்கும் பேரம் பேசவில்லை
ஆனால் மனிதனாகிய இவன் காற்றை விற்பனை செய்கிறான், நீரை விற்பனை செய்கிறான் நிலத்தை மோசடி செய்து விற்கிறான் இவன் மனிதன் இறைவனை உணராதவன்! இவன் இறைவனது அருளை உணர்ந்துவிட்டால் பாவத்தை கைகழுவ நடிவிடுவான் அல்லாஹ்வுக்கு அடிமையாகிவிடுவான்!
அல்லாஹ் நம்மை சோதிப்பான் ஆனால் உதவுவான் (அவன் மாபெரும் கருணையாளன்)
அல்லாஹ் சிலர் சிலருக்கு உடலளவில் குறைபாடுகள் கொடுப்பான் அந்த குறைபாடுகளை பார்க்கும் நாம் ஏன் இவர்களை இவ்வாறு இறைவன் படைத்தான் என்று எண்ணிக் கொண்டிருப்போம்! ஆனால் அல்லாஹ்வோ யாருக்கு குறைகள் கொடுத்தானோ அவர்களுக்கு நிறைகளையும் கொடுத்து உதவுகிறான்!
  • கண்பார்வை இல்லாதவர்கள் எதனையும் காண முடியாது இது அவர்களுக்கு உள்ள குறை அதே வேளையில் காதுகளில் நுண்ணறிவோடு கேட்கும் சக்தி அதிகமாக்கித் தருகிறான்இதை விட சிறந்த உதவியாக கண்பார்வை யற்றவர்கள் கண்களின் விபச்சாரத்திலிருந்து பாதுகாப்பு பெற வைக்கிறான்! மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது கண்களுக்கு விசாரணை இருக்காதே!
  • காது கேளாதோருக்கு கேட்கும் திறன் குறைவாக இருக்கும் இவ்வாறு உள்ளவர்களுக்கு நினைவாற்றல் அதிகமாக இருக்கும்! அதே வேளையில் காது கேளாதவர்கள் தீய வார்த்தைகளை கேட்காமல் தீய பாடல்களை கேட்காமல் இருப்பதானல் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களுக்கு எதிராக அவர்களது செவிக்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
  • வாய்பேச முடியாத ஊமைகளால் எதனையும் பேச முடியாது ஆனால் அதே நேரம் அவர்கள் புறம் பேசுதல் போன்ற எந்த கெட்ட வார்த்தைகளையும் பேச முடியாத காரணத்தினால் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் அவர்களின் வாய்க்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா?
  • பிறக்கும் குழந்தைகளிலோ அல்லது ஏதாவது விபத்திலோ சிலருக்கு புத்தி சுவாதீனம் ஏற்பட்டு பைத்தியமாக இருப்பார்கள் அவர்கள் நிலையைக் கண்டால் நம்மில் சிலருக்கு பைத்தியம் என்று எண்ணி மனதளவில் சிரிப்பு வரும் ஆனால் இவர்களுக்கு உள்ள அருட்கொடைகளை எண்ணிப்பார்த்தால் நமக்கு வருத்தமளிக்கும் காரணம் இவர்கள் பிறவியிலேயே புத்திசுவாதீனமற்றவர்களாக இருந்தால் கேள்விக்கணக்கே இருக்காதேமேலும் இடையில் ஏதாவது விபத்துக்களால் புத்திசுவாதீனம் ஏற்பட்டால் அன்று முதல் அவர்கள் தன்னை அறியாமல் செய்யும் பாவங்களுக்கு மன்னிப்பு கிடைத்துவிடும்!  மேலும் மஹ்ஷர் எனும் நியாயத்தீர்ப்பு நாளில் இப்படிப்பட்டவர்களின் உள்ளத்திற்கு விசாரணை இருக்காதே! இது உதவியல்லவா!
அல்லாஹ்வுக்கு உள்ள பண்புகளும், தன்மைகளும்!
