அன்பர்கள் கவனத்திற்கு:
இக்கட்டுரை இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தைச் சார்ந்தவர்களது வரலாற்றுக் குறிப்புகள், சுய சரிதைகள், அரச ஆவனங்கள், பத்திரிகைச் செய்திகள், என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு எகிப்து நாட்டின் அரசியல் எழுத்தாளர் மாஹிர் தகிஎன்பவரால் எழுதப்பட்ட ஆக்கத்தை தழுவியதாகவே அமைக்கப் பட்டுள்ளது. இதில் இடம் பெறும் வரலாற்று உன்மைகள், நிகழ்வுகள் தொடர்பில் மறுப்புகள், மாற்றுக் கருத்துகள் இருப்பின் ஆக்கபூர்வமாகவும் ஆதாரபூர்வமாகவும் எமக்கு தெரியப்படுத்துமாறு வினயமாய் வேண்டிக் கொள்கிறோம்.
“இஹ்வான்களும் இல்லை! முஸ்லிம்களும் இல்லை”!! என்ற வசனம் இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தில் ஒரு பிரபல்யமான வார்த்தையாகும். இக்கூற்று யாரால் யாருக்கு எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்பதை வரலாற்று ரீதியாக விளக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து இருபத்தி எட்டாம் ஆண்டு மார்ச் மாதம் இருபத்தி மூன்றாம் திகதி (1928/03/23) எகிப்து நாட்டின் இஸ்மாஈலிய்யா நகரில் ஆங்கிலேய ரானுவத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ஆறு நபர்கள் ஆரம்பப் பாடசாலையில் அறபு மொழி ஆசிரியராகக் கடமை புரிந்து கொண்டிருந்த ஹஸனுல் பன்னா அவர்களுடன் இணைந்து ஏழுபேருமாக தாங்கள் இஹ்வானுல் முஸ்லிமீன் எனும் அமைப்பைத் தொடங்கியுள்ளதாகவும் அதற்கு ஹஸனுல் பன்னா அவர்கள் “முர்ஷித்” வழிகாட்டும் தலைவராக இருப்பார் என்றும் பிரகடனம் செய்தார்கள். அப்போது ஹஸனுல் பன்னா அவர்களது வயது இருபத்தி இரண்டாக இருந்தது.
இவ்வாறு ஆரம்பிக்கப் பட்ட இயக்கத்தை ஹஸனுல் பன்னா அவர்கள் மூண்று உட்கட்டமைப்பாக நிறுவியிருந்தார்;அவைகளாவன:
1.ஆரம்பக் கட்டமைப்பு: இப்படித்தரத்தில் உள்ளவர்கள் இயக்கத்தின் போதனைகளை செவிமடுப்பார்கள். அவைகளுக்குக் கட்டுப் பட்டு நடந்துதான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது.
2.போராடும் கட்டமைப்பு: இத்தரத்தில் உள்ளவர்கள் இயக்கத்தின் போதனைகளை, வழிகாட்டுதல்களை செயற்படுத்தும் பணியை செய்பவர்கள். (இயக்க) தலைமைத்துவத்துக்குக் கட்டுப் பட்டு நடப்பது இவர்களுக்குக் கட்டாயமாகும்.
3.அரசியல் கட்டமைப்பு: இச்சாரார் முஸ்லிம்களின் விவகாரங்களைப் பொறுப்பேற்று அவர்களை இஸ்லாமிய சட்டத்தின் படி நிர்வகிக்கக் கூடியவர்கள்.இதன் இறுதி வடிவம்இஸ்லாமிய ஆட்சியை அமைபதாகும்.
