ஆக்கம்: பர்ஸான் - சிலாபம்
அறிவு ஆராய்ச்சிகள் வெடித்துச் சிதறும் நவீன விஞ்ஞான யுகத்தில் கால் பதித்திருக்கும்
இன்றைய மனிதன், கால மாற்றத்திற்கு
ஏற்ப தனது நடத்தைகளையும், மனப்பாங்குகளையும்
மாற்றிக் கொண்டே வருகின்றான். ஒரு காலத்தில் பற்றுருதியுடன் ஏற்றுப் பின்பற்றிய வாழ்வியல்
நெறிகளை தற்காலத்தில் காலால் எட்டி உதைத்து “மூடநம்பிக்கை” எனும் முத்திரை குத்தி குப்பைத் தொட்டியில் வீசி
எறிந்துவிட்டுச் செல்வதை காணலாம். இவ்வாறு கால மாற்றத்திற்கும், அறிவியல், நாகரீக எழுச்சிக்கும் ஏற்ப மனிதனால் மறுதலிக்கப்பட்ட
மரபுகளும், மார்க்க சம்பிரதாயங்களும், வாழ்வியல் தத்துவங்களும் ஏராளம்.
காலச் சக்கரத்தின் சுழற்சிக்கு ஏற்ப தனது வாழ்வொழுங்கில் மனிதனால் கொண்டு வரப்பட்ட
மாற்றங்களில் பல வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளது போலவே, சில எதிர்விளைவுகளை தோற்றுவிக்கவல்ல பாகங்களும் இடம்பெற்றுள்ளன
என்பது சில சமூகவியலாளர்களின் விமர்சனமாகும். சமூக கட்டமைப்பில் தவிர்க்க முடியா பிரிவினராகிய பெண்கள் குறித்தும், அவர்களது உரிமைகள் குறித்தும் இன்று நவீனவாதிகளாலும்,
சமூக ஆர்வலர்களாலும் எழுப்பப்படும் கோஷங்கள் இந்த வகையில் முக்கியத்துவம்
கொடுத்து பார்க்கும் அளவுக்கு புத்திஜீவிகள்
தளத்தில் மிகுந்த விமர்சனப்பொருளாக மாறியுள்ளது
என்பதுவே உண்மை.
பெண்ணுரிமை எனும் கருத்தியலில்
பல்வேறு அம்சங்கள் விவாதிக்கப்பட்ட போதிலும், ‘இளவயதுப் பெண்களை திருமணம் முடித்தல்’ எனும் பகுதி பலராலும் விமர்சனப்பார்வையோடு அணுகப்படும் ஒன்றாகவே காலம் நெடுகிலும் இருந்து
வந்துள்ளது. குறிப்பாக மேற்கத்தைய, மதசார்பற்ற சிந்தனையுடையவர்களுக்கும், மதவாதிகளுக்கும் மத்தியில் ‘பெண்களின் இளவயதுத் திருமணம்’ குறித்து சூடான வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்தும் நிகழ்ந்த வண்ணமே உள்ளன.
இதன் தவிர்க்க முடியா எதிரொலியாக
சமீப காலமாய் இலங்கை தேசத்திலும் இது குறித்த வாதப் பிரதிவாதங்கள் சமூக தளத்தில் பேசு
பொருளாக மாறியுள்ளதை அவதானிக்க முடிகிறது. GSP+ சலுகை இலங்கைக்கு கிடைக்க வேண்டுமாயின் முஸ்லிம்
தனியார் சட்டத்தில் திருத்தம்
கொண்டு வரப்பட்டு, திருமண வயதில் மாற்றம்
ஏற்படுத்தப்படல் வேண்டும் என்ற ஐரோப்பிய யூனியனின் நிபந்தனை குறித்த அமைச்சரவை அறிவித்தலை
தொடர்ந்து தற்போது இப்பிரச்சினை
பூதாகரமாக மாறியுள்ளது.
