Pages

Friday, May 20, 2011

பைஅத், முரீது (தீட்சை)

பைஅத், முரீது (தீட்சை)



மனிதனது அறிவை மழுங்கச் செய்யும் எந்தக் காரியத்திற்கும் இஸ்லாத்தில் அறவே அனுமதி இல்லை. பைஅத், முரீது என்பது தான் மனிதனின் அறிவை மழுங்கச் செய்வதில் முதடத்தில் உள்ளது எனலாம். இதை விரிவாகப் பார்ப்போம்.
'ஷெய்கு எனப்படுபவர் தன்னிடம் பைஅத் (தீட்சை) வாங்கியவர்களுடன் உள்ளத்தால் தொடர்பு வைத்திருக்கிறார்; முரீதின் (சீடரின்) உள்ளத்தில் ஊடுருவி போதனைகளைப் பதியச் செய்கிறார்'என்றெல்லாம் நம்பப்படுகிறது. இந்த நம்பிக்கை இஸ்லாமிய அடிப்படையில் சரியானது தானா? 'எந்த ஒரு மனிதனும் எந்த மனிதனின் உள்ளத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்த முடியாது' என்பது இஸ்லாத்தின் கோட்பாடு.
'உள்ளங்களைப் புரட்டக் கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் உறுதியாக ஆக்கி வைப்பாயாக!' என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் பிரார்த்தனையாக இருந்தது.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி)
நூல் : திர்மிதீ 3511
'மனிதனின் உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன. அவன் விரும்பியவாறு அந்த உள்ளங்களைப் புரட்டுகிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : முஸ்லிம் 4798
'உள்ளங்கள் இறைவனது கைவசத்திலேயே உள்ளன; அதில் எவருக்கும் எந்தப் பங்குமில்லை'என்பதற்கு இவை தெளிவான சான்றுகள்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் மனைவியர் விஷயத்தில் மிகவும் நேர்மையுடன் நடந்து கொண்டார்கள். அவர்களுக்கிடையே எந்தப் பாரபட்சமும் காட்டியது இல்லை. ஆனாலும் தம் மனைவியரில் ஆயிஷா (ரலி)யை மட்டும் மற்றவர்களை விட அதிகம் நேசித்தார்கள். இவ்வாறு ஒருவர் மீது நேசம் வைப்பது மனிதனின் முயற்சியால் நடப்பது அல்ல. முயற்சியையும் மீறி நடப்பதாகும்.
இதைப் பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது
'இறைவா! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிய (சிலர் மீது அதிக அன்பு வைக்கும்) காரியங்களில் என்னைக் குற்றவாளியாக்காதே!'என்று குறிப்பிடுபவர்களாக இருந்தனர்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல்கள் : திர்மிதீ 1059, அபூதாவூத் 1822, நஸயீ 3883 இப்னுமாஜா 1961, அஹ்மத் 23959
தமது உள்ளத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவது அல்லாஹ்வின் தூதருக்கே இயலவில்லை என்றால், அடுத்தவர் உள்ளங்களில் ஷெய்கு (குரு) எப்படி ஆட்சி செலுத்த முடியும்?
மிகவும் அக்கறையுடனும், ஆர்வத்துடனும், கலப்பற்ற தூய எண்ணத்துடனும் தம் பெரிய தந்தை அபூதாலிபுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் போதித்தும் அவர் இஸ்லாத்தை ஏற்கவில்லை. அவரது உள்ளத்தை ஊடுருவி போதனையைப் பதியச் செய்ய இயலவில்லை.
இது பற்றி இறைவன் கூறும் போது
(முஹம்மதே!) நீர் விரும்பியோரை உம்மால் நேர் வழியில் செலுத்த முடியாது! மாறாக, தான் நாடியோருக்கு அல்லாஹ் நேர் வழி காட்டுகிறான். அவன் நேர் வழி பெற்றோரை நன்கறிந்தவன். அல்குர்ஆன் 28:56
என்ற வசனத்தை அருளினான்.