இவ்வாறான உட்கட்டமைப்பைக் கொண்ட இயக்கம் கடும் உழைப்பினாலும் இஸ்லாத்தின் பெயரை இவர்கள் பயன்படுத்தியதனாலும் மிக வேகமாக இரண்டு வருட காலத்திற்குள் இஸ்மாஈலிய்யா நகரத்தில் இருந்து அதனை அண்டிய நகரங்களுக்கும் பரவி நான்கு வருடத்தில் எகிப்தின் தலைநகர் கெய்ரோவில் காரியாலயம் அமைத்து இயக்கத்தின் பேரில் வார சஞ்சிகை ஒன்றை வெளியிடும் அளவிற்கு வளர்ச்சி அடைந்தது.அத்துடன் சிரியா, லெபனான், சூடான், பலஸ்தீன் ஆகிய வெளி நாடுகளிலும் கிளைகள் ஆரம்பிக்கப் பட்டன.
முதல் கட்டமைப்பை உருவாக்குவதில் சுமார் பத்துவருட காலம் செலவிட்ட ஹஸனுல் பன்னா அவர்கள் ஆயிரத்துத் தொள்ளாயிரத்து முப்பதியெட்டாம் ஆண்டில் முதல் கட்டத்தில் இருந்து இரண்டாம் கட்டமான “போராட்டக் குழுவை” உருவாக்கினார்.தனது இயக்கத்தின் ஒரு பிரிவினரை சாதாரன சிவில் பிரச்சாரப் பணியில் இருந்து ரானுவ செயற்பாட்டுக்கு பயிற்றுவித்தார்.ஆரம்பத்தில் சில பயனக் குழுக்களை அமைத்து பின்பு அவைகளுக்கென சீருடைகள் வழங்கி பின்னர் சிறு சிறு தலைமைத்துவத்திற்குக் கட்டுப்படக்கூடிய ஒருமைபடுத்தப் பட்ட குழுக்களை உருவாக்கினார். பின்பு அவைகளை இணைத்து“அல்ஜிஹாஸ் அஸ்ஸிர்ரி” அல்லது “அத்தன்ழீம் அஸ்ஸிர்ரி” என அழைக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார்.
இவ்வாயுதக் குழுவில் ஒருவரை இணைத்துக் கொள்ள மிகக் கஷ்டமான நிபந்தனைகளும் மிக நுட்பமான தகுதி காண் விதிமுறைகளும் பிரயோகிக்கப் பட்டன. தங்களது பாதுகாப்பிற்காகவும் ரகசியத்தன்மைக்காகவும் ஒவ்வொரு தலைவருக்கும் கீழ் ஒன்றுக் கொன்று தொடர்பில்லாத உப குழுக்களை உருவாக்குதல் என்ற ரானுவக் கட்டமைபில் பல குழுக்களாக மேற்படி ஆயுதக் குழு உருவாக்கப்பட்டது.
இவ்வாறு உருவாக்கப் பட்ட ஆயுதக் குழுவிற்கு அஹ்மத் ஸகி, மஹ்மூத் ஸப்பாஃ, அஹ்மத் ஹஸன், பிரபல்ய எழுத்தாளர் முஸ்தபா மஷ்ஹூர் ஆகியோரின் ஒத்தாசையுடன் செயற்படுமாறு அப்துர் ரஹ்மான் அஸ்ஸிந்தி என்பவரை ஹஸனுல் பன்னா அவர்கள் தலைவராக தெரிவு செய்து (மஹ்மூத் ஸப்பாஃ என்பவர் கூற்றுப் படி)தங்களுக்குத் தேவையான கட்டளைகளை தன்னிடம் (ஹஸனுல் பன்னா) இருந்தே நேரடியாகப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் பணித்திருந்தார்கள். இதற்கேற்ப இவ்வாயுதக் குழு ஆங்கிலேய படையினர் கூடும் இடங்களில் கைக் குண்டுகளை வீசியதுடன் ஆங்கிலேயப் படையினர் பயனம் செய்வதற்கான விஷேட புகையிரதத்தில் குண்டு ஒன்றையும் வெடிக்கச் செய்தனர்.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தைந்தாம் ஆண்டு (1945)”தேசிய கட்சி”யைச் சேர்ந்த மஹ்மூத் அல் ஈஸவி என்பவர் எகிப்தின் அப்போதைய பிரதமர் அஹ்மத் பாட்ஷா மாஹிர் அவர்களை படு கொலை செய்தார். எனினும் மேற்படி கொலையாளி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் முக்கிய உறுப்பினர்தான் என்பதை இயக்கத்தின் பிரமுகர்களான ஹஸன் அல்பாகூரி மற்றும் செய்யித் ஸாபிக் (பிக்ஹுஸ் ஸுன்னா எனும் பிரபல்ய நூலின் ஆசிரியர்) ஆகியோர் தங்களது நாட்குறிப்புகளில் ஏற்றுக் கொண்டனர்!!.
