Pages

Sunday, April 8, 2012

ஆதிக்க வெறியாட்டத்திற்கான துரும்புச் சீட்டே ஜெனீவாப் பிரேரணை!



ட்டுமொத்த உலகும் உன்னிப்பாய் அவதானித்து வந்த, ஜெனீவா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 19 ஆவது கூட்டத் தொடரில், இலங்கை குறித்து அமெரிக்கா கொண்டு வந்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு, மேற்குலக மேலாதிக்கத்தை வழுப்படுத்தும் விதமாய் வெற்றியடைந்துள்ளது. சுதந்திர தேசங்களின் இறைமைக்குள் தன் ஆதிக்க வீச்சை செலுத்தி, மூக்கை நுழைத்து, நாட்டு வளங்களை மோப்பம் பிடித்து சுரையாடும் மனித உரிமை மீறல் முன்னெடுப்புக்கு ஆதரவாய் 24 நாடுகளும், ஏகாதிபத்திய உணர்வுக்கு எதிராய் 15 நாடுகளும் வாக்களித்துள்ளன. அதே சமயம், 8 நாடுகள் அமெரிக்க ஆதிக்கத்துக்கு ஆட்பட்டு அமைதிகாத்து வாக்களிப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்டு நாங்கள் இன்னமும் காலனித்துவத்தின் அடிமைகளே!என்பதனை நாசுக்காய் ஒத்துக் கொண்டும் உள்ளன.

இலங்கையில் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை ஊக்குவிக்கும் பிரேரணைஎன்ற சுலோகத்துடன், கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை உடனடியாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்தல் வேண்டும் என்றும், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழர்களுக்கு எதிராய் போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்றும், இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரிக்கின்றன என்றும், இலங்கையில் நிலவும் இனப்பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண்பதன் மூலம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படல் வேண்டும் என்றும் அமெரிக்காவுக்கு இலங்கை தேசம் மீதும், தமிழ் மக்கள் மீதும் அலாதியான அக்கறை திடீர்  என்று பிரவாகிக்க என்ன காரணம்?

உலக போலிஸ்காரன் நான் தான் என்ற மமதையில், ர்வதேச நாடுகளின் ஆதிக்க அச்சாணியை தன் கழுகுப்பிடிக்குள் தக்கவைப்பதன் மூலம், ஏனைய தேசங்களின் செல்வம் கொழிக்கும் வளங்களை கபளீகரம் செய்து, தன் ஆதிக்கத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதே அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளின் நாரிப்போன நரித்தன எண்ணம். உலக ஒழுங்கை மாற்றியமைக்கும் அமெரிக்காவின் உலக வல்லரசுஎன்ற ஆதிக்க உணர்வை உலையில் போடும் விதமாய், உலக அரங்கில் சீனா மற்றும் இந்தியாவின் ஆதிக்கம் எழுச்சியடைந்து வருகின்றமை அமெரிக்காவின் கனவுக்கோட்டைகளை கல்லடிப்பட்ட கண்ணாடிக்கட்டிடமாய் துகள் துகளாக தூர்ந்து போகச் செய்துள்ளது.

அதுமட்டுமன்றி, ஆசிய பிராந்தியத்தில் அணு சக்தி ஆயுத வளம்மிக்க நாடுகளாக சீனா, இந்தியாவுடன் இணைந்து பாகிஸ்தானும் வளர்ந்து வருவதானது முஸ்லிம்களின் கை ஓங்குவதற்கும் வாய்ப்பாக மாறிவிடும் என்றும் அமெரிக்கா அச்சம் கொண்டுள்ளது. பொருளாதார, இராணுவ, தொழில்நுட்ப ரீதியாக எழுச்சி பெறும் சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானை பெட்டிப்பாம்பாய் அடங்கச் செய்வதானால், ஆசிய கடற் பிராந்தியத்தில் மையல் கொண்டு தன் ஆதிக்க வேர்களை ஆழமாய் படரவிட வேண்டிய நிர்ப்பந்த நிலை அமெரிக்காவுக்கு உண்டு.

