Pages

Showing posts with label தஃவா களம். Show all posts
Showing posts with label தஃவா களம். Show all posts

Tuesday, October 18, 2011

பார்வை ஒன்றே போதும்



ஒரு முஃமின் இன்னொரு முஃமினிடம் ஒரு தவறைக் காணும் போது அவர் அந்தத் தவறிலிருந்து அவரைத் திருத்துவதும் அவரிடம் நன்மையை ஏவுவதும் கடமையாகும்.

நான் ஒருமுறை நபி (ஸல்) அவர்களிடம் சென்று, ''இஸ்லாத்தைத் தழுவுவதாக தங்களிடம் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றேன்'' என்று கூறினேன்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ''முஸ்லிம்கள் ஒவ்வொருவருக்கும் நலம் நாட வேண்டும்'' என்று எனக்கு நிபந்தனை விதித்தார்கள். அறிவிப்பவர் : ஜரீர் இப்னு அப்தில்லாஹ் (ரலி),  நூல் : புகாரி 58

இந்த ஹதீஸின் அடிப்படையில் நாம் நம்முடைய சக கொள்கைவாதிக்கு நன்மையைக் கருத வேண்டும்.  அதையொட்டி அவரிடம் ஏற்படும் தவறுகளைச் சுட்டிக் காட்ட நாம் கடமைப்பட்டுள்ளோம்.  இதை ஆதாரமாகக் கொண்டு நாம் ஒரு தவறைச் சுட்டிக் காட்ட முனைகின்ற போது அவரிடம் ஒரே பாய்ச்சலில் பாய்ந்து விடக் கூடாது.

தவறைச் சுட்டிக் காட்டுவதில் ஒரு முரட்டுத்தனம் வந்து விடக் கூடாது.  தவறை எப்படிச் சுட்டிக் காட்ட வேண்டும் என்பதை இஸ்லாம் தகவாக சொல்லிக் காட்டுகின்றது.  இதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உள்ள முன்னுதாரணத்தை வாழ்க்கையில் நாம் பாடமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருக்கும் போது, ஒரு கிராமவாசி பள்ளிக்குள் நுழைந்து, ''யா அல்லாஹ்! எனக்கும் முஹம்மதுக்கும் மன்னிப்பை வழங்குவாயாக! எங்களுடன் சேர்த்து வேறு யாருக்கும் நீ மன்னிப்பளிக்காதே!'' என்று சொன்னார்.  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உடனே சிரித்து விட்டார்கள்.  ''(அல்லாஹ்வின்) விசாலமான தன்மைக்கு நீ தடை விதிக்கின்றாயே!'' என்று கூறினார்கள்.

பிறகு அவர் பள்ளியின் ஓரத்தில் ஆடையை அகற்றி சிறுநீர் கழிக்கலானார்.  (தான் தவறு செய்து விட்டோம் என்று) அவர் உணர்ந்த பின் என்னருகில் வந்து நின்று கொண்டு, ''அவர்கள் கடுமையாக எச்சரிக்கவில்லை. ஏசவில்லை'' என்று சொன்னார்.  அப்போது நபி (ஸல்) அவர்கள், ''இது பள்ளிவாசலாகும்.  இதனுள் சிறுநீர் கழிக்கப் படலாகாது.  இது அல்லாஹ்வை நினைவு கூர்வதற்காகவும் தொழுவதற்காகவுமே கட்டப் பட்டுள்ளது'' என்று கூறி ஒரு வாளி தண்ணீர் கொண்டு வர உத்தரவிட்டார்கள்.  அது அவரது சிறுநீரில் ஊற்றப்பட்டது. அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : இப்னுமாஜா 522

ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார்.  உடனே மக்கள் அவரைப் பிடித்தனர்.  நபி (ஸல்) அவர்கள், ''அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள்.  நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள்.  கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப் படவில்லை'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : புகாரி 220

பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டதால் தன்னை நபி (ஸல்) அவர்கள் கண்டிப்பார்கள் என்று அந்தக் கிராமவாசி எதிர்பார்க்கின்றார்.  ஆனால் அவர் எதிர்பார்த்தது போல் எதுவும் நடக்கவில்லை.  அதே சமயம் அந்தக் கிராமவாசியை நோக்கிப் பாயும் மக்களிடம் நபி (ஸல்) அவர்கள் நளினத்தைப் போதிக்கின்றார்கள்.

தவறைச் சுட்டிக் காட்டுவதாகக் கூறி, தவறு செய்தவரை கடித்துக் குதறி விடும் பழக்கம் நம்மில் பலரிடம் உள்ளது.  அத்தகையவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த நடைமுறையில் அழகிய படிப்பினை உள்ளது.