எத்தனையோ நபிமார்கள் தங்கள் மனைவியருக்கும், மக்களுக்கும், பெற்றோருக்கும் செய்த போதனைகள் பயனளிக்கவில்லை.
மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி 'அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!' என்று நூஹ் கூறினார். 'ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிருந்து காப்பாற்றும்' என்று அவன் கூறினான். 'அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை' என்று அவர் கூறினார். அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான்.'பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. 'அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர்' எனவும் கூறப்பட்டது. நூஹ், தம் இறைவனை அழைத்தார். 'என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன்;உனது வாக்குறுதியும் உண்மையே; நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்' என்றார். 'நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன்; இது நல்ல செயல் அல்ல; உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்; அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்' என்று அவன் கூறினான். 'இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன்; நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன்' என்று அவர் கூறினார்.
அல்குர்ஆன் 11: 42-48
நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. 'நரகில் நுழைவோருடன் சேர்ந்து இருவரும் நுழையுங்கள்!' என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)
இவையெல்லாம் நமக்கு என்ன பாடம் கற்பிக்கின்றன?
'ஒருவர் எவ்வளவு இறையச்சம் உடையவர் ஆனாலும், தூய்மையான எண்ணம் கொண்டவரானாலும், பழுத்த பழமாக இருந்தாலும் அவர் தனது போதனைகளை எந்த உள்ளங்களிலும் சேர்ப்பிக்க முடியாது' என்பது தான் இதிலிருந்து நாம் பெற வேண்டிய பாடம்.
இதற்கு மாற்றமாக பைஅத், முரீது என்பது அமைந்துள்ளது.
எடுத்துக் காட்டாக, முரீது வியாபாரத்தில் நேர்மையான வியாபாரிகள் என்று நம்பப்படும் சிஷ்திய்யா தரீக்காவை எடுத்துக் கொள்வோம். இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் மவ்லவிகள் பலரும் இந்த தரீக்காவில் முரீது வாங்கியுள்ளனர்.
ஹுஸைன் அஹ்மத் மதனீ, ரஷீத் அஹ்மத் கங்கோஹி போன்ற பெரியார்களெல்லாம் இதன் கலீஃபாக்களாக இருந்ததாகச் சொல்கிறார்கள்.
தப்லீக் தஃலீம் புத்தகம் எழுதிய முஹம்மது ஜக்கரிய்யா அவர்கள் இந்த தரீக்காவின் வரலாறு பற்றி உருதுவில் எழுதிய நூலை ஆரணியைச் சேர்ந்த கமாலுத்தீன் அவர்கள் (இவர் தமிழகத்தில் இந்த தரீக்காவின் கலீஃபா அதாவது ஏஜெண்ட்) 'சிஷ்திய்யா ஷைகு வரலாறு' என்ற பெயரில் தமிழாக்கம் செய்துள்ளார்.
இவருக்கு நிறைய மவ்லவிகள் இன்றளவும் முரீதுகளாக உள்ளனர். அந்த நூலில் இடம் பெறும் சில சம்பவங்களையே இங்கே நாம் எடுத்துக் காட்டாக கூறப் போகிறோம்.
மஷாயிகுமார்கள் (பெரியார்கள்) தங்களிடமுள்ள குணாதிசயங்களைப் பிறரில் பரவச் செய்கிறார்கள். அதற்கு நடைமுறையில் தவஜ்ஜுஹே இத்திஹாதீ' என்று சொல்லப்படுகின்றது.