மெரிக்காவின் ஆதிக்க வெறிபிடித்த கழுகுப் பார்வை இலங்கை மேல் திரும்புவதற்கான காரணமும் இது தான். எந்த நாடுகளை ஒழிக்க வேண்டும் என்று அமெரிக்கா நினைக்கிறதோ அந்நாடுகளின் மையப் புள்ளியாக ஆசிய கடற் பரப்பில் இலங்கையே உள்ளது. இலங்கையின் மன்னார் கடற் பரப்பில் இனம் காணப்பட்டுள்ள பெற்றோலிய வளம் இந்தியாவின் கைகளிலும், திருகோணமலை இயற்கை துறைமுகம், அம்பாந்தோட்டை துறைமுகம் அத்தோடு வீதி மற்றும் உள்ளாச ஹோட்டல்கள் நிர்மாணப்பணிகள் சீனா வசமும், இல்மனைட்டு எனும் கனிய வளம் யப்பானிடமும் பறிபோய் உள்ளது. இலங்கையில் அமெரிக்காவின் கரங்களில் மிச்சம் இருப்பது பொஸ்பேட்எனும் கனிய வளம் மட்டுமே!

எழுச்சி பெற்று வரும் சீன, இந்திய, பாகிஸ்தானிய பலத்தை ஒழித்து, மெரிக்க வல்லாதிக்கத்தை சர்வதேச அரங்கில் மீண்டும் நிலைபெறச் செய்வதற்கும், ஆசிய கடற்பரப்பை தன்னாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கும், இலங்கை மண்ணுக்குள் புதைந்து கிடக்கும் பணம் கொழிக்கும் வளங்களை சுரையாடுவதற்கும் ஒரே வழி இலங்கைக்குள் அமெரிக்காவின் ஆதிக்கத்தை ஏற்படுத்துவதே. இதற்காக அமெரிக்கா கையில் எடுத்த ஆயுதமே போர்கால குற்றச்சாட்டு, மனித உரிமை மீறல், தமிழ் மக்களின் நலன்என்ற கண்கவர் கோஷம்!

இலங்கையில் இனப்பிரச்சினை தீர்க்கப்படல் வேண்டும் என்பதிலோ தமிழ் மக்களுக்கு நியாயமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும் என்பதனையோ நாம் மறுதலிக்க வில்லை. அதே சமயம், மூன்று தசாப்தமாய் இந்நாட்டை சுடுகாடாய் மாற்றி, தொப்புல் கொடி உறவாய் கூடிப்பழகிய முஸ்லிம்களை புர்வீக புமியை விட்டும் துரத்தி, இறையாலயத்தில் வழிபட்ட பச்சிளம் பாலகர்களை கூட காட்டுமிராண்டித்தனமாய் சுட்டுத்தள்ளிய தமிழ் விடுதலைப்புலிகள் எனும் பயங்கரவாத அமைப்பை ஒழித்துக்கட்டிய இலங்கை அரசை மெச்சாமல் இருக்க முடியாது.