இலங்கை வாழ் சிவில் சமூக ஒழுங்கில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும் என்று இலங்கையின்
இறைமையில் மூக்கை நுழைக்கும் விதமான நிபந்தனையிடும் உரிமை ஐரோப்பா யூனியனுக்கு உண்டா இல்லையா? எனும் நியாயமான வினாவை தற்போதைக்கு ஒரு புறம் வைத்துவிட்டு,
முஸ்லிம் பெண்களின் திருமண
வயதில் மாற்றம் கொண்டு வரப்படல் வேண்டும் எனும் கோரிக்கை நியாயமானதா? பெண்களின் திருமண வயதை 16 ஆகவோ அதைவிடவோ அதிகரிப்பதானது பெண்களுக்கு பாதுகாப்பானதா? இல்லையா? எனும் விடயத்தை மாத்திரம் விவாதத்திற்கும்,
விமர்சனத்திற்கும் உட்படுத்துவதே ஆரோக்கியமான அறிவுபூர்வமான அணுகுமுறையாக அமைய முடியும். ஒரு பக்கச் சார்பான பார்வையுடன் கூடிய வீணான, இனவாத விமர்சனங்களை தவிர்த்து, இனங்களுக்கிடையில் புரிந்துணர்வையும், சகவாழ்வையும் உண்டாக்கும் விதத்தில் அறிவூட்டும்
விதமாய் இக்கருத்து சமூக மயப்படுத்தப்பட வேண்டிய தேவை உள்ளது. இவ்வாக்கம்
இவ்விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று கருதியவனாய் கருத்தாடலுக்குள் நுழைகின்றேன்.
·
பெண்ணின் திருமண வயதை வரையறை செய்வது எதை வைத்து?
ஒரு பெண்ணின் திருமணத்திற்கான தகுதி எதை வைத்து நிர்ணயிக்கப்படல் வேண்டும் என்பதுவே இன்றைய வாதப் பொருளாகும்.
இளவயதுத் திருமணத்தை எதிர்ப்பவர்களில் பெரும்பாலானோர் ‘சிறுமியர் திருமணத்தை’ தான் கூடாது என்கின்றனர். இங்கு ‘சிறுமி’ என்பவள் யார்?
அவளுக்குரிய வயதெல்லை என்ன? அவள் எப்போது திருமணத்திற்கு தகுதியடைகிறாள்?
என்பதை வரையறுப்பதில் பாரிய முரண்பட்ட கருத்துக்களும் நடைமுறைகளும் நிலவுகின்றன.
இத்தனை வயதுக்கு உட்பட்டவள் தான் சிறுமி என்பதிலும், இத்தனை வயது தான் திருமணத்திற்கு பெண் தகுதிபெறும்
வயது என்பதை முடிவாக்குவதிலும் ஒட்டுமொத்த புத்திஜீவிகள் மத்தியிலும் உடன்பட்ட ஒரு
கருத்து நிலவவில்லை என்பதுவே யதார்த்தம். 15,
16, 17, 18, 20 என்று ஒவ்வொரு நாடும் தத்தமது
பொருளாதார, சமூக நலவுகளை கருத்திற்
கொண்டு தமக்கு ஏற்றாற்போல் ஒரு வயதை வரையறுத்துள்ளனர். சீனா ஆண்களின் வயதை 22 என்றும் பெண்களின் வயதை 20 என்றும் எல்லையிட்டுள்ளது. அமெரிக்கா எனும் ஒரு நாட்டில் காணப்படும் பல மாநிலங்களுக்கு
மத்தியில் கூட திருமண வயதை நிர்ணயிப்பதில் முரண்பாடே
நிலவுகிறது. New Hampshire எனும் மாநிலத்தில் ‘கர்ப்பம் தரித்தல்’ போன்ற விசேட காரணங்களையிட்டு பெற்றோர் மற்றும் நீதிமன்றத்தின் அனுமதியின் பெயரில் ஒரு பெண் 13 வயதுக்கு உட்பட்டிருந்தாலும் திருமணம் முடிக்கலாம்
என்ற சட்டம் உள்ளது. Massachusetts எனும் மாநிலத்தில் பெண்ணின் திருமண வயதாக 12 உம், ஆணின் வயதாக 14 உம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எந்த அமெரிக்க, மேற்கத்தைய நாடுகளின் கோரிக்கைக்கு செவிமடுத்து பெண்ணின் வயதை மட்டுப்படுத்த