(மேற்படி நூல் பக்கம் 10)
இந்த தவஜ்ஜுஹே இத்திஹாதீ' சம்பந்தமாக ஹஜ்ரத் காஜா பாக்கிபில்லாஹ் கத்தஸல்லாஹு சிர்ரஹுல் அஸீஸ்' அவர்களின் சம்பவம் பிரபல்யமானதாகும். அதை ஷைகு அப்துல் அஸீஸ் (ரஹ்) அவர்கள் எழுதியுள்ளார்கள். ஒரு முறை ஹஜ்ரத் அவர்களுடைய வீட்டிற்கு விருந்தனர் பலர் வந்து விட்டனர். விருந்தினரை உபசரிக்க வீட்டில் எதுவுமில்லை. கவலையுடன் ஹஜ்ரத் அவர்கள் வெளியே வந்தார்கள். அருகே ரொட்டிக் கடைக்காரர் ஒருவர் வந்தார். அவர் ஹஜ்ரத் வீட்டிற்கு விருந்தினர் வந்ததைப் பார்த்து விட்டு நல்ல உணவுப் பொருட்களைத் தட்டில் வைத்து எடுத்துக் கொண்டு ஹஜ்ரத்திடம் வந்தார். ஹஜ்ரத் அவர்கள் அம்மனிதரை நோக்கி மகிழ்ச்சி மேலீட்டால், 'உனக்கு என்ன வேண்டுமோ கேள்!' என்றார்கள். அதற்கு அம்மனிதர் 'உங்களைப் போன்றே என்னையும் ஆக்கி விடுங்கள்!' என்றார். ஹஜ்ரத் அவர்கள், நீ சமாளிக்க மாட்டாய்'என்றார்கள். எனினும் அம்மனிதர் பல முறை கெஞ்சி வேண்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டார். பல தடவை மறுத்தும் அவர் கேட்காததால் வேறு வழியின்றி ஹஜ்ரத் அவர்கள் அவரை வேறு அறைக்கு அழைத்துச் சென்றார்கள். அங்கே தவஜ்ஜுஹே இத்திஹாதீ' செய்தார்கள். அறையிலிருந்து வெளியே வந்த போது இருவரின் முகமும் ஒரே மாதிரித் தோற்றமளித்தது. ஹஜ்ரத் காஜா சாஹிப் உணர்வோடு இருந்தார்கள். அம்மனிதரோ உணர்வின்றி இருந்தார். இது தான் வித்தியாசம். அதே உணர்வற்ற நிலையில் மூன்று நாட்கள் இருந்து பின்னர் இறந்து விட்டார்.
(அதே நூல் பக்கம்: 11, 12)
இப்படியெல்லாம் மூளைச் சலவை செய்யும் மடமைக் கதைகளுக்கும் 'சுப்ஹானல்லாஹ்'சொல்லக் கூடியவர்கள் இருக்கிறார்கள்.
மனிதனை முட்டாளாக்கி, அல்லாஹ்வின் தூதரை விடவும் தன்னை உயர்த்திக் கொள்ள முற்படும் இந்தப் பித்தலாட்டக்காரர்கள் ஷெய்குகளாம்! பக்குவப்பட்டவர்களாம்!
மேலே நாம் காட்டிய சான்றுகளுடன் இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! இவர்கள் இஸ்லாத்திற்கு எவ்வளவு பகிரங்கமான எதிரிகளாக உள்ளனர் என்பதை அறிவீர்கள்.
கற்பனை உலகில் தங்கள் முரீதுகளை மிதக்க விடுவதற்காக இவர்கள் கட்டியுள்ள கதைகள் எண்ணிலடங்கா.
'அப்துல் வாஹித் சார்பாக நதியே நீ காய்ந்து விடு' என்று நதியிடம் அப்துல் வாஹித் தன் முரீதுகளை சொல்லச் சொன்னார்களாம். அப்படியே நடந்ததாம்.
(அதே நூல் பக்கம் : 143)
ஹஜ்ரத் அவர்களிடம் பக்கீர்கள் கூட்டம் ஒன்று வந்ததாம். ஹஜ்ரத் துஆ செய்தததும் காசு மழை பொழிந்ததாம். அதற்கு அல்வா வாங்கிச் சாப்பிட்டார்களாம்.