இதே ஆண்டில்தான் “அல்முஸவ்விர்” சஞ்சிகையால் நடாத்தப் பட்ட “பொதுச் சேவையாளர்”பட்டத்திற்கான கருத்துக் கணிப்பில் ஹஸனுல் பன்னா அவர்கள் பட்டத்திற்குரியவராக தெரிவு செய்யப் பட்டார்கள்.
மேலும் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஆறாம் ஆண்டு(1946) செய்து கொள்ளப்பட்ட“சித்கி பீபைன்” ஒப்பந்தந்துக்கு எதிராக எகிப்தில் ஆங்காங்கே அரசுக்கு எதிரான பல ஆர்ப்பாட்டங்கள் இடம் பெற்றன. இவ்வார்ப்பாட்டங்களில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினரின் ஆயுதக் குழு மும்முரமாக ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் பெரும் முயற்சி செய்தனர். பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடம் பெற்ற மோதல்களில் குறித்த ஆயுதக் குழுவினர் சில போலீஸ் நிலையங்களை குண்டு வைத்துத் தகர்த்தனர்.இதனால் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கு மக்கள் மத்தியில் பிரபல்யமும் செல்வாக்கும் அதிகரித்து மக்கள் சாரிசாரியாக அமைப்பில் இணைய ஆரம்பித்தனர்.
இவ்வாண்டில்தான் காலித் முஹியித்தீன், கமால் ஹுஸைன், ஹஸனுல் பன்னாவின் இளைய சகோதரர் ஜமால் அல் பன்னா, பிற்காலத்தில் எகிப்திய கொடுங்கோல் ரானுவ ஆட்சியாளராக வந்து இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பினரையே துவசம் செய்த ஜமால் அப்துன் நாஸர் ஆகியோர் அல் குர் ஆன் பிரதி மீதும் கைத்துப்பாக்கி மீதும் சத்தியப் பிரமானம் செய்து “ஆயுதக் குழுவில்” இணைந்து கொண்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழாம் ஆண்டு நவம்பர் மாதம் (1947/11) முஸ்லிம்களின் புணித பூமி பலஸ்தீன் முஸ்லிம்களுக்கும் யூதர்களுக்குமாக பிரிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை வெளிவந்தது. இதை யொட்டி இக்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் தங்கள் பத்திரிகையில் யூதர்களுக்கு எதிரான அறபுப் படையணியை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றி யுத்தத்திற்கான ஆயுதங்களையும் பொருளாதாரத்தையும் சேகரிக்க ஒரு குழுவை அமைக்கிறார். இதன் காரனமாக அறபு உலகில் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கும் ஹஸனுல் பன்னா அவர்களுக்கும் மிகுந்த செல்வாக்கு ஏற்படுகிறது.
ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டு பெப்ரவரி மாதம் (1948/02)இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் குறுக்கு வழியில் கிலாப்த்தை உருவாக்கயெமனின் அப்போதைய ஆட்சியாளர் யஹ்யா ஹமீதுத் தீன் அவர்கள் எதிர்க் கட்சி யைச் சேர்ந்த அப்துல்லாஹ் அல் வஸீரி அவர்களால் படுகொலை செய்யப்பட்டதும் அவரது பேரர் அல் பத்ர் ஹமீதை ஆட்சிக்குக் கொண்டுவர பெரிதும் முயற்சித்தனர். எனினும் குறித்த குறுக்கு வழி கிலாபத் வெறும் இருபத்தி ஆறு நாட்களே நீடித்தது.இவ்வாறு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர் பிற நாட்டில் மேற்கொண்ட புரட்சியினால் எகிப்திய அரசாங்கத்துக்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினருக்கும் இடையே பெரும் விரிசலை தோற்றுவித்து ஒரு பதட்ட நிலையை உருவக்கியது.