தன் சுயநலத்திற்காய் உலகையே சுடுகாடாய் மாற்றி வரும் உலகப் பயங்கரவாதி அமெரிக்காவுக்கு இலங்கை தேசம் குறித்து கருத்துச் சொல்ல இம்மியளவும் அருகதை கிடையாது. வியட்நாம், ஈராக், ஆப்கான், லிபியா, பாகிஸ்தான் வரிசையில் எம் இலங்கை தேசத்தையும் இணைத்துக் கொள்ள நாம் இடமளிக்கக் கூடாது. அமெரிக்காவின் ஆதிக்கத்தை அதிகப்படுத்தும் எத்தனங்கள் பிரேரணை வெற்றியோடு பல வடிவங்களில் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. அரசியல் காய் நகர்த்தல், ஆளும் அரசுக் கெதிராய் களகங்களை தோற்றுவித்தல், முடிவுற்ற யுத்தத்தை பற்றி எறிய வைக்க முஸ்தீபுகள் செய்தல்,இந்தோனேஷியாவிலிருந்து தன் கருத்துக்கு சார்பான கிழக்குத் தீமோரை பிரித்தது போன்று ஒன்றித்த இலங்கையை துண்டாடி தனக்கு தோதுவான கிறிஸ்தவ ஆளுகை பிரதேசமாய் வடக்கை மாற்றுதல் போன்ற நரித்தன தந்திரங்கள் இலங்கையை சுற்றி பின்னப்படும் காலம் வெகு தொலைவில் இல்லை! 






      


Tuesday, March 27, 2012

சிலாபத்தில் நடைபெற்ற SLTJ அங்கத்தவர்களுக்கான தர்பியா (விரிவான செய்திகளுடன்)



March 27, 2012
ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் மற்றும் மாதம்பைக் கிளைகள் இணைந்து நடாத்திய முழு நாள் தர்பியா நிகழ்ச்சி கடந்த 25.03.2012 அன்று காலை 9.30 மணிக்கு இஸ்லாமிய அழைப்பு மையம், ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத் சிலாபம் கிளையில் சகோதரர் எம்.எஸ்.எம் ஸப்வான் டி.ஐ.எஸ்.ஸீ அவர்களின் தலைமையில் ஆரம்பமாகியது.
தலைமை உரையில் இத்தர்பியாவின் நோக்கம் குறித்து விளக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். ரியாஸ் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “அழைப்பாளர்களின் அணிகலன்கள்”" எனும் தலைப்பில் சிறப்பானதொரு பயற்சி வழங்கப்பட்டது. இதில் அழைப்பாளன் என்றால் யார்? அழைப்புப் பணியின் அவசியம், அழைப்பாளர்களிலிடம் இருக்கவேண்டிய மற்றும் தவிர்க்கப்படவேண்டிய பண்புகள் போன்ற அம்சங்கள் தெளிவாக விளக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வருகை தந்திருந்த கிளை அங்கத்தவர்களை மூன்று குழுக்களாக பிரித்து “அழைப்புப் பணியில் ஏற்படும் சவால்களும் அதற்கான தீர்வுகளும்” எனும் தலைப்பில் ஜமா’அத்தின் தேசியத் தலைவர் ஆர்.எம்.ரியால் அவர்களின் தலைமையில் கலந்துரையாடல் நடாத்தப்பட்டு அதற்கான தீர்வுகளும் சொல்லப்பட்டன.
இதன் பின் ளுஹர் மற்றும் மதிய உணவிற்காக 12.30 மணியளவில் இடைநிருத்தப்பட்டு மீண்டும் 2.00மணிக்கு ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகக் கொள்கைகள் குறித்த அங்கத்தவர் கேள்வி பதில் நிகழ்ச்சி ஜமாஅத்தின் தேசிய பொதுச் செயலாளர் அப்துர் ராஸிக் பீ.காம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கிளை அங்கத்தவர்களால் தொடுக்கப்பட்ட கேள்விகளுக்கு அங்கத்தவர்களே முன்வந்து பதிலளித்தமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதனைத் தொடர்ந்து சகோதரர் எம்.டீ.எம். பர்ளீன் எம்.ஐ.எஸ்.ஸீ அவர்களினால் “எதிர்ப்புக்கு மத்தியில் ஏகத்துவ எழுச்சி” எனும் தலைப்பில் உறுக்கமானதோர் உரை நிகழ்த்தப்பட்டது. ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைத் தூதர்கள் எதிர்கொண்ட எதிர்ப்புகள் மற்றும் அவர்களை ஈமான் கொண்ட தோழர்கள் முகம் கொடுத்த இன்னல்களையும் வஹியின் ஒளியில் படம்பிடித்துக் காட்டும் வன்னம் இவ்வுரை அமைந்திருந்தது.
அடுத்ததாக எம்.டீ.எம். பர்ஸான் அவர்களினால் “நிர்வாகவியல் ஒர் இஸ்லாமியப் பார்வை” எனும்  தலைப்பில் தெளிவுரை நிகழ்த்தப்பட்து. அதில் நிர்வாகம் என்றால் என்ன? நபிகளார் கடைபிடித்த நிர்வாக ஒழுங்குகள் மற்றும் ஒரு நிர்வாகியிடம் இருக்க வேண்டிய பண்புகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இறுதியாக மாலை 6.00 மணியளவில் சிலாபம் கிளைத் தலைவர் எம்.ஆர்.எம். பவ்ஸாத் அவர்களால் முடிவுரை வழங்கப்பட்டு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. அல்ஹம்துலில்லாஹ்.
குறிப்பு: இந்நிகழ்ச்சியில் ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம், மாதம்பை, அகுரனை, வட்டதெனிய, மல்வானை, பானந்துரை, சம்மாந்துரை, கல்முனை உள்ளிட்ட கிளை நிர்வாகிகள் சுமார் 60 பேரளவில் கலந்துகொண்டனர்.

