“உண்மையைப் பொய்யின் மேல் வீசுகிறோம், அது பொய்யை நொறுக்குகிறது. உடனே பொய் அழிந்து விடுகிறது.” (அல் குர்ஆன் 21:18)
சத்திய இஸ்லாத்தின் சத்தான கருத்துக்களை சமரசமோ, சறுக்களோ இன்றி, ‘உங்களுக்கு ஏவப்பட்டதை தயவு தாட்சண்யமின்றி போட்டுடையுங்கள்’ (15:94) எனும் திருமறைப் பாணியில்; எடுத்தியம்பும் போது, அசத்திய வாதிகளின் எதிர்ப்பலைகள் எறிமலையாய்க் குமுரி, சத்திய வாதிகளை நோக்கி வீறுகொண்டு எழுவதை நிதர்சனமாய்க் காண்கின்றோம். எழுச்சி பெறும் ஏகத்துவ நாதத்தை அழித்தொழிப்பதற்காய், துளிர் விடும் சத்திய விருட்ஷத்தை தம் சுண்டு விரல்களால் கிள்ளியெறிவதற்காய், அசத்தியக் கும்பல் தமக்கிடையிலான பேதம் மறந்து, எமக்கெதிராய் ஒன்று பட்டு ஓரணியில் கைக்குழுக்கிக் கொள்வதும் இன்று கண்கொள்ளாக் காட்சிகளாக மாறி விட்டன.
அச்சுறுத்தல் விடுத்தல், அடாவடித் தனம் புரிதல், காடையர்களையும் கழிசடைகளையும் வைத்து தம் கருத்துக்கு எதிரானவர்களோடு காட்டு தர்பார் நடாத்துதல், குண்டாந் தடிகளோடு தம் குண்டர் படையை களமிறக்கி, அறிவாள் வீச்சுக்களுடன் அராஜகம் புரிந்து, அசிங்கமான ஆபாச வார்த்தைகளை அள்ளி வீசும் அழைப்பாளர்களும் (?), அவர்களின் இயக்க அடிவருடிகளும் இன்று அழைப்புப் பணியில் அதிகரித்திருக்கிறார்கள்.
இத்துனை ஈனச் செயல்களையும் யார் புரிகிறார்கள்? ‘தீன் என்றால் அல்லாஹ்வின் கட்டளை: கண்மணி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழி முறை’ என்று பள்ளிகள் தோரும் பறைசாற்றித் திரியும் தப்லீக் ஜமாஅத் புரிகிறது. ‘மார்க்கத்தில் முக்தி பெறுவதற்கு முதலில் முறீதாக வேண்டும்’ என்று ஓங்கி முழங்கும் தரீக்காக்கள் புரிகின்றன. இவ்வாறு, ஏகத்துவ வாதிகளை எடுப்பாக எதிர்க்கும் எதிரணிப் படையில் இன்று புதிதாக இணைந்துள்ள ஓர் நவீன இஸ்லாமிய ஜமாஅத் (?) ‘ஜமாஅதே இஸ்லாமி’ ஆகும்.
இணைவைப்பிற்கு எதிரான போராட்டமே இஸ்லாமியத் தூதின் முதல் செய்தி எனும் அல் குர்ஆனிய போதனையை மறுதலித்து, ஆட்சியைப் பிடித்து கிலாபத் அமைப்பதே முதன்மையான பணி என்னும் ஷீயாயிஸச் சிந்தனைகளை தூக்கிப் பிடிக்கும் ஜமாஅத் தான் இந்த ஜமாஅதே இஸ்லாமி. ஆட்சியமைப்பதற்கு தம் பக்கம் ஆள்சேர்ப்பதற்காய் சமுதாயத்தில் புறையோடிப் போயுள்ள ஷிர்க், பித்அத், வரதட்சணை உள்ளிட்ட இமாலயப் பாவங்களைக் கூட சில்லறைகளாக மாற்றி ஸ_ன்னாக்களுக்கு சமாதிகட்டும் ஜமாஅதே ‘இந்த இஸ்லாமிய ஜமாஅத்’. ஐக்கியம்,சகோதரத்துவம், நல்லிணக்கம் போன்ற கண்கவர் வார்த்தைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தம் ஜமாஅத்தின் கொள்கைத் தவறுகளை சுட்டிக் காட்டும் ஏகத்துவ வாதிகளை எதிர்க்கும் குள்ள நரிக் கூட்டமே இவர்கள்.
இவர்களின் ‘வேற்றுமையில் ஒற்றுமை காண்போம்!’ எனும் கோஷம் தவ்ஹீதைத் தவிர்ந்த ஏனைய இயக்கங்களுடன் மட்டும் தான் என்பதற்கு கடந்த 07-02-2011 ஆம் திகதி, ஜமாஅதே இஸ்லாமியின் கிலாபத் ஆட்சி நடாத்தப்படும் ‘குட்டி மதீனா’ என்று சிலாகிக்கப் படும் ‘மாதம்பை’ எனும் ஊரில் அரங்கேற்றப்பட்ட அடாவடித் தனம் தக்க சான்றாகும்.
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் மாதம்பைக் கிளையினரால் பிரதி திங்கற் கிழமை தோரும் நடாத்தப்பட்டு வரும் இஸ்லாமிய விளக்க வகுப்பு வழமை போன்று மேற்குறித்த தினத்தில் எமது ஜமாஅத் சகோதரர் ஒருவரின் வீட்டில் மஃரிப் தொழுகையுடன் ஆரம்பித்தது. சத்தியத்தை உடைத்துச் சொல்லும் இவ்வகுப்பால் தம் இருப்புக்கும் இயக்கத்திற்கும் ஆபத்து வந்துவிடும் என்ற அச்சம் தொற்றிக் கொள்ளவே, இதனை தடுப்பதற்கான முஸ்தீபுகள் முனைப்புடன் முன்னெடுக்கப்பட்டன. கருத்தை கருத்தால் எதிர் கொள்வதற்குத் திராணியற்ற ஜமாஅதே இஸ்லாமி, காடைத் தனத்தை கட்டவிழ்த்து விட்டு, நாங்களும் மஹகொடை தரீக்காவாதிகளும் ஒன்று தான் என்பதனை இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கு அழுத்தமாய் அடையாளப்படுத்தியிருக்கிறார்கள்.