இதே வருடம் மார்ச் மாதம் இருபத்தியிரண்டாம் (1948/03/22) திகதி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பை சேர்ந்தவர்கள் தொடர்பாக தீர்ப்பு வழங்கிய சிவில் நீதிபதி அஹ்மத் பேக் என்பவர் வீதியைக் கடந்து செல்லும் போது ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஹுஸைன் அப்துல் ஹாபிழ்,மஹ்மூத் ஸைனுஹும் என்ற இருவரால் படு கொலை செய்யப்பட்டார்.
இப்படுகொலை தொடர்பாக விசாரிக்க கலாநிதி அப்துல் அஸீஸ் தலமையில் இஹ்வான்கள் ஒரு குழுவை அமைத்து ஆயுதக் குழுத் தலைவர் அப்துர் ரஹ்மான் ஸிந்தியை விசாரித்த போதுஹஸனுல் பன்னாவின் சிலேடையான வார்த்தையை புரிந்து கொண்டதில் ஏற்பட்ட தவறுதான் நீதிபதியின் கொலைக்குக் காரனம் என்பது தெரிய வந்தது. எனினும் கொலைக் குற்றத்திற்கான தண்டப் பனத்தை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பினர்தான் செலுத்த வேண்டும் என விசாரனைக் குழு முடிவெடுத்தது. பின்னர் அரசாங்கமே அதை கொடுக்க வேண்டும் என பேசித்தீர்க்கப் பட்டது!!
அத்துடன் ஹஸனுல் பன்னாவின் நேரடியான உத்தரவின் மூலமாக அல்லது ஏற்கனவே நாம் விபரித்த ஆலோசனைக் குழுவின் உத்தரவின் பேரில்தான் ஆயுதக் குழு செயற்பட வேண்டும் என உறுதியான தீர்மானம் இவ்விசாரனையில் நிறைவேற்றப் பட்டது.
ஆனால் வழமையாக இடம் பெறும் இயக்கத்தின் செவ்வாய் தின உரையில் ஹஸனுல் பன்னா அவர்கள் “மேற்படி நீதிபதியின் படு கொலைக்கும் இஹ்வானுல் முஸ்லிமீனுக்கும் சம்பந்தம் இல்லை” என மறுத்துரைத்தார். எனினும் சுமார் ஐந்து மாததத்தின் பின் குற்றவாளிகளை அரசாங்கம் அடையாளம் கண்டு குற்றம் உறுதிப்படுத்தப் பட்டு இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உன்மை முகம் சகலருக்கும் அடையாளம் காட்டப் பட்டது.!!
இதே வருடம் நவம்பர் மாதம் பதினைந்தாம் திகதி (1948/11/15)எகிப்து போலீசார் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் ரக வாகனம் ஒன்றை எதேச்சையாக சோதனை செய்த போதுஇஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஆயுதக் குழு தொடர்பான முக்கிய ஆவனங்களும் கைக் குண்டுகள், வெடி பொருட்கள் ஆகியவையும் கைப்பற்றப் பட்டன.
மேற்படி ஆவனங்களில் ஏற்கனவே நடந்த குண்டு வெடிப்புகள் பற்றிய திட்டங்களும் எதிர்காலத்தில் செயற்படுத்தப் படவிருந்த அமெரிக்க, பிரித்தானிய தூதரகங்களை குண்டு வைத்து தகர்ப்பதற்கான ரகசிய திட்டங்களும் காணப்பட்டன. இது தொடர்பாக நடாத்தப்பட்ட புலன் விசாரனையில் அஹ்மத் ஆதில் ,மற்றும் இன்னுமொருவர், இஹ்வானுல் முஸ்லிமீன் ஸ்தாபக உறுப்பினரும் ஆயுதக் குழுவின் ஆலோசகருமான முஸ்தபா மஷ்ஹூர் ஆகிய இயக்கத்தின் முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டனர்.