வேண்டும் என்று சிந்திக்கின்றோமோ அந்த நாடுகளின் உண்மை நிலவரம் இதுவே. ‘சிறுமி’ என்பதை வரையறுக்கும் வயது நாட்டுக்கு நாடு,
இன்னும் சொல்லப் போனால் ஒரு
நாட்டின் பல மாநிலங்களுக்குள்ளேயே வித்தியாசப்படுவதிலிருந்து ‘திருமணத்திற்கான பெண்ணின் தகுதி’ வயதை வைத்து மட்டுப்படுத்துவது அறிவுபூர்வமான அணுகுமுறையாக தென்படவில்லை. ஒரு நாட்டின் பார்வையில் சிறுமியாகப் பார்க்கப்படுபவள் பிரிதொரு நாட்டில் திருமணத்திற்கு தகுதியுள்ளவளாகப்
பார்க்கப்படுகிறாள். வயதை வைத்து
எல்லை நிர்ணயிக்க முடியாது எனும்
போது உடற்கூற்று ரீதியாகவும்,
விஞ்ஞான ரீதியாகவும் ஒரு பெண் திருமணத்திற்கு எப்போது தகுதியடைகிறாள்
என்பதை அளவீடு செய்வதே அறிவார்ந்த அணுகு முறையாக
இருக்கும்.
ஒரு பெண் பூப்பெய்தும் போது அவள் சிறுமி எனும் நிலையிலிருந்து மாறி திருமணத்திற்கு
உடல் ரீதியாக தகுதி பெற்று,
தாம்பத்தியத்தில் ஈடுபட்டு,
குழந்தையை பெற்றெடுக்கும்
தகுதி நிலையை அடைகிறாள் என்பதுவே விஞ்ஞான உடற் கூற்று ரீதியான பார்வையாகும். oxford ஆங்கில அகராதியின் வியாக்கியானம் படி, puberty (பூப்பெய்தல்) எனும் சொல்லுக்கு The period during which adolescents reach sexual
maturity and become capable of reproduction: ‘இளம் பருவத்தினர் பாலியல் முதிர்ச்சியும்,
இனப்பெருக்க திறனும் அடைய
ஆரம்பிக்கும் கால கட்டம்’ என்பதுவே அர்த்தமாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. திருமணத்திற்கான
தகுதியை வயதை வைத்து அளவீடு செய்வதை தவிர்த்து, உடற் தகுதியை வைத்து மட்டிடுவதே விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையாகவும், முரண்பாடற்ற அணுகுமுறையாகவும் அமையும்.
·
வயதெல்லையை நிர்ணயிப்பது பெண்களுக்கு பாதுகாப்பானதா?
ஒரு பெண் விஞ்ஞான - அறிவியல் ரீதியாகவும்,
உடற்தகைமை ரீதியாகவும் பூப்பெய்தல் நிகழ்வின் மூலம் திருமணத்திற்குத்
தகுதியடைந்து விட்டாலும் கூட, ஒரு வயதெல்லை நிர்ணயிக்கப்பட்டு, குறிப்பிட்ட வயதை கடந்தால் மட்டுமே அவளால் திருமணம்
முடிக்க இயலும் என்ற கருத்தை முன்வைப்பவர்கள் தங்கள் கருத்துக்கு வலுசேர்க்கும் விதமாக ‘இளவயதுத் திருமணத்தால் பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள்’ என்ற காரணத்தையே பிரதான வாதமாக தூக்கி நிறுத்துகின்றனர். பாதிப்பு எனும் போது
1)ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுப்பதில் தாயிக்கும்
சேயிக்கும் பிரச்சினை உண்டு.
2)பெண்களின் சுய விருப்பம் பெறப்படுவதில்லை என்ற ரீதியில் பெண்களின் உரிமை பறிக்கப்படுகிறது.
3)குடும்ப வாழ்வை முன்நகர்த்திச் செல்வதற்கான
போதிய அறிவும், பக்குவமும் இன்மையால்
அதிகரிக்கும் விவாகரத்துக்கள் போன்ற
அம்சங்களை பிரதான குற்றச்சாட்டாக முன்வைக்கின்றனர்.
