Pages

Wednesday, May 17, 2017

விடியலை நோக்கி நகர வழிகாட்டுபவர்கள் யார்?


சமகால சமூக விவகாரங்கள் குறித்த விழிப்புணர்வுப் பதிவு



கடந்த ஆட்சியில் முஸ்லிம்களுக்கெதிராய் முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் விட்டுச் சென்றதை அவர் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொட்டுச் செல்லும் பணியினை மைத்திரிரணில் நல்லாட்சி(?) கனகட்சிதமாய் ஆரம்பித்து, தற்போது அது விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.
திரும்பும் திசையெல்லாம் நாளாந்தம் முஸ்லிம்களுக்கு எதிரான ஞான சார தேரர் உள்ளிட்ட இனவாதக் கும்பல்களின் கெடுபிடிகள் அதிகரித்தவண்ணமே உள்ளமை நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய தருணமாகும்.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, திருக்குர்ஆனை இழிவு படுத்திய வழக்கு என்று சுமார் 18 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டதனை தொடர்ந்து சிறிது காலம் பெட்டிப் பாம்பாய் அடங்கியது போல் பாசாங்குச் செய்து வந்தவர் தற்போது அரச பீடத்தின் வளர்ப்புப் பிள்ளை போன்று பரிவுடன் நடத்தப்படுவது மட்டுமின்றி, தொல்பொருள் ஆராய்ச்சி நிலையம், குடிவரவு திணைக்களம், அமைச்சரவை சந்திப்புகள் என்று முழு அதிகார வீச்சுடன் இலங்கை தேசத்தின் ஜனாதிபதிக்கு நிகராக ஆட்டம் போடுவதனை அவதானிக்க முடிகிறது.

ஒரு காலத்தில் பொதுபல சேனா அமைப்பினர் எவற்றையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான விமர்சனங்களாக பரப்புரை செய்தனரோ அவற்றை மைத்திரியின் அரசாங்கம் காதோடு காது வைத்தாற் போன்றுசட்டம்எனும் வரையறைக்குள் நின்று நாசூக்காய் காய்நகர்த்துவதை காண முடிகிறது. வில்பத்து மாவில்லு பேணற் காடு வர்த்தமானி அறிவிப்பு, தொல்பொருள் ஆராச்சி எனும் பெயரில் கபளீகரம் செய்யப்படும் முஸ்லிம்களின் பூர்வீக இடங்கள் என்பன இவற்றுக்கு சிறந்த எடுத்துக் காட்டுகளாகும்.

குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டிய ஒருவர் காவி ஆடை அணிந்த ஒரே காரணத்துக்காய் ஜனாதிபதியுடன் கலந்தாலோசனை செய்வதற்கும், காவி ஆடை தரித்து காடைத்தனம் புரியும் தனக்கு நிகரான ஒரு கும்பலை வைத்துக் கொண்டு சட்டத்தை கையிலெடுப்பதற்கும் அனுமதிக்கப்படுகிறார் என்றால் இந்த தேசத்தின் சிறுபான்மை இனங்களின் அவல நிலை எதிர் காலத்தில் எத்தகையதாய் திகழப்போகிறது என்பதற்கு கட்டியம் கூறுவதாய் அமைந்துள்ளதனை சிந்திப்போர் உணர முடியும்.

ஆட்சி பீடம் ஏறும் வரை உற்ற தோழனாய் நடித்து, பதவியும், அதிகாரமும் கிடைத்ததன் பிற்பாடு இனவாதம் எனும் வாகனத்தில் ஏறி முஸ்லிம்களின் முதுகில் கத்தி சொறுகும் துரோகத்தை தான் நடப்பு நல்லாட்சி(?) நரித்தனத்துடன் நடாத்தி வருகிறது. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் ஒன்று தான் என்பதற்கு மைத்திரியின் ஆட்சியே தக்க சான்றாகும்.

கிட்டிய காலத்துக்குள் முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள பல்முனைத்தாக்குதல்கள் ஏராளம் எனலாம். அவற்றை வாசகர் நலன் கருதி மிகச் சுருக்கமாக இங்கே பட்டியல் இடுகிறேன்.