இதே வருடம் டிசம்பர் மாதம் நான்காம் திகதி (1948/12/04)இப்போதைய கெய்ரோ பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப் படுத்த கெய்ரோ நகர போலீஸ் பொறுப்பதிகாரி ஸலீம் ஸகிநேரடியாக களத்தில் இறங்கியிருந்தார்.எனினும் ஆர்ப்பாட்டத்தின் போது இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த மானவன் ஒருவன் நாலாவது மாடியில் இருந்து வீசிய கைக்குண்டில் அவர் கொல்லப்பட்டார். இதை ஆயுதக் குழுவின் பொறுப்பாளர்களில் ஒருவரான மஹ்மூத் ஸப்பாஃ என்பவர் பின்னொரு காலத்தில் “அக்காலத்தில் ஆர்ப்பாட்டங்களின் போது குண்டு வீசுவது ஒரு சாதாரன செயலே” என நியாயப்படுத்தியும் இருந்தார்.
இதனையொட்டி இஹ்வான்களுக்கும் எகிப்திய அரசாங்கத்துக்குமிடையே பெரும் பதட்ட நிலை தோன்றியது. நில மையைத்தனித்து அரசாங்கத்துக்கும் இஹ்வான்களுக்குமிடையே ஒரு சுமூக நிலையைத் தோற்றுவிக்க ஹஸனுல் பன்னா அவர்கள் சபாநாயகர் ஹாமித் ஜௌதாஃ மூலமாக பிரதமர் மஹ்மீத் நக்றாஷி பாட்ஷா அவர்களுடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சித்தார். ஆனால் சபாநாயகர் அதை மறுத்து விடவே மன்னர் பாரூக்குடன் அல்லது ஜனாதிபதி செயலகத்தலைவர் இப்றாஹீம் அப்துல் ஹாதியுடன் தொடர்பு கொள்ள எத்தனித்தார் .ஆனால் அதுவும் கைகூடவில்லை.
இதை தொடர்ந்து மேற்படி சம்பவம் இடம் பெற்று இரண்டு நாட்களுக்குப் பின் டிசம்பர் ஆறாம் திகதி இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உத்தியோக பூர்வ பத்திரிகை அரசங்கத்தால் தடை செய்யப்பட்டது. இதே தினத்தில் அரச சார்பு பத்திரிகை “அல் அஸாஸ்” மிக விரைவில் மகிழ்சிகரமான செய்தியொன்று வெளியிடப்படும் என்ற தகவலை வெளியிட்டது.இதனால் இஹ்வான்கள் மத்தியில் பெரும் பதட்டம் நிலவியது. என்ன விலை கொடுத்தாவ்து இயக்கத்தைக் காப்பாற்ற ஹஸனுல் பன்னா அவர்கள் எவ்வளவோ முயற்சிகள் செய்தார். ஆனால் எதுவும் பயனளிக்கவில்லை.
டிசம்பர் எட்டாம் திகதி இரவு பத்து மணிக்கு உள்ளக அமைச்சின் பொறுப்பாளர் அப்துர் ரஹ்மான் அம்மார் என்பவர் ஹஸனுல் பன்னாவைத் தொடர்பு கொண்டு சற்று நேரத்தில் மகிழ்ச்சிகரமான !!முக்கிய செய்தியொன்று வானொலியில் ஒலிபரப்பப் படும் எனத் தெரிவித்தார்.
கெய்ரோவின் தலைமைக் காரியாலயத்தில் இயக்கத்தலைவர்கள், உறுப்பினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்சிகரமான!! முக்கிய செய்தியை எதிர்பார்த்து வானொலியைச் சூழ அமர்ந்திருந்த போது ரானுவ தலைமை அதிகாரியினால் ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தியெட்டாம் ஆண்டுக்கான அறுபத்தி மூண்றாம் சட்டமாக “இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தின் அனைத்துக் கிளைகளும் கலைக்கப்பட்டதாகவும் அதன் பொருளாதாரம் மற்றும் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும்” என்ற சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது.