இக்குற்றச்சாட்டுக்கள் நியாயமானவை தானா என்பதை அறிவு பூர்வமாகவும், நிதர்சன ரீதியாகவும் நாம் பார்க்க வேண்டிய தேவை உள்ளது. இளவயதுத் திருமணத்தால்
என்னென்ன பாதிப்புகள் எல்லாம் உருவாகும் என்று விமர்சகர்கள் கூறுகிறார்களோ இவர்கள் தங்கள் முன்னோர்களின் கடந்த கால வாழ்வை மீட்டிப்பார்க்க வேண்டிய தேவையுள்ளது. பல நாடுகளில் கடந்த காலங்களிலும்,
நிகழ் காலத்திலும் பெண்ணின்
திருமண வயது பெற்றோரின் அனுமதியுடன் 10 லிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டிருப்பதை காணலாம்.
உதாரணத்திற்கு கீழ் காணும் நாடுகளின் திருமண வயது மாற்றங்களை உற்று நோக்குங்கள்:
1880, 1920, 2007 எனும் மூன்று கால கட்டத்திலும் அவுஸ்திரேலியாவில்
பெண்ணின் ஆகக் குறைந்த திருமண வயதாக 14 குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கேரியாவில் 13 ஆக பதியப்பட்டுள்ளது. டென்மார்க்கில் 1880, 1920 கால கட்டங்களில் 12 ஆகவும், 2007 இல் 15 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
1920 இல் இத்தாலியில் 16 ஆக இருந்த வயதெல்லை 2007 இல் 14 ஆக குறைக்கப்பட்டுள்ளது. 1880, 1920 வரை ஸ்பெயினில் 12 ஆக இருந்து 2007 இல் 14 ஆக மாற்றப்பட்டுள்ளது. அமெரிக்காவின் Colorado மாநிலத்தில் 1880 இல் 10 ஆக இருந்து 1920 இல் 18 ஆக மாற்றப்பட்டு மீண்டும் 2007 இல் 15 ஆக குறைக்கப்பட்டுள்ளது. ஏன், நாம் வாழும் இலங்கை நாட்டில் கூட திருமண கட்டளை
சட்டத்தின் பிரகாரம் 1995 ஆம் ஆண்டு வரை பெண்ணின்
திருமண வயது 12 ஆகவே நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது போன்று இன்னும் பல நாடுகளின்
கடந்த கால நிகழ்கால நிலவரம் இதுவே. இளவயதுத் திருமணத்தால் பெண்களுக்கு பாதிப்பே என்றால்
மேற்குறிப்பிட்ட நாடுகளில் பல்லாண்டு காலமாய் அமுலில் இருந்த, இருக்கின்ற பெண்களின் இளவயது திருமணச் சட்ட அனுமதியை
பயன் படுத்தி பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் நடந்தேறியுள்ளன. நம்முடைய முன்னோர்கள் கூட பெரும்பாலும் 12, 14 எனும் இளவயதிலேயே திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.
இதனால் இவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு தான் என்ன? ஆரோக்கியமான பிள்ளைப் பிறப்பு வீதம் இன்று அதிகரித்துள்ளதா? அன்று அதிகரித்து காணப்பட்டதா? அன்றைய இளவயதுத் தாய் பிள்ளைகளை அதிகமாக பெற்றெடுத்தாளா?
இன்றைய நவீன தாய் அதிகமான
பிள்ளைகளை பெறுகிறாளா? இயற்கை பிரசவம் அன்று
அதிகமாக நிலவியதா? இன்று நிலவுகிறதா?
கண்ணுக்கு முன் விரிந்து கிடக்கும் நடைமுறை
உண்மை உணர்த்தும் உண்மை: இளவயதுத்
திருமணத்தால் பெண்ணின் ஆரோக்கியத்திலோ, பிள்ளைப் பேற்றிலோ, சந்ததி விருத்தியிலோ
எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை என்பது தானே!
·
விவாகரத்துகள் அதிகாpக்க இளவயதுத் திருமணம் தான் காரணமா?