முஸ்லிம்கள் எதிர் கொள்ளும் சமகாலப் பிரச்சினைகளும் சவால்களும்:

  1. பூர்வீக வாழ்விடங்கள் அபகரிப்பு

உதாரணம்:
  • வில்பத்து மாவில்லு பேணற் காடு வர்த்தமானி அறிவிப்பும், முஸ்லிம் கிராமங்கள் வனப்பகுதிக்குள் உள்வாங்கப்பட்டமையும்.
  • பொலன்னறுவை ஓனேகம பிரச்சினை (ஜலகெலும்மின்ன வன பாதுகாப்புப் பிரதேசத்தை முஸ்லிம்கள் ஆக்ரமித்துள்ளதாக கூறி முஸ்லிம்களின் கொட்டில்கள், மாட்டுத் தொழுவங்களை உடைத்தமை)
  • மூதூர் தோப்பூர் செல்வ நகர் பிரச்சினை (விகாரைக்கு சொந்தமான காணியில் முஸ்லிம்கள் குடியேறியுள்ளதாக குற்றம் சுமத்தி 1200 முஸ்லிம்கள் வெளியேற்றப் பட்டமை)
  • மும்பன்ன பாடசாலைக் காணி பிரச்சினை
  • இறக்காமம் மாணிக்கமடு புத்தர் சிலை வைப்பு பிரச்சினை
  • தொல்பொருள் ஆராய்ச்சி எனும் போர்வையில் அம்பாரை மாவட்டத்தில் இலக்கு வைக்கப்படும் முஸ்லிம்களின் பூர்வீக நிலங்கள்  
  •  2.பறிக்கப்படும் வழிபாட்டு உரிமை
  • தீர்வின்றி நீடிக்கும் தம்புள்ளை பள்ளிவாசல் பிரச்சினை
  • தாக்குதல்களுக்கு உள்ளான கொழும்பு கொஹிலவத்த இப்றாஹிமிய்யா பள்ளிவாசல் பிரச்சினை
  • பானந்துறை பள்ளிவாசல் தாக்கப்பட்டமை
  • திருகோணமலை கரிமலையூற்றுப் பள்ளிவாசல் ஆக்ரமிப்பு

 3. மீள்குடியேற்றத்திலும், இந்திய வீடமைப்புத் திட்டங்களை பெறுவதிலும் புறக்கணிப்பு
 4. வடக்கு கிழக்கு மாவட்டங்களை ஒன்றிணைப்பதற்கான கோரிக்கைகளும் பின்புலத்திலுள்ள பாதிப்புகளும்
 5. GSP வரிச்சலுகையும் முஸ்லிம் தனியார் சட்டம் எதிர்நோக்கும் சவால்களும்
 6. திட்டமிட்ட கலப்புத் திருமண ஊக்குவிப்பு (பல்கலைக்கழகங்களில் முஸ்லிம் யுவதிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்படும்அன்பு செலுத்துவதை உள்ளிருந்து ஆரம்பிப்போம்எனும் நிகழ்ச்சி நிரல்.)
  7. பொதுபலசேனாவின் இஸ்லாம் குறித்த அவதூறு உரைகள்
  •  அல்லாஹ்வை இழிவு படுத்தும் விதமான பேச்சுக்கள் (அல்லாஹ்வை நம்புவது மூட நம்பிக்கை, இல்லாத அல்லாஹ்வுக்கு எதற்கு இடம், அல்லாஹ்வின் பெயரில் ஆக்ரமிப்பு, அல்லாஹ் சிறுநீர் கழிக்குமிடம்…..)
  •  பத்திரிகையாளர் சந்திப்புகளில் தவறாக சித்தரிக்கப்படும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் போதனைகள்


மேற்குறிப்பிட்டவைகள் சமகாலத்தில் முஸ்லிம்கள் சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளில் குறிப்பிடத்தக்கவை மட்டுமே.