இச்சட்டத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த இஹ்வான்கள் காரியாலயத்தில் இருந்து வேளியேற எத்தனித்த போது அரச படையினர் சூழ்ந்து கொண்டு ஹஸனுல் பன்னா அவர்களைத்தவிர அனைவரையும் கைது செய்தனர்.இவ்வாறு அரசாங்கம் வைத்த பொறியில் இஹ்வானுல் முஸ்லிமீன்கள் மாட்டிக் கொண்டனர்.
தன்னை மாத்திரம் கைது செய்யாமல் விட்டு விட்டதில் ஏதோ சூழ்ச்சி இருப்பதை உணர்ந்த ஹஸனுல் பன்னா இயக்கத்தின் முதல் தர பொறுப்பாளர் என்ற வகையில் தன்னையும் கைது செய்யும் படி அரசாங்கத்திடம் எவ்வளவோ மண்றாடியும் அரசாங்கம் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவ்வாறு இயக்கம் கலைக்கப்பட்டதற்கு முழுப் பொறுப்பாளி பிரதமர் நக்றாஷி பாட்ஷாதான் எனக் கருதிய இஹ்வான்கள் அவரை எப்படியாவது கொண்றொழித்து விட வேண்டும் என கங்கணம் கட்டினர்.இதை பின்பு இது தொடர்பான வழக்கில் வாதி தரப்பில் ஆஜரான அப்துல்லாஹ் றஷ்வான் ,ஹஸனுல் பன்னாவின் இளைய சகோதரர் ஜமால் பன்னா ஆகியோரின் கூற்றுகள் உறுதி செய்கின்றன.
ஆனாலும் ஆளும் கட்சித்தலைவர், தேசிய ரானுவ பொறுப்பாளர், பிரதமர், உள்ளக மற்றும் நிதி அமைச்சர் ஆகிய பொறுப்பு வாய்ந்த பதவிகளை வகித்த மஹ்மூத் நக்றாஷி அவர்கள் இவ்வானுல் முஸ்லிமீன் இயக்கம் கலைக்கப் பட்டதனால் இஹ்வான்கள் தன்னை படு கொலை செய்ய முயற்சிப்பார்கள் என்பதை அறிந்திருந்ததால் தனது பாதுகாப்பை மிகவும் பலப்படுத்தினார்.
எனினும் டிசம்பர் இருபத்தியெட்டாம் திகதி செவ்வாய்க் கிழமை காலை பத்து மணிக்கு உள்ளக அமைச்சின் காரியாலயத்துக்குள் ரானுவ சீருடையில் நுழைந்த இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது பாதுகாப்புப் படையினருடன் வீற்றிருந்த பிரதமர் நக்றாஷி பாட்ஷாவின் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்து படு கொலை செய்து விட்டார்.
இதை தொடர்ந்து ஹஸனுல் பன்னா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். அவரது ஆயுதக் குழுத்தலைவர் அப்து ரஹ்மான் ஸிந்தி கைது செய்யப்பட அதன் புதிய தளபதியாக செய்யித் பாயிஸ் என்பவர் நியமிக்கப் பட்டார்.
இதைதொடர்ந்து புதிய ஆண்டான ஆயிரத்துத் தொள்ளாயிரத்து நாற்பத்தொன்பது ஜனவரி மாதம் பதின் மூண்றாம் திகதி காலை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பைச் சேர்ந்த ஷபீக் அனஸ் என்பவர் எகிப்தின் மேன் முறையீட்டு நீதிமன்றத்திற்குள் ஒரு கைப் பெட்டியுடன் நுழைந்து தான் சில வழக்குகள் தொடர்பாக கிராமப்புறங்களின் பிரதிநிதியாக அரசாங்க வக்கிலை சந்திக்க வந்ததாகக் கூறி தனது பெட்டியை அங்கே வைத்து விட்டு காலை உணவு அருந்தி வருவதாகக் கூறி வெளியேறினார்.