பெண்களின் திருமண வயதை 18 ஆக அதிகரிக்க வேண்டும் என்று கோஷம் எழுப்புவோர் அதிகரிக்கும் விவாகரத்துகளுக்கு இளவயதுத் திருமணம் தான்
காரணம் என்று வாதிடுவதை பார்க்கின்றோம். பெண்கள்
இதனால் பாதிக்கப்படுகின்றனர் என்பதுவே இவர்களின் ஆதங்கம்.
பெருகும் விவாகரத்துகளுக்கு இளவயதுத் திருமணம் தான் காரணம் என்பது உண்மையானால்
20, 30, 35 வயதுகளில் நடைபெறும்
திருமணங்கள் இடை நடுவே முறிந்து விவாகரத்தை நோக்கி செல்வதற்கு எது காரணம்? இளவயதுத் திருமணத்தை விவாகரத்துக்கு காரணமாக காட்டுவதாயின்
முதிர் வயதுத் திருமணங்கள்
முறிவடையாது காலா காலத்துக்கும் நிலைத்திருக்க வேண்டுமா இல்லையா? ஆனால், யதார்த்தம் அதுவா? என்றால் இல்லை என்பது தானே பதில். இவர்கள் வாதப் படியே நடைபெறும் 100 விவாகரத்துகளில் 60 இளவயதுத் திருமணங்கள் என்றால் 40 முதிர் வயதுத் திருமணங்களும் அடங்கத் தானே செய்கிறது?
இப்பொழுது என்ன செய்வது?
விவாகரத்துகளுக்குக் காரணம் திருமணம் முடிக்கும் வயதா? அல்லது திருமண பந்தத்தில் இணையும் தம்பதிகள் மத்தியில்
நிலவும் வேறு காரணிகளா? என்பதை நாம் சிந்திக்க
வேண்டும். கணவன் மனைவியை தாம்பத்திய வாழ்வில் திருப்திபடுத்தாமை, அல்லது மனைவி தாம்பத்தியத்தில் ஒத்துழைப்பு வழங்காமை,
பொருளாதார காரணிகள்,
குறிப்பிட்ட தம்பதியினர் வாழும் குடும்ப மற்றும்
சமூக அமைப்பில் நிலவும் சீர்கெட்ட நடத்தை பிறழ்வுகள்
உள்ளிட்ட விவகாரங்கள் தான் விவாகரத்துகளுக்கு அடிப்படையாக உள்ளன. இளவயதுத் திருமணம்
தான் விவாகரத்துக்கு காரணம் என்பது உண்மையானால் முதிர் வயதுத் திருமண பந்தத்தில்
இணைந்தவர்கள் விவாகரத்தை நாடாது இருந்திருக்க
வேண்டும்.
எனவே, வயதை பிரச்சினையாக
பார்ப்பதை விட்டு விட்டு இல்வாழ்வை
பாதிக்கும் சமூக, உடல் சார் பிரச்சினைகளுக்கு
தீர்வுகளை எட்ட முனைவதே விவாகரத்துகளை
குறைக்க உதவும்.
இன்னும் ஒரு சாரார், இளவயதில் குழந்தை
பெறுவதால் பொறுப்புணர்வு இல்லாமல் போகிறது
என்ற வாதத்தை முன்வைக்கின்றனர். இவர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ளல் வேண்டும். பகுத்தறிவு வழங்கப்படாத
மிருகங்கள் கூட தன் குட்டிகளை ஈன்றுவிட்டால் இயல்பாகவே அதனை பராமரிக்கும் கலையை கற்றுவிடுகின்றன என்பதுவே உண்மை. இதே
இயல்பும் உணர்வும் மனித இனத்துக்கும்
பொதுவானதே என்பதை நாம் புரிந்து கொள்ளல் வேண்டும்.
அடுத்து, பெண்களின் திருமண
வயது 16 அல்லது 18 என்று வரையறுக்கப்பட்டு சட்டமாக ஆக்கப்படுகின்ற
போது அதைவிட குறைந்த வயதில் உள்ள ஒரு பெண் திருமணம் முடிக்க விரும்பும் போது அதற்கு
சட்டம் தடையாக வந்து நிற்கும். இதன் விளைவு, காதலித்தவனுடன் ஓடிப்போய் கணவன் மனைவியாக வாழும்
நிலை உருவாகும். அல்லது தப்பான நடத்தை மூலம் உடலுறவில் ஈடுபடும் கேவலம் ஏற்படும். அல்லது
கற்பழிப்புகள் பெருகும். கருக்கலைப்புகளும் சிசுக் கொலைகளும் அதிகரிக்கும். இதில் எது நடந்தாலும் அது பெண்களுக்கு நன்மையை
பெற்றுத் தருமா? தீமையை பெற்றுத் தருமா?