ஒருவர் தன் நண்பரிடம் ஒரு பொருளைக் கொடுத்து, வெளியில் யாரிடமும் இதைக் கொடுக்கக் கூடாது என்று சொல்கிறார்.  இவரோ நண்பரின் வேண்டுகோளை மீறி அடுத்தவரிடம் கொடுத்து விடுகின்றார். அவர் திருப்பித் தர வரும் போது உரிமையாளர் அங்கு இருக்கின்றார். தனது உத்தரவை நண்பர் அப்பட்டமாகவே மீறி விட்டார் என்று தெரிந்த உரிமையாளர் நண்பர் மீது ஒரு பார்வை செலுத்துகின்றார். இந்தப் பார்வையில் மின்னல் பாய்ச்சிய மின்சாரத் தாக்குதல் அந்த நண்பரைப் படாத பாடு படுத்தி விடும்.           அனலில் பட்ட புளுவாக அவரை நெளிய வைத்து விடும். அந்தப் பார்வை பல கோடி அர்த்தங்களை அந்த நண்பரிடம் சொல்லி முடித்து விடும். இதற்குப் பிறகு வார்த்தைகள் தீயாக, ஏன் தென்றலாகக் கூட வரத் தேவையில்லை. இதிலேயே அந்த நண்பர் உரிய பாடத்தைப் பெற்றுக் கொண்டு விடுவார்.

இது போல் 9 மணிக்கு வரவேண்டிய ஊழியர் ஒருவர் அரை மணி நேரம் தாமதமாக வருகின்றார் என்றால் முதலாளி அவரைக் கடுமையான வார்த்தைகளால் வசை பாட வேண்டியதில்லை.  கடிகார முட்களைப் பார்த்தாலே போதும். அது அந்த ஊழியரின் இதயத்தைத் தைத்து விடும். இப்படி ஒரு அணுகுமுறையை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையிலிருந்து நாம் பெறுகின்றோம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள்.  ஆகவே அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, ''அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலியான சிறுவன்.  அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும்'' என்று கூறினார்கள்.  ஆகவே நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரில் இருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன்.  நான் செய்த எந்தச் செய்கைக்காகவும் 'இதை ஏன் இப்படிச் செய்தாய்?' என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும் 'இதை ஏன் நீ இப்படிச் செய்யவில்லை' என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.           (நூல் : புகாரி 2768)

இன்று இந்த அணுகுமுறைகளை முதலாளி தன் தொழிலாளியிடம் அனுசரிப்பதில்லை.  நண்பர்கள் தங்களுக்குள் அலங்கரித்துக் கொள்வதில்லை.  இப்படியொரு தன்மை இரு தரப்பிலும் நிலவுகின்ற போது அங்கு அமைதி தழுவும்.  பணி சிறக்கும்.  இதற்கு மாற்றமாக ஒரு நல்ல நண்பர் அல்லது ஒரு நல்ல ஊழியர் ஏற்கனவே குற்ற உணர்வில் இருக்கும் போது, அவரிடத்தில் சீறிப் பாயும் கடின வார்த்தைகள் அவரை சீர்குலைய வைக்கின்றன.  அனஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் பத்து ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார்கள்.  இந்தப் பத்தாண்டு காலத்தில் ஏதேனும் பிசகுதல் இல்லாமல் இருந்திருக்க முடியாது.  ஆயினும் நபி (ஸல்) அவர்களின் மென்மையான அணுகுமுறையினால் அது சரி செய்யப்பட்டிருக்கும் என்பதை நாம் விளங்க முடிகின்றது.

இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.  முஹம்மது (ஸல்) அவர்களைப் போன்று முதலாளி மட்டும் இருந்தால் போதாது.  ஊழியராக இருப்பவர் அனஸ் (ரலி) அவர்களைப் போன்று முதலாளியின் எதிர்பார்ப்புகளை உள்வாங்கிக் கொண்டு செயல்படும் உண்மை உணர்வுள்ளவராகவும் இருக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அழகிய நற்பண்புக்கு இன்னோர் எடுத்துக்காட்டு!

