அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் அரபுப் பணம்!
அழைப்புப் பணிக்கு ஆப்பு வைக்கும் அரபுப் பணம்!
ஒவ்வொரு சமுதாயத்திற்கும் சோதனைகள் இருக்கின்றன. என்னுடைய சமுதாயத்தின் சோதனை செல்வமாகும்’ என்று நபி(ஸல்) அவர்கள் சொல்ல நான் கேட்டேன்.
அறிவிப்பவர்: கஅப் இப்னு இயால்- நூல்: திர்மிதி – 2258
இஸ்லாத்தின் ஏகத்துவ எழுச்சி நாதம் இலங்கை நாட்டில் எதிரொலிக்கத் துவங்கி சுமார் 6 தசாப்தங்கள் கடந்து விட்டன. நாம் கடந்து வந்த பாதையின் ரணச் சுவடுகளை ஒரு கணம் சற்று நிதானித்து நின்று பின்னோக்கிப் பாருங்கள். இந்நாட்டு முஸ்லிம்கள் இறைமறுப்பிலும் இணைவைப்பிலும் இமாலயச் சிகரத்தின் விளிம்பில் கைகோர்த்து இணைந்திருந்த காலம் அது. கற்களை நட்டி முக்திபெற முனைந்த மூடச் சமூகத்துடன் இணைந்து, கப்ருகளை கட்டி மோட்சம் பெற முனைந்தனர் எம் முன்னோர். வல்லோன் அல்லாஹ் ஒருவனிடம் மட்டும் வாழ்வாதாரப் பிச்சை வேண்ட கடமைப்பட்டவர்கள் வலீ என்றும் மகான் என்றும் மரணித்து மண்ணோடு உக்கிப்போன, இறை உத்தரவாதமற்ற ஊதாரிகளிடம் மடிப்பிச்சை ஏந்த ஆரம்பித்தார்கள். ஜோசியம் என்றும் சூனியம் என்றும் உளரிக்கொண்டு தலைப்பாகைக்குள்ளும் தாடிக்குள்ளும் மறைந்திருந்து மார்க்கத்தை விற்று வயிறு வளர்த்த பெயர் தாங்கி முஸ்லிம் பூசாரிகளிடம் தம் பகுத்தறிவை அடகு வைத்து சுயமரியாதை இழந்தனர்.
சத்தியத்தையும் அசத்தியத்தையும் வஹியின் வெளிச்சத்தில் எடுத்துரைக்க வேண்டிய உலமாக்கள், வழிகேட்டுக்கு பாதை காட்டும் களங்கரை விளக்குகளாக விஷ்பரூபம் எடுத்திருந்தனர். வணக்கம், வழிபாடு, திருமணம், கருமாதி, பிள்ளைப்பேறு, வாணிபம், சமூக உறவுகள், பண்பாடு, பழக்கவழக்கம் என்று அத்துனை துறைகளும் தூய இஸ்லாத்தை விட்டும் தூர விலகியிருந்த காலமது. இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் இம்மியளவும் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்கிற அளவுக்கு வழிகேட்டுச் சிந்தனைகள் கோலோட்சிய தருணத்தில் தான்:தூய இஸ்லாத்தின் உண்மைச் செய்திகளை வஹியின் வழியில் மக்களுக்கு எடுத்துரைக்கும் கொள்கை கோமான்கள் உதயமாகத் தொடங்கினர். ஏகத்துவ தந்தை இப்ராஹிம் நபியின் சரிதத்தில் ஆர்ப்பரித்து எழுந்த அதே அசத்தியக் குரல்கள் இக்கொள்கை கோமான்களின் ஏகத்துவ போராட்ட வாழ்விலும் எதிரொலிக்கத் துவங்கியது.
பணம், பதவி, பட்டம், அதிகாரம் என்ற அத்துனை ஆயுதங்களையும் கோர்வை செய்து அசத்திய வாதிகள் கொள்கை வாதிகளை எதிர்க்க முற்பட்டனர். ஓரிறைவனை வணங்கு என்று ஓங்கியுரைத்த குரல்வளைகள் ஒரேயடியாக நசுக்கப்பட்டன. அடியும் உதையும் எல்லை கடந்தன. வசைமொழியும் வீண் பழியும் வந்து குவிந்தன. ஸ_ன்னாவை நிலை நாட்ட நீட்டப்பட்ட சுட்டு விரல்கள் தஷஹ்ஹ_தில் வைத்தே நெட்டி முறிக்கப்பட்டன. பின்பற்ற வேண்டியது குர்ஆன் ஸ_ன்னாவை மட்டும் தான் என்று மக்களை தட்டியெழுப்ப முனைந்தவர்கள் குண்டர்களால் எட்டி உதைக்கப்பட்டனர். சமூகத்தை விட்டும் தட்டிக் கழிக்கப்பட்டனர். அல்லாஹ்வை துதிக்கும் இறையில்லங்களில் கொள்கை வாதிக்கு கதவடைப்பு. மார்க்கம் பேசும் ஜம்மியதுல் உலமாவில் மத்ஹபை எதிர்த்ததற்காய் தடையுத்தரவு. தர்ஹாவை தரைமட்டமாக்கு என்ற தூதர் மொழியை எடுத்துச் சொன்னதற்காய் மையவாடிகளில் உறுப்புரிமை ரத்து.