பல நாடுகளில் இடம் பெறும் சீர்கேடுகள் எமக்கு உணர்த்தும் செய்தி என்ன? ஐரோப்பாவில் 13 - 15 க்கும் இடைப்பட்ட வயதிலுள்ளவர்களிடம் தான் 61.8% கருக்கலைப்பு இடம்பெறுவதாக புள்ளி விபரம் சொல்கிறது.
இவ்வளவு ஏன்? 2015 ஆம் ஆண்டு இலங்கையில்
பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற துஷ்பிரயோகங்கள் குறித்த விபரத்தை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர அவர்கள் வெளியிட்டிருந்தார்கள். இவரது அறிக்கை பிரகாரம் மொத்தமாக 1854 துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் துஷ்பிரயோகத்திற்கு
உள்ளான 1501 பெண்களின் வயது 16 க்கும் குறைவானதே. இதிலும் 1209 துஷ்பிரயோகங்கள் குறிப்பிட்ட பெண்களின் முழுமையான
விருப்பத்துடனே நிகழ்த்தப்பட்டுள்ளது என்பது அதிர்ச்சியான செய்தியாகும்.
மேற்குறித்த அறிக்கைக்குள் புதைந்துள்ள பேருண்மை என்ன? 1209 சம்பவங்களுடன் சம்பந்தப்பட்ட பெண்கள் 16 வயதை விடவும் குறைவாக உள்ள நிலையில் அவர்களின் விருப்பத்துடனேயே தப்பான நடத்தையில் அவர்கள் ஈடுபட்டுள்ளது தெளிவாகிறது. இந்தத் தப்பு நடைபெறுவதற்கு
பல காரணங்கள் இருக்கலாம். அதில் பிரதானமானது பெண்ணின் வயதை கருத்திற் கொண்ட அளவுக்கு
அவளது உடல் தேவையையும், உடம்புக்குள் இடம்
பெறும் பாலியல் உணர்வுடன் கூடிய ஹோமோன்
மாற்றங்களையும் கருத்திற் கொள்ள மறந்தமை தான் என்று அழுத்தமாக குறிப்பிட முடியும்.
வெளி நிகழ்வுகளை வைத்து வயதை திருமணத்திற்கான தகுதியாக நிர்ணயிக்காது, இயற்கையாக இடம்பெறும் பெண்ணின் பூப்பபெய்தலையும்,
அதனுடன் இணைந்து உருவாகும்
பாலியல் உணர்வு சார் உடலியல் இயல்பையும்
கருத்திற் கொண்டே திருமணத்திற்கான தகுதி நிர்ணயிக்கப்படல் வேண்டும்.
வயதை வரையறுப்பதால் இத்தனை ஒழுக்க விழுமியம் சார் பிரச்சினைகள் எழுவதற்கான
வாயில் திறக்கப்படும். மேற்குலகின் ஒழுக்க வீழ்ச்சிக்கு இதுவும் ஒரு காரணம் என்பதை
ஐரோப்பா யூனியனுக்காக வக்காலத்து வாங்குபவர்கள் புரிந்து கொள்ளல் வேண்டும். வயதை வரையறுக்காத போது விரும்பியவர்கள், தேவையுள்ளவர்கள் மாத்திரம் அதை
பயன்படுத்தி தங்கள் தேவைகளை சட்ட ரீதியாக நிறைவேற்றிக்
கொள்ள முடியுமாக இருக்கும். இது மிகக் குறைந்த சதவீதத்தில் தான் அமையும். இதனால் சிறு
தொகையினர் கூட தவறிழைக்காது
தற்காக்கப்படுவர். வயதுக்கு எல்லை நிர்ணயம் செய்யும் போது விதிவிலக்காக உணர்வுக் கொந்தளிப்பால் கட்டுண்டவர்கள் சட்டத்தை மீறி முறைகேடாக தங்கள் இச்சைகளை தீர்த்துக் கொள்ள முயற்சிப்பர். இது ஒழுக்கக் கேட்டையே உருவாக்கும். ஒப்பீட்டு அளவில்
நோக்கும் போது கூட இளவயதுத் திருமணத்தால் ஏற்படும் ஒரு சில பாதிப்புகளை விட பெண்ணின்
திருமண வயதை வரையறுக்கும் போது ஏற்படும் எதிர் விளைவுகளும் பாதிப்புகளும்
மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசத்தைப் போன்றுது எனலாம். இந்த யதார்த்தத்தை சம்பந்தப்பட்டவர்கள் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.