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார்.  உடனே நான், 'யர்ஹமுகுமுல்லாஹ் - அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக' என்று சொன்னேன்.  உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர்.  ''(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்!  உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கின்றீர்களே!'' என்று நான் கேட்டேன்.  அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர்.  அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கின்றார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்.  அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை.  என்னை அடிக்கவில்லை.  என்னை ஏசவுமில்லை.  ''நிச்சயமாக இது தொழுகை!  இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது.  நிச்சயமாக தொழுகை என்பது தஸ்பீஹ், தக்பீர், குர்ஆன் ஓதுதல் என்பது மட்டும் அடங்கியதாகும்'' என்று கூறினார்கள்.   (ஹதீஸின் சுருக்கம்) அறிவிப்பவர் : முஆவியா பின் ஹகம் (ரலி),  நூல் : முஸ்லிம் 836

இந்த ஹதீஸை அறிவிக்கும் முஆவியா பின் ஹகம் (ரலி) தொழுகையில் தான் பேசிய பேச்சுக்காக நபி (ஸல்) அவர்களிடம் சரியாக வாங்கிக் கட்டப் போகின்றோம் என்று கனமான உள்ளத்தோடு காத்திருக்கின்றார்கள்.  ஆனால் நபி (ஸல்) அவர்களோ அவர் செய்த செயல்கள் எதையும் கண்டனம் செய்யவில்லை என்பதை இங்கு காண்கிறோம்.  அதற்காக அந்தச் செயலை நபி (ஸல்) அவர்கள் கண்டு கொள்ளவில்லை என்று கூற முடியாது.

சம்பந்தப் பட்ட அவரே தவறு என்று உணர்ந்து குற்ற உணர்வில் கூனி குறுகிப் போயிருக்கும் அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேலும் அவற்றைச் சொல்லி குத்திக் காட்ட விரும்பவில்லை.  ஏனெனில் அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள்.  எதையும் அளவுக்கு மீறி கூறினால் அது அமிர்தமாக இருப்பினும் நஞ்சாகி விடும் என்ற மனித உளவியல் ஓட்டத்தைப் புரிந்த புனிதத் தலைவர் அவர்கள்.  அதனால் உடன்பாட்டு மறையாக, பாஸிடிவாக எதைச் சொல்ல வேண்டுமோ அதை மட்டும் சொல்லி முடிக்கின்றார்கள்.

இதுபோன்ற இதம், பதம் நம்மை என்றும் ஆட்கொள்ளும் விதத்தில் நமது பயணத்தை அமைப்போமா?

விமர்சனங்களும்! சோதனைகளும்!!



இறைத்தூதர்கள் ஏகத்துவத்தை எடுத்துச் சொல்லிய போது சொல்லெனாத் துன்பங்களுக்கும், சோதனைகளுக்கும் ஆளாக்கப் பட்டனர். திருக்குர்ஆனில் அந்த இறைத்தூதர்களின் வாழ்க்கையைப் புரட்டும் போது அவர்களைப் பல்வேறு விதமான சோதனைகள் சூழ்ந்து கொண்டிருந்ததை நாம் காண முடிகின்றது. அந்தச் சோதனைகள் நபிமார்களை மட்டுமல்லாது அவர்கள் கொண்டு வந்த கொள்கையை ஏற்றுக் கொண்ட இறை நம்பிக்கையாளர் களையும் சூழ்ந்து கொண்டிருந்தன. அந்தச் சோதனைகளில் மிக முக்கியமானது எதிரிகள் செய்யும் விமர்சனங்களாகும்.

விமர்சனங்களைப் பற்றி இங்கே நாம் குறிப்பிடும் போது, விமர்சனங்கள் எப்படிச் சோதனைகளாகும்? இவையெல்லாம் சோதனை என்ற வட்டத்திற்குள் வருமா? என்ற சந்தேகம் கூட எழலாம்.  இந்தக் கேள்விக்கு அல்லாஹ்வின் வசனத்திலிருந்தே விடையைக் காணலாம்.

”இவருக்கு ஒரு புதையல் அருளப்பட வேண்டாமா? அல்லது இவருடன் ஒரு வானவர் வர வேண்டாமா?” என்று அவர்கள் கூறுவதால் (முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படும் செய்தியில் சிலவற்றை நீர் விட்டு விடக் கூடும். உமது உள்ளம் சங்கடப்படக் கூடும். நீர் எச்சரிப்பவரே! அல்லாஹ்வே எல்லாப் பொருளுக்கும் பொறுப்பாளன். (அல்குர்ஆன் 11:12)
அல்லாஹ் அருளிய செய்தியை மக்களிடம் சொல்லாமல் விட்டு விடுவது ஒரு இறைத்தூதரைப் பொறுத்த மட்டில் சாதாரண குற்றமல்ல!  ஆனால் அத்தகைய பெரும் பாவத்தைச் செய்யத் தூண்டுமளவுக்கு அம்மக்களின் விமர்சனங்கள் அமைந்திருந்தன என்பதை இவ்வசனம் உணர்த்துகின்றது.  

