Pages

Wednesday, May 30, 2012

தம்புள்ளை பள்ளிவாசல் ஆக்ரமிப்பும் கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்!


தம்புள்ளை பள்ளிவாசல் ஆக்ரமிப்பும்

கோடாரிக் காம்பாய் மாறிப்போன முஸ்லிம் தலைமைகளும்!

மனிதர்களில் ஒருவர்  மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்காவிட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத்தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளிவாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும்.” (அல்குர்ஆன் 22 : 40)

கடந்த 20/04/2012 ஆம் திகதி இலங்கை முஸ்லிம்களின்  உணர்வுகள் மொத்தமாய் எரிமலையாக்கப்பட்ட தினம்! இலங்கை தேசத்தின் இறைமையை காக்கும் இமைகளாய் வாழ்ந்த முஸ்லிம்களின் இறையில்லம், இனவாதிகளின் ஆக்ரமிப்புக்கும், அடாவடித்தனத்துக்கும் உள்ளாகி, எமது வழிபாட்டு உரிமை தட்டிப்பறிக்கப்பட்ட கரு தினம்! 50 ஆண்டுகளாய் அல்லாஹ்வை வழிபட்டு வந்த, அரச பதிவுகளுடன் கூடிய ஆவணங்களை அத்தாட்சியாய் வைத்துள்ள, ர்  இறையில்லத்தை திட்டமிட்ட சதிவலைகள் மூலம் சில இனவாத சக்திகள் கபளீகரம் செய்ய எத்தனித்த தினம்!

பௌத்தர்களுக்குரிய புனித புமிக்குள் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தளம் அமைய இடமளியோம்!என்ற உண்மைக்குப் புறம்பான வார்த்தை ஜாலங்களை சோடித்து, இனவாத கோஷத்துடன் ஓர் இறையில்லம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளமை இந்நாட்டின் புர்வீகக் குடிகளான முஸ்லிம்களின் மத உரிமையை தட்டிப்பறிக்கும் செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இலங்கை சனநாயக சோசலிஸக் குடியரசின் சட்ட யாப்பின் மத சுதந்திரத்தை வழியுறுத்தும் 10ம் ஷரத்து மற்றும் நிந்தனைகளிலிருந்து பாதுகாக்கும் 11ம் ஷரத்து, அடிப்படை மனித உரிமைகளைப் பாதுகாக்கும் 15ம் ஷரத்து போன்றவை இவ்வினவாதிகளினால் இங்கு அப்பட்டமாய் மீறப்பட்டுள்ளன.

இரண்டு கோடி என்ற இலங்கையின் சனத்தொகையில் இரண்டாம் பெரும்பான்மையாய் முஸ்லிம்கள் வளர்ந்து வருகிறார்கள் என்ற அண்மைய புள்ளி விபரத்தின் இரகசிய தகவல் கசிவு, மெரிக்க வல்லாதிக்கத்தின் ஜெனீவா பிரேரணையை எதிர்த்து நாட்டின் இறைமையை காப்பதற்காய் தம்புள்ளை நகரில் ஒன்று குழுமிய 1000 க்கு மேற்பட்ட முஸ்லிம்களின் எண்ணிக்கை, இறையில்ல ஆக்ரமிப்புக்கு ஒரு வாரத்திற்கு முன் ஜனாதிபதியை சந்திப்பதற்காய் உலகப்பந்தின் ஒவ்வொரு சாண் நிலப்பரப்பிலிருந்தும் முஸ்லிம்களை கருவறுக்கத் துடிக்கும் ஸியோனிஸ இஸ்ரேலிய தூதுக்குழுவின் இலங்கைக்கான திடீர் விஜயம், தம்புள்ளை ரஜமஹா விகாரையை தளமாக வைத்து இயங்கும் ரங்கிரி F.M இன் தொடர்ந்தேர்ச்சியான இனத்துவேச அறிவிப்புகள், 19ஆம் திகதி இரவே ஆக்ரமிப்பை தடுப்பதற்குண்டான உதவிகள் காவல் நிலைய உயரதிகாரிகளிடம் பள்ளி நிர்வாகிகளினால் கோரப்பட்ட போதும்  பாதுகாப்பு முஸ்தீபுகளில் காவல் நிலையம் கரிசனைகாட்டாமை, காவி உடை தரித்த காடையர் கூட்டம் காட்டு தர்பார் நடாத்திய போதும் காவல் நிலைய காவலர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்தமை, உச்ச நீதிமன்ற அறிவித்தலுடன் மட்டுமே சீல் வைக்க அதிகாரம் உள்ள வணக்கஸ்தலத்தை, நீதி மன்ற உத்தரவின்றி பிரதேச செயலக  அதிகாரியும், காவல் நிலைய DIG யும் சீல் வைத்தமை, இத்தனை சட்ட மீறல்களையும் கண்டித்து எதிர் நடவடிக்கை எடுக்க கடைமைப்பாடுள்ள பிரதமர், நடைபெறாத ஒரு ஒன்று கூடலை நடைபெற்றதாகக் கூறி, குறித்த பள்ளிவாசலை அது அமைந்துள்ள இடத்திலிருந்து அகற்றி வேறு இடத்துக்கு இடமாற்ற அமைச்சர்கள் இணக்கம் தெரிவித்தனர் என்று தனது அலுவலக முத்திரையுடன் வெளியிட்ட ஊடக அறிக்கை, பள்ளிவாசல் ஆக்ரமிப்பை எதிர்த்து நடாத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டப் பேரணிகளை அரச சார் சக்திகள் தடுப்பதற்குண்டான வழிவகைகளை செய்தமை, பள்ளிவாசலுக்குள் அத்துமீறி நுழைந்த காடையர்களை கைது செய்தல் குறித்து இது வரை ஜனாதிபதியவர்கள் எந்தவொரு அறிக்கையினையும் ஊடகங்களுக்கு விடாது மௌனம் சாதிக்கின்றமை  உள்ளிட்ட குறித்த நிகழ்வுடன் தொடர்புற்ற அனைத்து காரணிகளையும் ஒன்றினைத்து நோக்குகையில், நடந்த சம்வத்திற்கும் ஆளும் அரசிற்கும் நெருங்கிய தொடர்பும் பின்புலமும் உண்டு என்ற வழுவான ஐயப்பாடு முஸ்லிம்களின் ஆழ்மனதில் எழ ஆரம்பித்துள்ளது.