·
நீதியான நடுநிலைப் பார்வை எது?
பெண்ணின் திருமணத்திற்கான தகுதியை தீர்மானிப்பதில் ஒரு தேசத்திற்கும், அதன் ஆட்சியாளர்களுக்கும் இருக்கும் கரிசனையை விட சம்பந்தப்பட்ட பெண்ணுக்கும், அவளது பெற்றோர் அல்லது பாதுகாவலர்களுக்குமே அதிகமான உரிமையும் அக்கறையும் இருக்க முடியும். நாமாக இது தான்
உனக்கான திருமண வயது என்பதை தீர்மானித்து,
சம்பந்தப்பட்ட பெண்ணின் விருப்பத்தை
கருத்திற் கொள்ளாது 16 என்றோ 18 என்றோ வலுக்கட்டாயமாக திணிக்கும் உரிமை மீறலில் ஈடுபடுவதை விட, எப்போது திருமணம் செய்வது என்ற உரிமையை பெண்ணிடமே விட்டுவிடல் வேண்டும். அவளது உடற்
தகுதி, பாலியல் தேவைகளை வைத்தும்,
அவளது பாதுகாப்பான வாழ்க்கை
சூழல், குடும்பக் கட்டமைப்பு என்ற
காரணிகளை கருத்திற் கொண்டும் குறிப்பிட்ட பெண்ணும் அவளது குடும்பமுமே கலந்தாலோசித்து
அவளது திருமணத்தை முடிவு செய்யும் அதிகாரத்தினைப் பெறமுடியும். இதுவே பெண்களுக்கான
பாதுகாப்பாகவும், உரிமை காப்பாகவும் அமைய முடியும். தவறும் பட்சத்தில்
சிறு தீமை ஒன்றை தடுக்கப் போய் அதளபாதாளத்தில் பெண்களை தள்ளிவிடும் அபாயமே உருவாகும்.
உருவாக்கப்பட்டுமுள்ளது.
·
இளவயதுத் திருமணமும் இஸ்லாத்தின் நிலைப்பாடும்
இஸ்லாம் ஒரு பெண்ணின் திருமணத்தகுதியை வரையறுப்பதில் இதுதான் வயதெல்லை என்று வலுக்கட்டாயமாக
அவள் மீது திணிப்பதை விட, அவளுக்கு எதுவெல்லாம்
பாதுகாப்பான வழிமுறைகளாகவும், அவளது உரிமையை பறிக்காததாகவும் அமையுமோ அதற்கான வழிகாட்டுதல்களையே
வழங்குகின்றது. அந்த வகையில் கீழ் காணும் விடயங்களை பெண்ணின் திருமண விடயத்தில் கருத்திற்
கொள்ளுமாறு இஸ்லாம் பணிக்கிறது.
1. அவள் பூப்பெய்துவதன்
மூலம் பருவ வயதை அடைந்து, தாம்பத்திய வாழ்க்கைக்கு
உடல் ரீதியாக தகுதி பெறல் வேண்டும்.
2. குடும்ப வாழ்க்கையின்
கடமை - உரிமைகள் குறித்து புரிந்து கொள்ளும் அறிவும், முதிர்ச்சியும் அடைந்திருத்தல் வேண்டும்.
“அப்பெண்கள் உங்களிடம் கடுமையான உடன்படிக்கையை எடுத்துள்ளார்கள்.” (அல்குர்ஆன் 4 : 21)
இந்த வசனத்தில் திருமணத்தை ஒரு கடுமையான ஒப்பந்தம் என்று திருக்குர்ஆன் கூறுகின்றது.