”அவர்கள் கூறுவதால்” என்ற வாசகம் மக்களின் விமர்சனத்தையே இங்கு குறிப்பிடுகின்றது.  நபி (ஸல்) அவர்களின் உள்ளத்தை விமர்சனங்கள் எந்த அளவுக்குப் பாதித்திருந்தன என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு!
எனவே விமர்சனங்களைத் தாங்கிக் கொள்வதும் பிரச்சாரப் பணியின் முக்கிய அம்சமாகத் திகழ்கின்றது.  அந்த அடிப்படையில் இறைத் தூதர்களுக்கு முன்னோடியாகத் திகழும் நூஹ் (அலை) அவர்களை நோக்கி வந்த விமர்சனங்களை இப்போது பார்ப்போம்.
”இவர் ஒரு பைத்தியக்காரர் தவிர வேறில்லை. சிறிது காலம் வரை இவருக்கு அவகாசம்  கொடுங்கள்!” (என்றனர்) (அல்குர்ஆன் 23:25)
நூஹ் (அலை) அவர்களை அம்மக்கள் பைத்தியக்காரர் என்று கூறியதை இவ்வசனம் கூறுகின்றது. இத்துடன் நின்று விடவில்லை. அவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதாகவும் கூறினார்கள்.
இவர் அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிய மனிதரைத் தவிர வேறு இல்லை. நாங்கள் இவரை நம்புவோராக இல்லை (என்றனர்) (அல்குர்ஆன் 23:28)
அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் ”இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரைத் தவிர வேறில்லை. உங்களை விட சிறப்படைய இவர் விரும்புகிறார். அல்லாஹ் நினைத்திருந்தால் வானவர்களை அனுப்பியிருப்பான். முந்தைய நமது முன்னோர்களிடமிருந்து இதை நாம் கேள்விப்பட்டதுமில்லை” என்றனர். (அல்குர்ஆன் 23:28) 
மக்களிடத்தில் சிறப்பு அந்தஸ்து, தகுதிகளைப் பெறுவதற்காக நபித்துவம் என்ற நடிப்புப் பாத்திரத்தை ஏற்றிருக்கின்றார் என்ற அவதூறைச் சுமத்தினார்கள்.

”இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்” என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 23:33)
இந்த இடத்தில் நீங்கள் உண்ணும் உணவை விட மட்டரகமான உணவையே இவர் உண்ணுகின்றார் என்றும் பொருள் கூறலாம்.  அதாவது இந்தப் பணக்காரப் பிரமுகர்கள் நூஹ் (அலை) அவர்களின் உணவையும் மட்டம் தட்டி, தங்கள் மனக்குமுறலைத் தீர்த்துக் கொண்டனர்.
இப்படிப் பட்ட விமர்சனங்கள் ஓர் இறைத்தூதரை நோக்கி வரும் போது அவர்கள் என்ன பாடுபட்டிருப்பார்கள். தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகள் தொடர் பிரச்சாரம் செய்கின்றனர். எதிரிகளும் இவர்களை நோக்கி விஷமத்தனமாக விமர்சனப் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர்.
இத்தனை விமர்சனங்களுக்கும், விஷமப் பிரச்சாரங்களுக்கும் இடையில் ஒரு கூட்டம் நூஹ் (அலை) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை ஏற்று இறை நம்பிக்கை கொள்கின்றது. அந்தக் கூட்டம் ஏழைகள்! இதை அடிப்படையாகக் கொண்டும் அந்தச் சமுதாயப் பிரமுகர்கள் பரிகசிக்கவும், பழிக்கவும் தவறவில்லை.
‘எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்” என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:27)
”என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!” என்று (நூஹ்) கேட்டார்.
”என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூ­ அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்”
”என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?”

”என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங் களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்” (எனவும் கூறினார்) (அல்குர்ஆன் 11:28,31)


நூஹ் (அலை) அவர்களின் இந்தப் பொறுமையான, அதே நேரத்தில் ஆணித்தரமான பதிலுக்குப் பிறகும் அவர்கள் திருந்தவில்லை.
இது போன்ற விமர்சனங்களைச் செய்வோரிடம், நாம் தக்க ஆதாரங்களுடன் வாதங்களை எடுத்து வைத்தால் அதை அவர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. சத்தியவாதிகள் எடுத்து வைக்கும் வாதங்களுக்குப் பதில் சொல்ல முடியாமல், எதற்கெடுத்தாலும் விவாதம் தானா? என்று கேட்பதைப் பார்க்கிறோம். இந்த நிலையை நூஹ் (அலை) அவர்களும் சந்தித்தனர்.