இதற்கான தீர்வுகள் தான் என்ன?
நாளுக்கு நாள் அதிகரிக்கும் இனவாத நெருக்கடிகளிலிருந்து இந்த உம்மத்தை விடுவிப்பதற்கான வழிவகைகளை இஸ்லாத்தின் சீரிய சிந்தனைகளிலிருந்து சிந்திக்கக் கடமைப்பட்ட முஸ்லிம்கள் பிரச்சினைகளை சாணக்கியத்துடன் அனுகுகின்றோம் என்ற போர்வையிலும், சகவாழ்வு என்ற பெயரிலும் இஸ்லாமிய தனித்துவத்தை தாரைவார்க்கும் நிலைக்கு சென்றுள்ளமை கவலைக்குரியதே.

இனங்கி வாழ்ந்தால் தான் இனவாதம் குறையும் என்று தங்கள் உள்ளத்தில் குடிகொண்டுள்ள பீதியினால் பெரும்பான்மை மக்களுடன் இணைந்து வெசக் கொண்டாடுவதும், தன்ஸல் வழங்குவதும், கோவில்களை சுத்தம் செய்து பராமரிப்பதும் என ஈமானையே அடகு வைக்கும் கொள்கை வங்குரோத்து நிலைக்கு முஸ்லிம்கள் சென்றுள்ளமை விசனத்துக்குரியதாகும்.

இனவாத சிந்தனைகளை களைவதற்கு இஸ்லாம் ஒன்றே தீர்வாக இருக்க, அதன் சொந்தக் காரர்களோ தீர்வையே எட்டி உதைத்துவிட்டு வேறு யாரிடமோ தீர்வுப் பொதியை எதிர்பார்த்து நிற்பது கேளிக்கூத்தானது. சமூகத்தின் இது போன்ற முடிவுகளுக்குக் காரணம் மார்க்கத் தலைமை பீடங்களின் பிழையான வழிகாட்டுதல்களும், பிரச்சினைகளின் போது தீர்வை முன்வைக்காது மௌனித்து நிற்கும் நிலைப்பாடுகளுமேயாகும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

விடியலுக்கான சில முன்மொழிவுகள்:

  1.  தனித்துவம் காத்து இஸ்லாமிய விழுமியங்களுடன் வாழ்வதற்கான இறையச்ச உணர்வை முஸ்லிம்கள் மத்தியில் விதைத்தல்
  2. போலியான அச்ச உணர்வை நீக்கி உரிமைக்காக குரல் கொடுக்க வழிகாட்டுதல்
  3. உணர்வு ரீதியான போராட்டத்தை குறைத்து அறிவார்ந்த, சட்ட ரீதியான செயற்பாடுகளை முன்னெடுத்தல்
உதாரணம்:
  • ·         பூர்வீக பூமிகளை உறுதிப் படுத்துவதற்கான சட்ட ரீதியான ஆவணக் கோப்புகளை தயாரித்து அதனை பெரும் பான்மை மக்களிடம் கொண்டு செல்லுதல் (இதற்காக பல்கலைக்கழக முஸ்லிம் பேராசிரியர்கள் துறைசார்ந்தோர் ஒன்றிணைக்கப்படல் வேண்டும்.)
  • முஸ்லிம்கள் உரிமைப் பறிப்புகளுக்கும் அநீதிக்கும் உள்ளாகும் போது நீதியை பெற்றுத் தரும் பொருட்டுசிறுபான்மை உரிமை காப்பு சட்டத்ததரணிகள் ஒன்றியம்அமைத்து சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுத்தல். 
  • மீடியாத்துறையில் பணியாற்றும் முஸ்லிம்களை ஒன்றிணைத்து சமூக விவகாரங்ளை, பாதிப்புகளை உடனுக்குடன் மக்கள் மயப்படுத்தவும், சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு செல்லவும் உரிய நடவடிக்கை எடுத்தல்
  • மாஸ் மீடியாக்களில் இஸ்லாம் குறித்த நிகழ்ச்சிகளை பணம் செலுத்தி நடாத்துதல்
  • தனியான மீடியாவை உருவாக்க முறையான திட்டமிடலையும்போதிய பௌதீக வளங்களையும் ஒன்று திரட்டுதல்
  • இனவாதிகள் பரப்பும் இஸ்லாம் குறித்த அவதூறுகளுக்கு மும்மொழிகளிலும் உள்ளரங்கு நிகழ்ச்சிகள், கேள்வி பதில் நிகழ்ச்சிகள் நடாத்துதல், மும்மொழிகளிலும் வெளியீடுகள், விமர்சனங்களுக்கு தொடரான வீடியோ பதில்களை தயார் செய்து பரப்புதல் உள்ளிட்ட அறிவார்ந்த செயற்பாடுகளை அதிகப்படுத்துதல்.