இவரது நடவடிக்கையில் சந்தேகங்கொண்ட அலுவலகப் பணியாளர்கள் பாதுகாப்புப் படையினருடன் தொடர்பு கொண்டு பெட்டியை பரி சோதித்க அதை வெளியே கொண்டு சென்ற போது வீதியில் வைத்து அப்பெட்டி வெடித்து விட்டது.!!
வெடி குண்டைக் கொண்டு வந்த ஷபீக் அனஸ் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரனைக்குட்படுத்திய போது அவர் “ஜீப் ரக வாகனத்தில் இருந்து போலீஸாரால் கைப்பற்றப் பட்ட முக்கிய ஆவனங்களையும் தடயங்களையும் அழிக்கும் நோக்கில் ஆயுதக் குழுவின் புதிய தலைவர் செய்யித் பாயிஸ் என்பவரின் பணிப்புரையின் பேரில் நீதிமன்றத்தை தகர்க்க வந்ததாக விசாரனையின் போது ஏற்றுக் கொண்டார்.
இதனைத்தொடர்ந்து அப்துல் அஸீஸ் பாட்ஷா என்பவரும் முஸ்தபா பேக் என்பவரும் வீட்டுக் காவலில் வைத்திருந்த ஹஸனுல் பன்னா அவர்களை சந்தித்து ஒரு ரகசிய பேச்சுவார்த்தை நடாத்துகிறார்கள்.
அடுத்த நாள் பத்திரிகையில் ஹஸனுல் பன்னா அவர்கள் ஒரு அறிக்கையை விட்டிருந்தார்கள் அதில் மேற்படி வண்முறைகளில் ஈடுபட்ட, தான் பத்து வருடங்களாக உருவாக்கி கட்டிக்காத்த தனது ஆயுதக் குழுவைச் சார்ந்தவர்களை அவர்கள் ” இஹ்வான்களும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை” என தெரிவித்திருந்தார்கள்.!!
ஆக இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தில் சேர்ந்து தங்களது உயிர்களையும் அர்ப்பணிக்கத் துணிந்த அப்பாவி இளைஞர்கள் “இஹ்வான்களும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை”எனக் காட்டிக் கொடுக்கப்பட்டு முத்திரை குத்தப்பட்ட கசப்பான வரலாறு இவ்வாறுதான் அரங்கேறியது.
எனவே இதன் மூலம் மேற்படி “இஹ்வான்களும் இல்லை, முஸ்லிம்களும் இல்லை” என்ற கூற்று யாரால் கூறப்பட்டது என்ற கேள்விக்கு இஹ்வானுல் முஸ்லிமீன் ஸ்தபகர், தலைவர்ஹஸனுல் பன்னாவால் கூறப்பட்டது என்ற விடையும் யாருக்குக் கூறப்பட்டது என்ற கேள்விக்கு இஸ்லாத்தின் பெயரால் இயக்கத்தில் சேர்ந்து தங்களது உயிர்களையும் அர்ப்பணிக்கத் துணிந்த அப்பாவி இளைஞர்களுக்கு கூறப்பட்டது என்ற விடையும்எச்சந்தர்ப்பத்தில் கூறப்பட்டது என்ற கேள்விக்கு அரசாங்கத்தின் நெருக்கடிகளின் போது,தனது உயிருக்கு ஆபத்து என்று வந்த போது, தனது மலினமான அரசியல் அபிலாஷைகளுக்கு பங்கம் ஏற்படும் என்ற போது என்ற விடையும் எமக்குக் கிடைக்கிறது.!!