(அதே நூல் பக்கம் 143)
நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கொருமுறை நோன்பு திறப்பது இவர்களின் வழக்கமாக இருந்தது. அதுவும் புல் பூண்டுகளைக் கொண்டு நோன்பு திறப்பார்கள்.
(அதே நூல் பக்கம் 156)
இப்படியெல்லாம் இஸ்லாத்தைத் தகர்த்து தரை மட்டமாக்கும் சம்பவங்கள் ஏராளம்! தன்னைப் போன்ற ஒரு மனிதரை இந்த அளவுக்கு உயர்த்திட இவர்கள் எங்கே கற்றார்கள்?அல்லாஹ்விடமிருந்தா? அல்லாஹ்வின் தூதரிடமிருந்தா? நிச்சயமாக இல்லை.
பண்டாரங்கள், பரதேசிகள் ஆகியோரிடமிருந்து இதைக் கற்று இஸ்லாத்தில் திணித்து விட்டனர். பிறர், இஸ்லாத்திற்கு வருவதற்கு தடைக் கற்களை ஏற்படுத்தி விட்டனர். இவர்கள் கப்ரு வணக்கத்தை ஏற்படுத்தியவர்களை விட மோசமானவர்கள். அல்லது அதற்குச் சற்றும் குறையாதவர்கள்.
மிகவும் உயர்வானது என மதிக்கப்படும் தரீக்காவின் நிலை இது. இதே தரீக்காவில் இன்னும் நவீன கோட்பாடுகள் பல உள்ளன.
காலில் விழச் சொல்லும் ஷெய்குகள்
இசையில் மயங்கும் ஷெய்குகள்
தொழுகை போன்ற வணக்கங்கள் தேவையில்லை எனக் கூறும் ஷெய்குகள்
என்றெல்லாம் பல பித்தலாட்டக்காரர்கள் உள்ளனர்.
ஒழுங்கான இஸ்லாமிய ஆட்சி நடந்தால் இவர்களெல்லாம் மரண தண்டனைக்கு உரியவர்கள்.
திருக்குர்ஆன் விரிவுரையாளர்களில் அனைத்து தரப்பினாலும் ஏற்கப்பட்ட ஹிஜ்ரி 971ல் மரணமடைந்த இமாம் குர்துபீ (முஹம்மத் பின் அஹ்மத் அல் அன்ஸாரி) அவர்கள் தமது 'அல் ஜாமிவுல் அஹ்காமில் குர்ஆன்' எனும் திருமறை விரிவுரை நூலில் குறிப்பிடுவதை இங்கே எடுத்துக் காட்டுவது பொருத்தமாக இருக்கும்.
சூஃபியாக்களின் கொள்கை முட்டாள் தனமானதும், வழிகேடும் ஆகும். இஸ்லாம் என்பது அல்லாஹ்வின் வேதத்தையும், அவன் தூதருடைய நடைமுறையையும் தவிர வேறில்லை. நடனமாடுவது, இறைக் காதல் என்பதெல்லாம் ஸாமிரி என்பவன் உருவாக்கியதாகும். இஸ்லாமிய ஆட்சியாளர்கள், இவர்கள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுத்து நிறுத்துவது அவசியமாகும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புகின்ற எவரும் இவர்களின் அவைக்கு வருகை தரக் கூடாது. இவர்களின் தவறுக்கு துணை நிற்கலாகாது. இது தான் இமாம் மாலிக், இமாம் அபூஹனீபா, இமாம் ஷாபீ, இமாம் அஹ்மத் பின் ஹம்பல் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் முடிவாகும் என அபூபக்கர் தர்தூஷி அவர்கள் சூபியாக்கள் பற்றிய கேள்விக்கு விடையளித்தார்கள்.