· முஸ்லிம் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளும் அதற்கான தீர்வுகளும்

  •  குறித்த நிகழ்ச்சிகளை உலமாக்களை ஒன்றிணைத்து அவர்களுக்கு வழிகாட்டி, அவர்கள் ஊடாக மக்களுக்கு தெளிவுபடுத்த திட்டமிடல்.
  • நாளாந்தம் ஏற்படும் இன்னல்களால் மன அழுத்த நோயால் முஸ்லிம்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால்உளவல ஆலோசகர்கள்மார்க்கப்பின்னணியுடன் உருவாக்கப்பட திட்டமிடல் (குறிப்பாக ஆலிம்கள், ஆசிரிகள் இத்துறையில் அதிகம் பயிற்றுவிக்கப்படல் வேண்டும்.)
  • புற்றீசல் போன்று முளைக்கும் முஸ்லிம் அரசியல் கட்சிகளை தவிர்த்து இருக்கும் கட்சி அமைச்சர்களுக்கிடையில் சமூக விவகாரங்களில் ஒத்த நிலைப்பாட்டுக்கு வர வைத்தல்.
  • முஸ்லிம்களின் பூா்வீகத்தை உறுதிப்படுத்தும் ஆவண மையம் ஒன்றினை ஸ்தாபித்தல்.

இவை இனவாத சூழலில் இருந்தும், சமகால பிரச்சினைகளிலிருந்தும் விடுபடுவதற்கான சில முன்மொழிவுகள் மாத்திரமே. இயக்க, கட்சி கட்டமைப்பு எனும் குறுகிய வட்டத்துக்குள் சிறைபட்டு தீர்வுகளை சிந்திக்காது சமூக நலன், நிரந்தர தீர்வு எனும் பரந்த மனதுடன் சிந்திப்போமேயானால் விடியலுக்கான தீர்வுகளை எட்டுவது சாத்தியமானதே. இதிலுள்ள பிரதான கேள்வி இவ்விடியலுக்கான ஆரம்ப எட்டை எடுத்து வைத்து சமூகத்தை அறிவார்ந்த பாதையில் வழிகாட்டி அழைத்துச் செல்லும் அந்த தலைமைகள் அல்லது தனிமனிதர்கள் யார் ? என்பதுவே.

மக்களுக்காக நாம் என்று அரசியலில் குதித்தவர்கள் மக்களை வைத்து பிழைப்பு நடாத்துவதே வாடிக்கையாகிப்போன சமகாலத்தில் இப்பாரிய சமூகக் கடமையை கையில் ஏந்துபவர்கள் யார்? இஸ்லாத்தின் தூய்மையான வஹியை வாழ்வில் கொள்கையாக ஏற்று, சமூக அக்கறையும், புடம்போடப்பட்ட ஈமானிய உறுதியும், பண்பட்ட ஒழுக்க விழுமியங்களும், அர்ப்பணத்துடன் கூடிய சுயநலமற்ற வாழ்வொழுங்கும் ஒருசேர பெற்றவர்களாலேயே இப்பணி சாத்தியமாகும்

அத்தகையவர்களை இனம் காண்பது பொது மக்களாகிய உங்கள் கரங்களிலேயே தங்கியுள்ளது. சிந்திக்குமா நம் சமூகம்?


ஆக்கம் – M.T.M.பர்ஸான்

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்