அல்லாஹ் என்பவன் அனைத்து படைப்பினங்களின் அரசனாக இருக்கிறான் மேலும் படைத்தல், காத்தல், நிர்வகித்தல், அழித்தல் ஆகிய அனைத்து பண்புகளையும் அல்லாஹ் பெற்றுள்ளான். எந்த பொருளையும் முன்மாதிரியின்றி படைக்கும் ஆற்றல் அல்லாஹ்வுக்கு உள்ளது மேலும் (குன்) ஆகுக என்று கூறினால் போதும் தான் நாடியவாறு அந்த பொருள் ஆகிவிடும். இதைப்பற்றி அருள்மறை குர்ஆன் பின்வருமாறு விவரிக்கிறது!
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து), தானே உண்டாக்கினான்; அதனிடம்குன்‘ – ஆகுகஎன்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன்2:117)
அல்லாஹ்வை நம்புங்கள்
நீங்கள் எப்படி அல்லாஹ்வை நம்ப மறுக்கிறீர்கள்? உயிரற்றோராக இருந்த உங்களுக்கு அவனே உயிரூட்டினான் பின்பு அவன் உங்களை மரிக்கச்செய்வான் மீண்டும் உங்களை உயிர் பெறச் செய்வான் இன்னும் நீங்கள் அவன் பக்கமே திருப்பிக்கொண்டுவரப் படுவீர்கள்.(அல்குர்ஆன் 2:28)
இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்) நீங்கள், ‘மூஸாவே! நாங்கள் அல்லாஹ்வை கண்கூடாக காணும் வரை உம்மீது நம்பிக்கை கொள்ள மாட்டோம்என்று கூறினீர்கள் அப்பொழுது, நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே உங்களை ஓர் இடி முழக்கம் பற்றிக்கொண்டது. (அல்குர்ஆன் 2:55)
விக்ரஹ ஆராதனையை தவிர்த்திடுங்கள்
நாம் இஸ்ராயீலின் சந்ததியினரைக் கடலைக் கடந்து (அழைத்துச்) சென்றபோது, தங்களுக்குரிய விக்கிரகங்களை ஆராதனை செய்து கொண்டிருந்த ஒரு கூட்டத்தார் அருகே (அவர்கள்) சென்றார்கள். உடனே அவர்கள், “மூஸாவே! அவர்களிடமிருக்கும் கடவுள்களைப் போல் நமக்கும் நீங்கள் ஒரு கடவுளை ஆக்கித் தருவீர்களாக!” என்று வேண்டினர்; “நிச்சயமாக நீங்கள் ஓர் அறிவில்லாத கூட்டத்தாராக இருக்கின்றீர்கள்என்று மூஸா (அவர்களிடம்) கூறினார். (அல்குர்ஆன்: 7:138)
உலக மக்கள் அனைவரும் பொதுவான விஷயத்துக்கு வாருங்கள்
(நபியே! அவர்களிடம்) ”வேதத்தையுடையோரே! நமக்கும் உங்களுக்குமிடையே (இசைவான) ஒரு பொது விஷயத்தின் பக்கம் வாருங்கள்; (அதாவது) நாம் அல்லாஹ்வைத் தவிர வேறெவரையும் வணங்க மாட்டோம்;. அவனுக்கு எவரையும் இணைவைக்க மாட்டோம்; அல்லாஹ்வை விட்டு நம்மில் சிலர் சிலரைக் கடவுளர்களாக எடுத்துக் கொள்ள மாட்டோம்எனக் கூறும்; (முஃமின்களே! இதன் பிறகும்) அவர்கள் புறக்கணித்து விட்டால்; ”நிச்சயமாக நாங்கள் முஸ்லிம்கள் என்பதற்கு நீங்கள் சாட்சியாக இருங்கள்!” என்று நீங்கள் கூறிவிடுங்கள். (அல்குர்ஆன்3:64)
குறிப்பு
பல்வேறு மார்க்க அறிஞர்களின் சொற்பொழிவுகளும் கருத்துக்களும் இந்த கட்டுரை வரைய பேருதவியாக இருந்தன! நம் அனைவருக்கும் அல்லாஹ் கல்வி ஞானத்தை வழங்கி நேர்வழிகாட்டி நல்லருள்புரிந்து!
நம் அனைவருக்கும் கல்வி ஞானத்தை வழங்கிவன் அல்லாஹ்தான்  எனவே புகழனைத்தும் அவனுக்கே உரியது நாம் அவனுடைய அடிமைகள்தான்!
அல்ஹம்துலில்லாஹ்

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்