Sunday, March 18, 2012

சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகள் இணைந்து நடத்து முழு நாள் தர்பியா நிகழ்ச்சி






March 18, 2012

எதிர்வரும் 25.03.2012 அன்று ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தின் சிலாபம் மற்றும் மாதம்பை கிளைகளின் ஏற்பாட்டில் ஜமாஅத் அங்கத்தவர்களுக்கான முழு நாள் தர்பியா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. இல. 40, கெனல் வீதி, வட்டக்களி, சிலாபம். எனும் விலாசத்தில் அமைந்துள்ள SLTJ சிலாபம் தஃவா நிலையத்தில் அன்று காலை 9:30 மணியளவில் நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும்.(இன்ஷா அல்லாஹ்)



Friday, March 16, 2012

சாலை மறியல் போராட்டங்களும் மங்கிப் போகும் மனித நேயமும்!



சாலையில் அமராதீர்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அங்கு அமர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் கூடிப் பேசும் இடம் அது தான்என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் பாதையில் கூடுவதை தவிர்க்க முடியாவிட்டால் பாதைக்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். பாதையின் உரிமை எது?” என்று கேட்டர்கள். நபி (ஸல்) அவர்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதும்என்று பதிலளித்தார்கள்.         (புகாரி - 2465)

கடந்து வந்த சில நாட்களில் கண்டவர் கண்களில் காட்சியளித்தவை தேசத்தின் பெரு வீதியெங்கும் கரும்புகையை கக்கும் டயர்  எறிப்புக் காட்சிகள்! நட்ட நடு வீதியில் வட்டமாய் பற்றி எறியும் தீச்சுவாலை! நடுச்சாலையெங்கும் கனரக வாகனங்களுக்கு பதில் கால் கடுக்க வீற்றிருக்கும் இளங் காளையர் கூட்டம்! மூன்று தசாப்த கால யுத்த விளைவுகளை விழித்திரையில் நிழலாட வைத்த நிகழ்வுகள் இவை!

ஏன் இந்த எதிர்ப்புப் பேரணி? அலைகடலென ஆர்ப்பரித்து அரசுக்கெதிரான கோஷங்களுடன், பாதைகள் தோரும் பதாதைகள் ஏந்தி, விண்ணதிரும் வார்த்தைகளுடன் வீதியெங்கும் சாலை மறியல் போராட்டங்கள் எதற்கு? மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் மீது அரசு மேற்கொண்ட அதிரடி விலையேற்றத்தின் எதிர்  விளைவே அவ்வெதிர்ப்பு பேரணிகளின் விஷ்பரூப வெளிப்பாடுகள்.