படிப்பது ராமாயனம் இடிப்பது பெருமாள் கோயில் என்ற ரீதியில் ஒரு புறத்தே ஒற்றுமைக் கோஷம் எழுப்பிக் கொண்டு மறு புறத்தே நாலாந்தர அரசியல் லாபங்களுக்காக முஸலிம்களையே கொண்று குவிப்பதற்கு இஸ்லாத்தில் ஆதாரம் இருக்கிறதா என்பது ஒரு புறமிருக்க தன்னை நம்பி வந்த அப்பாவி மக்களையே காட்டிக் கொடுத்த மாபெரும் வலலாற்றுத் துரோகம் இவ்வாறுதான் ஹஸனுல் பன்னா என்பவரால் அரங்கேற்றப் பட்டது என்பது கடும் விசனத்திற்கும் கண்டனத்துக்கும் உரியதாகும்.
ஹஸனுல் பன்னா என்பவரின் நேரடிக் கட்டளையின் பேரில் செயற்பட்ட ஆயுதக் குழுவினரை அவர்கள் “இஹ்வான்கள் இல்லை” என மறுத்ததும் இல்லாமல் “முஸ்லிகளும் இல்லை”என மறுத்ததன் மூலமாக “முஸ்லிம்களை முஸ்லிம்கள் இல்லை” என மறுக்கும் வரலாற்றில் புதைந்து போன சித்தாந்தம் உயிரூட்டப் பட்டு நவீன காலத்தில் இவ்வாறுதான் மீண்டும் விதைக்கப் பட்டது என்பதையும் இதனூடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
இதன் பின்னர் ஹஸனுல் பன்னா அவர்கள் கொலை செய்யப்பட்டதும் அதை அரசாங்கமே செய்தது என சிலரும் இல்லை!! இல்லை! இந்தத் துரோகச் செயலினால்., காட்டிக் கொடுப்பால்இஹ்வானுல் முஸ்லிமீன் இயக்க ஆயுதக் குழுவினர்தான் ஹஸனுல் பன்னாவை கொலை செய்தார்கள் என மற்றும் சில அரசியல் ஆய்வாளர்கள், அவதானிகளும் பலத்த சர்ச்சை கொள்கிறார்கள்.
இது பற்றிய விரிவான விளக்கங்களை இன்ஷா அல்லாஹ் தேவையேற்படும் போது இனிவரும் கட்டுரைகளில் நோக்குவோம்.
எமது பிராத்தனை:
“யா அல்லாஹ்! சத்தியத்தை எமக்கு சத்தியமாகக் காட்டி அதனைப் பின்பற்றும் பாக்கியத்தையும் அசத்தியத்தை அசத்தியமாகக் காட்டி அதனை தவிர்ந்து வாழும் பாக்கியத்தையும் எமக்கு அருள்வாயாக!!”
யா அல்லாஹ் எமது பாவங்களையும் எம்மை இறை விசுவாசத்தால் முந்திய எமது சகோதரர்களின் பாவங்களையும் மண்ணிப்பாயாக!விசுவாசங் கொண்டவர்கள் மீது எம் உள்ளங்களில் எந்தக் காழ்ப்புணர்வையும் ஏற்படுத்தி விடாதே !! எம் இரட்சகா! நீதான் மண்ணிப்பவனாகவும் கிருபை உள்ளவனாகவும் இருக்கிறாய்!
குறிப்பு
குறித்த “இஹ்வான்களும் இல்லை முஸ்லிம்களும் இல்லை” என்ற அறிக்கை ஹஸனுல் பன்னா அவர்களால் தான் வெளியிடப்பட்டது என்பதை இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் ஸ்தாபக உறுப்பினர் கலாநிதி மஃமூத் அப்துல் ஹலீம் என்பவர் தனது “الإخوان المسلمون أحداث صنعت التاريخ”
(இஹ்வானுல் முஸ்லிமீன் வரலாறு படைத்த சில நிகழ்வுகள்” என்ற இஹ்வானுல் முஸ்லிமீன் அமைப்பின் உத்தியோக பூர்வ வரலாற்றுப் பதிவில் இரண்டாம் பாகத்தில் எழுபத்தி ஐந்தாம் பக்கத்தில் (தாருத் தஃவா வெளியீடு) உறுதி செய்துள்ளார் என்பதை வாசகர்களுக்கு அன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அபூ ஸைத் அல் அதரி
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்