”நூஹே! எங்களுடன் தர்க்கம் செய்து விட்டீர்! அதிகமாகவே தர்க்கம் செய்து விட்டீர்! உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வாரும்!” என்று அவர்கள் கூறினர். (அல்குர்ஆன் 11:28,31) 

இதற்குப் பிறகும் நூஹ் (அலை) அவர்களால் பொறுக்க முடியவில்லை.  ஆம்! அந்த எதிரிகள் விமர்சித்தது போல் அவர் ஒன்றும் மலக்கல்ல! மனிதர் தான்! எனவே இறைவனிடம் கையேந்துகின்றார்கள். அதுவும் தொள்ளாயிரத்து ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு தான்.


”நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!” என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். (அல்குர்ஆன் 54:10) 

இந்தப் பிரார்த்தனையை ஏற்று அல்லாஹ் நூஹ் நபியைக் ஒரு கப்பல் கட்டுமாறு கட்டளையிடுகின்றான்.


(ஏற்கனவே) நம்பிக்கை கொண்டோரைத் தவிர வேறு யாரும் உமது சமுதாயத்தில் (இனிமேல்) நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள். எனவே அவர்கள் செய்து கொண்டிருப்பதற்காக நீர் கவலைப் படாதீர்! நமது கண்காணிப்பிலும் நமது கட்டளைப்படியும் கப்பலைச் செய்வீராக! அநீதி இழைத்தோர் பற்றி என்னிடம் பேசாதீர்! அவர்கள் மூழ்கடிக்கப்படுவார்கள்” என்று நூஹுக்கு அறிவிக்கப்பட்டது. (அல்குர்ஆன் 11:36,37) 

கப்பல் கட்டும் பணியின் போதும் எதிரணியினர் நூஹ் நபியைக் கிண்டல் செய்யத் தவறவில்லை. அழியப் போகும் அந்தக் கூட்டத்தை நோக்கி நூஹ் (அலை) தெரிவித்த அடக்கமான பதிலைப் பாருங்கள்.


அவர் கப்பலைச் செய்யலானார். அவரது சமுதாயத்தின் பிரமுகர்கள் அவரைக் கடக்கும் போது அவரைக் கே­லி செய்தனர். ”நீங்கள் எங்களைக் கேலி செய்தால் நீங்கள் கே­லி செய்தது போல் உங்களை நாங்களும் கே­லி செய்வோம். இழிவு தரும் வேதனை யாருக்கு வரும்? நிலையான வேதனை யாருக்கு இறங்கும் என்பதை அறிந்து கொள்வீர்கள்!” என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:38,39) 

இதன் பிறகு அல்லாஹ்வின் தண்டனை அவர்களை வந்தடைந்தது.  இதை அல்லாஹ் கமர் என்ற அத்தியாயத்தில் குறிப்பிடுகின்றான்.


அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம்.  பூமியில் ஊற்றுக்களைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்ட படி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப் பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூலி (அல்குர்ஆன் 54:11,14) 

இது தான் அகில உலகத்தின் ஆரம்ப இறைத்தூதர் சந்தித்த சோதனை மற்றும் சோகப் படலமும் அதற்காக அவர்கள் மேற்கொண்ட பொறுமையும் ஆகும்.  நூஹ் (அலை) அவர்கள் மீது எறியப்பட்ட இந்த விஷம் தோய்ந்த அம்புகளை என்னவென்று கூறுவது? இவை எல்லாமே அவர்களது உள்ளத்தைக் கீறிக் காயப்படுத்திய, கூரிய சொல்லம்புகள் தான்.

விஷம் தோய்ந்த இந்த விமர்சன அம்புகள் வார்த்தை வடிவத்திலும் வரலாம். முகவரியுடனோ அல்லது மொட்டையாகவோ எழுத்து வடிவத்திலும் வரலாம்.  ஆனால் இவை எல்லாமே சொல்லம்புகள் தான்.  முதல் முன்னோடி நூஹ் (அலை) அவர்களி­ருந்து இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் வரை அந்த வேதனைப் படலம் தொடர்ந்திருக்கின்றது. இந்த விமர்சனங்களைத் தாங்கி, பிரச்சாரப் பணியைத் தொடரும் பொறுமையை எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்குத் தந்தருள்வானாக!