(பார்க்க தாஹா அத்தியாயம் 92 வது வசனத்தின் விரிவுரை)
இந்த வழிகெட்ட சூபியாக்கள் நான்கு மத்ஹபுகளுக்கும் கூட அப்பாற்பட்டவர்கள் என்பதற்கு குர்துபி அவர்களின் இந்தக் குறிப்பு சான்றாக அமைந்துள்ளது.
காலில் விழலாமா?
ஆன்மீகத் தலைவர்களின் கால்களில் விழுந்து கும்பிடுவது, அவர்களின் கால்களைக் கழுவி,கழுவப்பட்ட தண்ணீரை பக்தியுடன் அருந்துவது என்றெல்லாம் ஆன்மீகத் தலைவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டு வருகிறது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது வாழ் நாளில் ஒருக்காலும் தமது கால்களில் விழுந்து மக்கள் கும்பிடுவதை விரும்பவில்லை. அறியாத சிலர் அவ்வாறு செய்ய முயன்ற போது கடுமையாக அதைத் தடுக்காமலும் இருந்ததில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) காலத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியைப் பாருங்கள்!
நான் ஹியரா என்னும் நகருக்குச் சென்றேன். அங்குள்ளவர்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிந்து கும்பிடுவதைப் பார்த்தேன். 'இவ்வாறு சிரம் பணிவதற்கு நபிகள் நாயகமே அதிகத் தகுதியுடையவர்கள்' என்று (எனக்குள்) கூறிக் கொண்டேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து 'நான் ஹியரா என்னும் ஊருக்குச் சென்றேன். மக்கள் தமது தலைவருக்குச் சிரம் பணிவதைக் கண்டேன். நாங்கள் சிரம் பணிந்திட நீங்களே அதிகம் தகுதியுடையவர்' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் '(எனது மரணத்திற்குப் பின்) எனது அடக்கத் தலத்தைக் கடந்து செல்ல நேர்ந்தால் அதற்கும் சிரம் பணிவீரோ?' எனக் கேட்டார்கள். 'மாட்டேன்'என்று நான் கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 'ஆம்; அவ்வாறு செய்யக் கூடாது. ஒரு மனிதன் இன்னொரு மனிதனுக்குச் சிரம் பணியலாம் என்றிருந்தால் கணவனுக்காக மனைவியை அவ்வாறு செய்யச் சொல்யிருப்பேன்' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: கைஸ் பின் ஸஅத் (ரலி)
நூல்: அபூதாவூத் 1828
தமது காலில் விழுவதற்கு அனுமதி கேட்கப்பட்ட போது 'எந்த மனிதரும் எந்த மனிதரின் காலும் விழக் கூடாது' என்று பொதுவான விதியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காரணம் காட்டுகிறார்கள்.
காலில் விழுபவரும், விழப்படுபவரும் இருவருமே மனிதர்கள் தான் என்று கூறி சிரம் பணிதல் கடவுளுக்கு மட்டுமே உரியது எனக் கூறுகிறார்கள்.
உலகம் முழுவதும் கணவர் காலில் மனைவியர் விழுவது அன்றைக்கு வழக்கமாக இருந்தது. அதையே நான் அனுமதிக்காத போது என் காலில் எப்படி விழலாம் என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.
'உங்கள் கால்களில் நாங்கள் விழுகிறோமே' என்று மக்கள் கேட்கும் போது தமது மரணத்திற்குப் பிறகு தனது அடக்கத்தலத்தில் விழுந்து பணிவார்களோ என்று அஞ்சி அதையும் தடுக்கிறார்கள்.'எனது மரணத்திற்குப் பின் எனது அடக்கத்தலத்தில் கும்பிடாதீர்கள்' என்று வாழும் போதே எச்சரித்துச் சென்றனர். எனவே தமது கால் விழுமாறு மக்களுக்கு வழி காட்டுவோர் கயவர்களாவர்.

thanks to www.onlinepj.com

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்