அந்த ஒப்பந்தம் செய்வதற்கான தகுதியும், முதிர்ச்சியும் பருவ வயதை அடைந்தால் தான் ஏற்படும்.
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன.
(அல்குர்ஆன் 2 : 228)
மண வாழ்க்கையில் தன்னுடைய உரிமைகள் என்ன? கடமைகள் என்ன? தனக்கு கணவனாக வருபவர் எவ்வாறு இருக்க வேண்டும்?
என்று நன்கு ஆராய்ந்து முடிவெடுப்பதற்கு
ஏற்ற வயதில் தான் பெண்களின் திருமணங்கள் நடைபெற வேண்டும் என்பதை இந்த வசனங்களும் உறுதி
செய்கின்றன.
3. பெண்ணின் முழுமையான
சம்மதம் பெறப்படல் வேண்டும்.
கன்னிப் பெண்ணாயினும், விதவையாயினும் சம்மதம்
பெற வேண்டும் என்று முஹம்மத் நபி (ஸல்) கூறினார்கள்.
நூல்: புகாரி 6971, 6964, 5137
என் தந்தை எனது சம்மதம் பெறாமல் மணமுடித்து வைத்தார். அதனை விரும்பாத நான் நபிகள்
நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இதைக் கூறிய போது, அத்திருமணத்தை ரத்து செய்தார்கள்.
நூல்: புகாரி 5139, 6945, 6969
4. பெண்ணின் பொறுப்பாளரை
வைத்தே திருமணம் நடாத்தி வைக்க வேண்டும்.
பொறுப்புள்ள நபரின் முன்னிலையில் திருமணம் நடக்கும் போது பெண்களை வஞ்சகமாக ஏமாற்றும்
ஆண்களிடமிருந்து பெண்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கிறது. ஆண் தரப்பிலிருந்து பெண்களுக்குச்
சேர வேண்டிய மஹர் எனும் மணத்தொகை போன்றவற்றைப்
பெற்றுத் தருவதற்கும் பெண்கள் சார்பில் வலி என்னும் பொறுப்பாளர் அவசியமாகும்.
5. கட்டாயத் திருமணத்திற்குத்
தடை
அவர்கள் (தமக்குப் பிடித்த) கணவர்களை விருப்பப்பட்டு நல்ல முறையில் மணந்து கொள்வதைத்
தடுக்காதீர்கள்! உங்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறு அறிவுரை கூறப்படுகிறது. இதுவே உங்களுக்குத்
தூய்மையானது; பரிசுத்தமானது. அல்லாஹ்வே
அறிவான். நீங்கள் அறிய மாட்டீர்கள். (திருக்குர்ஆன் 2 : 232)
இஸ்லாம் பெண்களின் திருமணம் குறித்து குறிப்பிட்டுள்ள வழிகாட்டல்கள் காலத்துக்கு
ஏற்றதாகவும், பெண்களின் உரிமைகளை பேணுவதாகவும், அவர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும்
அமைந்துள்ளமை மிகத்தெளிவானது. மேற்குறித்த ஐந்து நிபந்தனைகளும் எப்போது ஒரு பெண்ணுடைய
விடயத்தில் முழுமையடைகிறதோ அதுவே பெண்ணுக்கான திருமண தகுதி என்று இஸ்லாம் பணிக்கிறது.
இத்தகுதியடையும் பருவம் 12, 16,
18, 20 வயது என்று இஸ்லாம் வரையறுக்கவில்லை.
ஐரோப்பா யூனியன், மற்றும் WAN உள்ளிட்ட மாதர் சங்கங்களின் முஸ்லிம்
பெண்களின் திருமண வயதை வரையறுக்க வேண்டும் என்ற நிபந்தனை பெண்களின் உரிமையை பாதுகாப்பதற்கு பதில் பறிப்பதற்கும்,
பெண்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கு
பதில் பாதிப்பை தோற்றுவிப்பதற்குமே வழிவகுக்கும் என்பதையும் இங்கு பொறுப்புணர்வுடன் பதிவு செய்து கொள்கின்றேன்.
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்