இலங்கை மண்ணின் புர்வீகக் குடிகளில் முஸ்லிம்கள் ஒன்றும் மூன்றாம் தர பிரஜைகளல்லர். இந்நாட்டின் சுதந்திரத்திற்காகவும், அபிவிருத்திக்காகவும் உதிரத்தை உரமாய் பாய்ச்சிய கீர்த்திக்குரிய பிரஜைகள் நாம்.தேசப்பற்றுடன் செயலாற்றும் எம்மை நசுக்கி, எம் உரிமைகளை பறித்து, எம் கலாசார முதிசயங்களை அழித்து, எம் இருப்பை இம்மண்ணை விட்டும் இல்லாதொழிக்க நினைத்தால் அது வெரும் பகற்கனவு தான் என்பதை இனத்துவேஷ விஷமிகளின் செவிகளுக்கு உரத்துச் சொல்கிறோம்! அதே சமயம், முஸ்லிம்களின் இருப்பும், ரிமைகளும் கண்னெதிரே களவாடப்படுவதை கண்ட பின்பும், தங்களது அதிகாரக் கதிரைகளை தக்க வைத்துக் கொள்வதற்காய், அரசியல் காய்நகர்த்தி, வார்த்தையில் மட்டும் எனது சமூகம்என்று நீலக்கண்ணீர் வடிக்கும் முஸ்லிம் அரசியல் வேஷதாரிகளின் உண்மை முகம் இந்நிகழ்வுடன் சமுதாயத்திற்கு தோலுரித்துக் காட்டப்பட்டுள்ளது.

மேலும், முஸ்லிம்களின் மார்க்க மற்றும் உலகியல் வழிகாட்டல்களுக்கு நாங்களே ஏகபோக உரிமை கொண்டவர்கள் என்று கருதப்பட்ட அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் சமூக பிரக்ஞை அற்ற சுயநலத்தனமும், அரச சார்பான பச்சோந்தித்தனமும் வெள்ளிடை மலையாய் வெளிப்பட்டுமுள்ளது. அநீதியை தட்டிக்கேற்க திராணியற்று, அதிகார வீச்சுக்கு முன் பெட்டிப்பாம்பாய் அடங்கி, மார்க்கம் சொல்லாத அடிப்படையில் நோன்பு நோற்று அமைதிகாக்கும் படி ஏவிய ஜம்இய்யதுல் உலமாவின் மார்க்க அறிவை என்னவென்று சொல்வது?

பல்லின சமுதாயத்தவர்கள் தொப்புல் கொடி உறவாய் கூடி வாழும் இலங்கை நாட்டில் ஒவ்வொரு இனத்தவருடைய உரிமைகளையும், உணர்வுகளையும் மதித்து வாழும் போதே நல்லிணக்கமும் சமாதானமும் நீடித்து நிலைக்க முடியும். இனங்களுக்கிடையிலான நல்லுறவை சிதைக்கும் இனவாத செயற்பாடுகளை அரசு மற்றும் சிவில் நிறுவனங்கள் உரிய முறையில் நிறைவேற்றத்தவரினால் அதன் விளைவு விபரீதமானதாய் இருக்கும் என்பதை சம்பந்தப்பட்டவர்களின் செவிகளுக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் வாஞ்சையோடு எடுத்துச் சொல்கிறது. உரியவர்கள் இது குறித்து சிந்திப்பார்களா?

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்