இப்படி, இந்தக் குர்ஆன் ஸ_ன்னா என்ற ஏகத்துவ கொள்கையின் எழுச்சிக்காய் எதையெல்லாம் இழக்க முடியுமோ அனைத்தையும் இழந்தனர். தியாகத்தினதும் அர்ப்பணிப்பினதும் அறுவடை தான் இன்று நானும் நீங்களும் ஏந்தியிருக்கும் ஏகத்துவ தீபம். அன்று அசத்தியத்தின் அராஜகத்துக்கு மத்தியிலும் கொள்கையில் குழையாது, வழிகேட்டோடு வளைந்து போகாது எடுப்பாக நின்று பிரச்சாரம் செய்த உத்வேகத்தை இன்று காண முடிகிறதா? பள்ளிகளின்றி, பாடசாலைகளின்றி, வீட்டுத் திண்ணையிலும், முற்ற வெளியிலும் கொள்கை பேசிய போது இருந்த கொள்கை பிடிப்பை ஏன் இன்றைய நமது தாஈக்களிடம் காண முடியவில்லை? ஸ_ன்னா என்றால் அதை உயிரிலும் உயர்வாய் மதித்தவர்களின் வாரிசுகள் இன்று கொள்கையற்ற கோமாளிகளுக்கு பொன்னாடை போர்த்தி, கொள்கையில் சமரசம் செய்யும் இயக்கவாதிகளின் மேடையில் சிறப்பு அதிதியாய் ஏறி, சறுக்கல் பாதையில் பயணிப்பதை எப்படி ஜீரணிக்க முடியும்? நபி வழியில் தொழுவதற்கு மஸ்ஜிதுகளில் தடைவிதிக்கப்பட்ட அன்றைய எகத்துவ வாதிகளின் இன்றைய பரம்பரை, ஸ_ன்னாக்களை கிள்ளுக் கீரையாய் கருதும் கபோதிகளுக்கும், பித்அத் வாதிகளுக்கும் மஸ்ஜித் கட்டி இறையில்லங்களை தாரைவார்த்து எப்படி பாழ்படுத்த முடியும்?
இத்துனை வினாக்களுக்கும், எம் ஒட்டுமொத்த வீழ்ச்சிக்குமான ஒரே பதில்: எம்மிடம் அளவு கடந்து வந்து குவிந்த பணம்! பணம்!! பணம்!!! ஆம், அல்லாஹ்வின் தூதர் எதனை இந்த உம்மத்துக்கான சோதனை என்று முன்னறிவிப்புச் செய்தார்களோ அது எம் விடயத்தில் நிறைவேறியிருப்பதை பார்க்கிறோம். வெளிநாட்டு அரசுகளினதும், நிறுவனங்களினதும் ஊடாக இலங்கை வாழ் ஏகத்துவ வாதிகளுக்கு திறந்துவிடப்பட்ட செல்வ வாயில் எம் சொந்த தியாகங்களை விட்டும் எம்மை திசைமாற்றச் செய்தது. கஷ்டங்களையும், துன்பங்களையும் தாங்கிக்கொள்ளும் மனோவலிமையை இழக்கச் செய்து சொகுசாக வாழும் இழி உணர்வை எம் மனங்களில் விதைக்கலானது. பணத்தின் மூலம் பதவிகள் வந்து குவிந்தன. கிடைத்த பதவியை காப்பதற்காய் கொள்கையை கூட தாரைவார்க்க எம் தாஈக்கள் தயங்கவில்லை. மிம்பர் மேடையில் ஒர் உரை கிடைப்பதற்காய் கூட்ட துஆ ஓதும் ஸ_ன்னா விரோதிகளாய் நிறுவனத் தொண்டர்கள் நிறம்மாறியிருக்கிறார்கள். சத்தியத்தை உடைத்துச் சொன்னால் பதவிக்கு ஆபத்து என்பதற்காய் அடக்கி வாசிக்கும் அங்கவீன நிலைக்கு எம் அழைப்பாளர்கள் ஆளாக்கப்பட்டுள்ளார்கள்.
சத்தியத்தை எங்கு சொல்வது? எப்படி உடைத்துச் சொல்வது? தர்காவை எப்படி ஒழிப்பது? கொள்கை பற்றை எப்படி வளர்ப்பது? என்பதை சிந்திப்பதற்கு பதிலாக, கிணறை எங்கு தோண்டுவது? தண்ணீர் குழாய் எங்கு பொறுத்துவது? மஸ்ஜிதை பித்அத் வாதிகளுக்கு எப்படி கட்டிக் கொடுப்பது? என்கிற ரீதியில் சிந்திக்கும் சமூகமாக எம் ஏகத்துவ சமூகம் மாறிவிட்டது. அழைப்புப் பணியை விட வசூலை அள்ளித்தரும் சமுதாயப்பணிகள் முதலிடத்துக்கு வந்துவிட்டன. பணம் கிடைத்தால் மட்டும் மார்க்கம் பேசும் pசநியனை தாஈக்கள் ஏராளம் உருவாகியிருக்கிறார்கள். பணம் உறிஞ்சும் ஒட்டுண்ணிகள் கூட்டம் முன்பை விட பன்மடங்கு பெருகியுள்ளது. ஒட்டு மொத்தத்தில் அரபுப் பணத்தின் வருகையால் தஃவா அதன் உண்மையான உயிர்த்துடிப்பை இழந்து கொள்கை உறுதியற்ற கோமாளிகளின் கைகளில் சிக்கித்தவிக்கிறது.
இந்நிலை மாறி மீண்டும் சொந்த தியாகத்துடன் கூடிய ஓர் ஏகத்துவ புரட்சி மலர வேண்டும் என்பதை இலக்காக வைத்து ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் செயற்பட்டு வருகிறது. சத்தியத்தை உடைத்துச் சொல்வதை மட்டும் நோக்காகக் கொண்ட எம்மோடு இணைந்து செயற்பட உங்களை அன்புடன் அழைக்கின்றோம். தனித்துவ வழியில் தடம் பதித்து, தவ்ஹீதை உரத்துச் சொல்ல அல்லாஹ் எமக்கு அருள் புரிவானாக!
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்