அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் அறுத்ததை உண்ணலாமா?
கேள்வி: முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அவற்றை உண்ணலாமா? அது போன்று பெயரளவில் முஸ்லிம்களாக இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் அறுப்பதை உண்ணலாமா? இரண்டு பேரும் ஈமானில் குறை உள்ளவர்கள் தானே? விளக்கம் தேவை.
அப்துல் வதூத்
பதில் :
முஸ்லிம் அல்லாதவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அவற்றை உண்ணக் கூடாது. ஏனென்றால் பிராணியை அறுக்கும் போது அல்லாஹ்வின் பெயர் கூறுவது எவ்வாறு அவசியமோ அது போன்று அறுப்பவர் முஸ்லிமாக இருப்பதும் அவசியம்.
அல்லாஹ்வின் பெயரைக் கூறுதல் என்பதன் பொருள் அதை மனதில் ஏற்றுக் கூற வேண்டும். வணக்கத்துக்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்பதை ஒருவர் நம்பாமல் அல்லாஹ்வின் பெயரைக் கூறினால் அவர் அல்லாஹ்வின் பெயர் கூறியவராக மாட்டார்.
ஒருவர் மனதில் அல்லாஹ்வை நம்புகிறாரா என்பதை மனிதர்களால் அறிய முடியாது. அதே சமயம் வெளிப்படையாக அவர் அல்லாஹ்வை நம்புவதாக உறுதி மொழி அளித்தால் அதற்கு முரணான செயல் அவரிடம் வெளிப்படாவிட்டால் அவர் சொல்வதை நாம் நம்ப வேண்டும்.
முஸ்லிமல்லாதவர் அறுக்கும் போது மட்டும் அல்லாஹ்வின் பெயரைக் கூறுகிறார். ஆனால் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று அவர் வெளிப்படையாக அறிவிக்காததால் அவர் வாயளவில் தான் கூறுகிறார் என்பது உறுதியாகிறது.
எனவே முஸ்லிமல்லாதவர் அல்லாஹு அக்பர் எனக் கூறி அறுத்தாலும் அது அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்ததாக ஆகாது.
அதே நேரத்தில் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள ஒருவர் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாரும் இல்லை என்று உறுதி கூறியுள்ள தால் அவர் அல்லாஹ்வின் பெயர் கூறினால் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டு கூறுகிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும். இது குறித்து துருவி ஆராய்ந்து கொண்டிருக்கத் தேவை இல்லை. அதே நேரம் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கும் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கிறார் என்பது தக்க ஆதாரத்துடன் நமக்குத் தெரிய வந்தால் அவர் தனது செயலின் மூலம் உள்ளத்தில் அல்லாஹ்வை ஏக இறைவனாக நம்பாமல் பல கடவுள்களில் பெரிய கடவுளாக அல்லாஹ்வை நம்பியுள்ளார் என்பது பொருள்.
இது போன்ற நிலையில் உள்ளவர்கள் அறுப்பது உறுதியாகத் தெரிந்தால் அது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர் அறுத்ததாகத் தான் ஆகும். அதை உண்ணக் கூடாது.
உலக விஷயத்தில் அவர் முஸ்லிம்கள் பட்டியலில் தான் சேர்க்கப்படுவார். வணக்கவழிபாடுகள் விஷயத்தில் இது போன்றவர்களை முஸ்லிம் பட்டியலில் சேர்க்கக் கூடாது.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்