உத்தரவின்றி அடுத்தவர் வீட்டுக்குள் உத்துப் பார்ப்பதையே தடுத்துள்ள இஸ்லாத்தில் இருந்து கொண்டு, ஆபாசம் பேசி, கற்களை வீசி, சுவரேறிக் குதித்து, ஹராமாக்கப்பட்ட அடுத்தவன் வீட்டுச் சொத்துக்கு ஊறு விளைவித்து, சத்தியத்தை மக்கள் கேட்பதைவிட்டும் தடுக்கும் மா பாதகச் செயலை ஜமாஅதே இஸ்லாமியின் மாதம்பைக் கிளை இனிதே நிறைவேற்றியுள்ளது. இவர்களின் ஆட்சி நடக்கும் குட்டி மதீனாவுக்குள்ளேயே மாற்றுக் கருத்தை ஜீரணிக்க முடியாது இத்துணை அராஜகம் என்றால், கொத்தாக இந்த நாட்டின் ஆட்சி இவர்கள் கைக்கு வந்தால் கருத்துச் சுதந்திரம்,ஊடகச் சுதந்திரம், பேச்சுரிமை, எழுத்துரிமை, சுதந்திரமாய் நடமாடும் உரிமை, வாழ்வுரிமை போன்ற அடிமட்ட உரிமைகள் கூட மாற்றுக் கருத்துடையோருக்கு வழங்காது, ஓர் ஹிட்லரிஸ சர்வாதிகாரமே தழைக்கும் என்பதற்கு இச்சம்பவம் ஒன்றே கட்டியங் கூறி நிற்கின்றது.
சுமார் 25 வருடங்களுக்கு முன்பு இதே மாதம்பையில் தப்லீக் ஜமாஅத்தினரால் தங்களுக்கு மார்க்கம் பேசத் தடைவிதிக்கப்பட்ட போது குமுரிய ஜமாஅதே இஸ்லாமி, அண்மையில் நுவரெலியாவில் தாங்கள் தாக்கப்பட்ட போது அதைக் கண்டித்து கட்டுரை வெளியிட்ட ஜமாஅதே இஸ்லாமி, இன்று தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு சத்தியத்தைச் சொல்ல தடைவிதித்திருப்பதானது, ‘நாங்களும் பழைய குருடிகள்’ தான் என்பதனை வெள்ளிடை மலையாய் வெளிப்படுத்திக் காட்டுகிறது.
எதிர் கருத்துக்களை ஆய்வறிவுடன் எதிர்கொள்ளாது சண்டித்தனத்தால் எதிர் கொண்டு,சத்தியத்தை மக்கள் கேட்க விடாமல் தடை விதிப்பவர்கள் அல்லாஹ்வின் பின்வரும் எச்சரிக்கையை அஞ்சிக் கொள்ளட்டும்: “கவனத்தில் கொள்க! அநீதி இழைத்தோர் மீது அல்லாஹ்வின் சாபம் இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுக்கின்றனர். அதைக் கோணலாகச் சித்தரிக்கின்றனர். அவர்களே மறுமையை மறுப்பவர்கள். அவர்கள் பூமியில் வெற்றி பெறுவோராக இல்லை. அல்லாஹ்வையன்றி அவர்களுக்குப் பாதுகாவலர்களும் இல்லை.
அவர்களின் வேதனை பன்மடங்காக்கப்படும். அவர்கள் தாம், தமக்குத் தாமே நஷ்டமிழைத்துக் கொண்டனர். அவர்கள் கற்பனை செய்தவை அவர்களை விட்டும் மறைந்து விட்டன. மறுமையில் அவர்களே பெரு நஷ்டமடைந்தோர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.” (11:18-22)சத்தியக் கொள்கையின் பேரொளிப் பிழம்பை தங்கள் வெற்று வாய்களினால் ஊதி அணைத்து விடலாம் என்றக் கனவுலகக் கற்பனையில் சஞ்சரிக்கும் அசத்திய வாதிகளின் ஐக்கிய அணியினரே! சண்டித்தனத்தால் எம்மை மண்டியிட வைத்து, சத்தியப்பணிக்கு சமாதிகட்டுவதற்கு ஓரணியல்ல,உங்களைப் போன்ற ஓராயிரம் அணிகள் ஒன்று திரண்டாலும், எங்கள் ஈமானியப் பிடிமானம் இன்னும் இன்னும் ஈயமாய் வார்க்கப்படுமே தவிர இம்மியளவும் இலகமாட்டாது என்பதனை உங்களுக்கு ஆணித்தரமாய் கூறி வைக்கின்றோம். நாங்கள் அடாவடித்தனங்களுக்கு அடிபணிந்து அமைதிகாக்கும் அமைப்பினரல்ல! அல்லாஹ் ஒருவனின் அச்சத்தை மட்டும் அகத்தில் ஏந்தி,அநீதிகளை துச்சமெனக் கருதி, அழைப்புப் பணியை உயிராய் சுமக்கும் பேரணியினர்.
‘உண்மை வந்து விட்டது. பொய் அழிந்து விட்டது. பொய் அழியக் கூடியதாகவே உள்ளது’. (17:81)
No comments:
Post a Comment
சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்