ரிபொருள் விலையேற்ற அறிவிப்புடன் தனியார்  பஸ் கட்டணம், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம், அறுவடை இயந்திர கட்டணம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் சடுதியாய் கடுகதி வேகத்தில் இமாலயச் சிகரமாய் உயர்ந்து கொண்டே வருகின்றன. முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை தாண்டி வறுமைக் கோட்டின் விளிம்பு நிலையில் தன் வாழ்க்கை வண்டியை இழுத்துச் செல்லும் ஏழைகள் தான் இவ்விலையேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாடம் தன் உதிரத்தை வியர்வை சொட்டுக்களாய் உரமாக்கி, அரை ஜான் வயிற்றுக்காய் அல்லல் படும் ஓர் அபலையின் நிலையில் இருந்து நோக்கி, நம் அரசின் செவிகளுக்கு சில யதார்த்தங்களை உணர்த்த அவாவுறுகிறோம்.

அதிகார கதிரை என்பது தமது ஆதிக்கத்தை செலுத்தி மக்களை  அடக்கியாளும் துரும்புச் சீட்டு அல்ல! அதிகார வீச்சை பயன்படுத்தி நாட்டை சுரையாடி தன் கஜானாவை வளப்படுத்துவதற்காக கிடைத்த வாய்ப்பும் அல்ல! அதிகாரிகள் என்போர்  மக்களின் நலன்களை கண்ணெனக் காப்பதற்காய் மக்களால் தேர்வு செய்யப்பட்டோர்’. மக்கள் நலன் காப்பதும், சுமை போக்குவதும், துயர் துடைப்பதற்குண்டான ஆக்கப்பணிகளை முன்னெடுப்பதுமே ஆட்சியாளனின் கடமை. பசி, பட்டினி, ஏழ்மை என்பவற்றால் ஏலவே வெந்து நொந்து போய் இருக்கும் மக்களின் உள்ளத்தை பொருளாதாரச் சுமைகள் மூலம் மென்மேலும் வேதனையை இரட்டிப்பாக்கி உணர்வுகளை உஷ்னப்படுத்தி, கொதிநிலையின் விளிம்புக்கு கொண்டு வரும் எத்தனங்கள் தொடர்வதானது எதிர்மறை விளைவுகளையே சமூக தளத்தில் தோற்றுவிக்கும். டியுனிஸியா, எகிப்து, லிபியா, மாலைதீவு உள்ளிட்ட தேசங்களில் ஏற்பட்ட மக்கள் புரட்சிகளின் பின்புலம் பொருளாதார ரீதியில் நாடு சந்தித்த சரிவுகளே என்பதனை நம் நாட்டு அரசு மறந்துவிடலாகாது.

அதே சமயம், ர் ஆட்சிபீடம் அரங்கேற்றும் அடாவடித்தனங்கள் அல்லது பொது மக்கள் சுமையை அதிகரிக்கும் படியான செயற்பாடுகளின் போது மக்கள் தம் சிந்தையில் கொள்ள வேண்டிய சில அம்சங்களும் உண்டு. 30 ஆண்டு கால யுத்தத்தினால் எரியுண்டு சுடுகாடாய் சுவடிழந்து நிற்கும் ஒரு தேசத்தை, மீண்டும் புத்துயிர்ப்புடன் எழுச்சிப் பாதையில் எழுந்து நிற்க வைப்பதும், பொருளாதார முன்னேற்றத்தின் பால் வழிநடாத்துவதும் இலகுவான காரியமல்ல. உள்நாட்டு உட்புசல்கள், எதிர்க்கட்சிகளின் எள்ளிநகையாடல்கள், வெளிநாட்டுச் சக்திகளின் கருவறுப்பு முயற்சிகள் என்ற அனைத்து தடைகளையும் தாண்டி அபிவிருத்தியை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கு காலதாமதம் எடுப்பதும், அதன் போது சில இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதும் இயல்பானதே!

