Pages

Sunday, July 3, 2011

அசத்தியத்தை வேறு பிரித்துக் காட்டும் அற்புத வேதம் அல் குர்ஆன்


அசத்தியத்தை வேறு பிரித்துக் காட்டும் அற்புத வேதம் அல் குர்ஆன்
இந்தக் குர்ஆன் ரமழான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (2 : 185)
ரமழான்மண்ணகத்து மைந்தர்களை மனித குல மாணிக்கங்களாக பட்டைத் தீட்ட வந்த மகத்தான மாதம். தீமைகளின் சுட்டெறிக்கும் தீச்சுவாலையால் காயப்பட்டுப் போன கல்புகளை கறை நீக்கி சுவனக்கரை சேர்க்க வந்த கண்ணிய மிகு மாதம். பாவப்பட்டுப் போன பாவிகளின் பழுதுப்பட்டுப் போன பண்புகளை பக்குவப்படுத்த வந்த பண்பாட்டுப்பாசறை. உலகச்சத்தை உதறித்தள்ளி இறையச்சத்தை உள்ளத்தில் விதைக்க வந்த உன்னத மாதம். ஏழைகளின் ஏக்கத்தினை அறிந்து ஏவல் புரியத்தூண்டும் எழில் மிகு மாதம்
இவை ரமழான் குறித்து எம் இதயங்களில் இழையோடி உதடுகளில் வெளிப்படும் வனப்பான வர்ணனை வார்த்தைகள். இவ்வத்தனை வர்ணனைகளையும் தாண்டி ரமழானுக்குள் புதைந்துள்ள இன்னுமோர் உண்மை சுடர்விட்டு ஒளிர்ந்துகொண்டிருக்கிறது. ஆம்! ரமழான் என்ற நாமம் கிறீடமாய் ஜொலிப்பதற்கான அடிப்படை காரணம் அம்மாதத்தில் உலக வழிகாட்டி அல்குர்ஆன் அருளப்பட்டமை ஒன்று தான். இறைவழிகாட்டுதல் வழங்கப்பட்ட ஒரே காரணத்திற்காய் தான் அம்மாதத்தில் நோன்பு நோற்குமாறு வான் மறை எம்மைப் பணிக்கின்றது.
இவ்வளவு கீர்த்தி மிகுந்த திருக்குர்ஆனின் பணி குறித்து அதன் அதிபதி அல்லாஹ்வே மேற்குறித்த 2:185 வசனத்தில் விதந்துரைக்கின்றான். இவ்வேத வரி வான்மறையின் அடிப்படையான 3 பணிகளை முத்தாய்ப்பாய் எம் விழி முன்னால் முன்வைக்கின்றது:
1)            மனிதர்களுக்கு நேர்வழி காட்டும்.
2)            நோ்வழியை தெளிவாகக் கூறும்.
3)            (அசத்தியத்தை விட்டு சத்தியத்தை) வேறு பிரித்துக் காட்டும்.
எத்தனையோ ரமழான்கள் எம்மைக்கடந்து சென்றிருக்கின்றன. ஆனால், திருக்குர்ஆன் எதற்காய் அருளப்பட்டதோ அக்கடமையை எம் முஸ்லிம் சமூகம் செவ்வனே செய்திருக்கிறதா என்றால் விடை கேள்விக் குறியாய் எம் விழிமுன் நிழலாடுவதைக் காணலாம்.
இன்று இந்நாட்டில் வாழும் 92 சதவீதத்தினர் நேர்வழி என்று எண்ணி வழிகேட்டின் வாயிலில் வீழ்ந்து கொண்டிருப்பதை அன்றாடம் காண்கின்றோம். கற்கள், சிலைகள், இயற்கைப் பொருட்கள் என்ற மாயையின் பின்னால் பெரும்பான்மை சமூகம் தங்களுக்கான நேர்வழியை தேடிக்கொண்டிருக்கின்றனர். மறுபுறம், சத்தியப்போர்வையில் உலாவரும் பரலேவிஸக் கொள்கையால் காவுகொள்ளப்பட்ட எம் பெயர் தாங்கி முஸ்லிம்கள் கப்ர் வணக்கம், கொடியேற்றம் உள்ளிட்ட வழிகேடுகளை நேர்வழியாய் நினைத்து பற்றுருதியுடன் ஏற்றுப்பின்பற்றுவதனை பரவலாய் காண்கிறோம்.
இவ்விரு சாராருக்கும் இஸ்லாத்தின் நேர்வழியை தெளிவாகச் சொல்லக்கடமைப்பட்ட கற்றறிந்த கனவான்களோ நேர்வழியை தெளிவாக எடுத்துரைக்காது, சத்தியத்தைச் சொன்னால் ஒற்றுமை குழைந்து விடும் என்ற போலிகோஷத்தை ஏந்திப்பிடித்து நேர்வழியை தானும் பின்பற்றாது, பிறருக்கும் தெளிவாகச் சொல்லாது புசி மெழுகிப்போகும் வங்குரோத்து நிலையை கடைபிடித்து ஒழுகுவதனை படித்த மட்டத்தில் காணமுடிகிறது.
இவ்வத்தனை வழிகேடுகளையும் சுட்டிக்காட்டி தோலுறித்துக்காட்டக் கடமைப்பட்ட கொள்கைவாதிகளோ கோழைத்தனம் மிகுந்த கோமாளிகளாய் நிறம்மாறி நிற்கிறார்கள். கலிமாவின் பாட்டையில் பரலேவிஸம் வழிகேடு, ஷீயாயிஸம் வழிகேடு, தப்லீக் வழிகேடு, இக்வானிஸம் வழிகேடு, ஜமாஅதே இஸ்லாமி வழிகேடு என்று அசத்தியத்தை வேறுபிரித்துக்காட்ட வேண்டியவர்கள்  சமரசவாதிகளுடன் கைகோர்த்து, ஒன்றாய் மேடையேறி, கொஞ்சிக் குழாவுவதை காணமுடிகிறது.
மொத்தத்தில், அல்குர்ஆன் எம்மிடம் எதிர்பார்க்கும் இம்மூன்று பணிகளும் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே பல ரமழான்கள் எம்மைக்கடந்து சென்றவன்னம் உள்ளன. எம்மை எதிர்கொள்ளப் போகும் ரமழானில் எம் பணியின் சுமை குறித்து எம் சமூகம் சிந்திக்குமா?    

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்