ஒரு நாட்டின் இத்திரிசங்கு நிலையை கருத்திற் கொண்டு, நாட்டின் எதிர்கால எழுச்சிக்காய் எம் நலன்களை சற்று இழப்பதும், சுமைகளை சுகமாய் தாங்கிக் கொள்வதும் ஒவ்வொரு பிரஜையினதும் தார்மீகக் கடமையுமாகும். தம் மதியிழந்து, மனக்கட்டுப்பாட்டை இழந்து, தம் உரிமையை பெறுவதற்காய் இன்னுமொரு மனிதனின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் மனிதநேயமற்ற செயற்பாடுகளில் ஒருபோதும் களமிறங்கிவிடக்கூடாது. பறிக்கப்படும் தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் வீதிக்கு இறங்குவதும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் அரசின் கவனக்குவிப்பை தம் நியாய புர்வமான கோரிக்கைகளின் பால் ஈர்க்கப்படுவதற்கான எத்தனங்கள் செய்வதும் அவசியமானவை. மறுதலிக்க முடியாதவை! ஆனால், ஒரு நலனை பெறுவதற்காக களமிறங்கி வீதிகளை வளைத்து சாலை மறியல் போராட்டங்களை மேற்கொள்ளும் எம் எதிர் நடவடிக்கைகளால் சாதாரண பொது மகனின் பல உரிமைகளை தட்டிப்பறிக்கும் ஈனச்செயலில் நாம் இறங்கிவிடக்கூடாது. நடைபாதையில் தடைவிதித்ததால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், செல்லும் வழி அறியாது கால் கடுக்க காத்து நின்ற வயோதிபர்கள், காலதாமதத்தால் காலாவதியாகிப் போன வேலைவாய்ப்புகள், தவறிப்போன கல்யாண மற்றும் கருமாதி நிகழ்வுகள், ரிய வேளையில் மருத்துவமற்று மாய்ந்து போகும் அப்பாவி ஜீவன்கள் என்று சாலை மறியல் போராட்டங்களால் தொடரும் மனிதநேயம் மழுங்கிப்போகும் தன்மைகள் ஏராளம்!

சீரான முறையில் ஓர் ஆட்சி நடைபெற்று அமைதி வழியில் ஒரு தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி இஸ்லாம் இயம்பும் இனிய போதனை மறுமையை மறக்காதீர்!’ எனும் மறுமை கோட்பாட்டை விசுவாசிப்பது மட்டுமே!.மறு உலக வாழ்வு குறித்த நம்பிக்கை ஒன்று மட்டும் தான் உலகில் யாருக்கும் பதில் சொல்லாவிட்டாலும் மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் ஒரு நாள் என் இவ்வுலக செயற்பாடுகளுக்காய் பதில் சொல்லியாக வேண்டும்என்ற உணர்வுப் பிரவாகத்தின் அடிப்படையில் வாழ வழிவகுக்கும். ஆட்சியாளர்கள், குடிமக்கள் எனும் இரு தரப்பும் இணைந்து ஓர் ஆட்சியை சீறிய வழியில் நெறிப்படுத்தி நீதம், நியாயம், மனித நேயம் போன்றன இந்நாட்டில் செழித்தோங்க வழிவகுக்கும்.

ஆதலால், அக்கிரமம், அநீதிக்கு எதிராய் இமயமாய் எழுந்து நிற்போம்! ஆனால், இன்னுமொரு குடிமகனின் உரிமையும் உணர்வுகளும் புண்படாதபடி நடந்து கொள்வோம்! எதிர்ப்புப் போராட்டங்களால் மனிதநேயம் கருகிப்போகாமல் பாதுகாப்போம்! மறுமையை முன்னிறுத்தி இம்மையில் செயற்படுவோம்!