Pages

Friday, March 16, 2012

சாலை மறியல் போராட்டங்களும் மங்கிப் போகும் மனித நேயமும்!சாலையில் அமராதீர்கள்!என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அங்கு அமர்வதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. நாங்கள் கூடிப் பேசும் இடம் அது தான்என்று மக்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் பாதையில் கூடுவதை தவிர்க்க முடியாவிட்டால் பாதைக்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள்என்று கூறினார்கள். பாதையின் உரிமை எது?” என்று கேட்டர்கள். நபி (ஸல்) அவர்கள் பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், இடைஞ்சல் ஏற்படுத்தாமல் இருப்பதும், ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மையை ஏவி தீமையை தடுப்பதும்என்று பதிலளித்தார்கள்.         (புகாரி - 2465)

கடந்து வந்த சில நாட்களில் கண்டவர் கண்களில் காட்சியளித்தவை தேசத்தின் பெரு வீதியெங்கும் கரும்புகையை கக்கும் டயர்  எறிப்புக் காட்சிகள்! நட்ட நடு வீதியில் வட்டமாய் பற்றி எறியும் தீச்சுவாலை! நடுச்சாலையெங்கும் கனரக வாகனங்களுக்கு பதில் கால் கடுக்க வீற்றிருக்கும் இளங் காளையர் கூட்டம்! மூன்று தசாப்த கால யுத்த விளைவுகளை விழித்திரையில் நிழலாட வைத்த நிகழ்வுகள் இவை!

ஏன் இந்த எதிர்ப்புப் பேரணி? அலைகடலென ஆர்ப்பரித்து அரசுக்கெதிரான கோஷங்களுடன், பாதைகள் தோரும் பதாதைகள் ஏந்தி, விண்ணதிரும் வார்த்தைகளுடன் வீதியெங்கும் சாலை மறியல் போராட்டங்கள் எதற்கு? மண்ணெண்ணெய், டீசல், பெற்றோல் உள்ளிட்ட எரிபொருட்களின் மீது அரசு மேற்கொண்ட அதிரடி விலையேற்றத்தின் எதிர்  விளைவே அவ்வெதிர்ப்பு பேரணிகளின் விஷ்பரூப வெளிப்பாடுகள்.

ரிபொருள் விலையேற்ற அறிவிப்புடன் தனியார்  பஸ் கட்டணம், தண்ணீர் மற்றும் மின்சாரக் கட்டணம், அறுவடை இயந்திர கட்டணம் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் சடுதியாய் கடுகதி வேகத்தில் இமாலயச் சிகரமாய் உயர்ந்து கொண்டே வருகின்றன. முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்கத்தினரை தாண்டி வறுமைக் கோட்டின் விளிம்பு நிலையில் தன் வாழ்க்கை வண்டியை இழுத்துச் செல்லும் ஏழைகள் தான் இவ்விலையேற்றத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அன்றாடம் தன் உதிரத்தை வியர்வை சொட்டுக்களாய் உரமாக்கி, அரை ஜான் வயிற்றுக்காய் அல்லல் படும் ஓர் அபலையின் நிலையில் இருந்து நோக்கி, நம் அரசின் செவிகளுக்கு சில யதார்த்தங்களை உணர்த்த அவாவுறுகிறோம்.

அதிகார கதிரை என்பது தமது ஆதிக்கத்தை செலுத்தி மக்களை  அடக்கியாளும் துரும்புச் சீட்டு அல்ல! அதிகார வீச்சை பயன்படுத்தி நாட்டை சுரையாடி தன் கஜானாவை வளப்படுத்துவதற்காக கிடைத்த வாய்ப்பும் அல்ல! அதிகாரிகள் என்போர்  மக்களின் நலன்களை கண்ணெனக் காப்பதற்காய் மக்களால் தேர்வு செய்யப்பட்டோர்’. மக்கள் நலன் காப்பதும், சுமை போக்குவதும், துயர் துடைப்பதற்குண்டான ஆக்கப்பணிகளை முன்னெடுப்பதுமே ஆட்சியாளனின் கடமை. பசி, பட்டினி, ஏழ்மை என்பவற்றால் ஏலவே வெந்து நொந்து போய் இருக்கும் மக்களின் உள்ளத்தை பொருளாதாரச் சுமைகள் மூலம் மென்மேலும் வேதனையை இரட்டிப்பாக்கி உணர்வுகளை உஷ்னப்படுத்தி, கொதிநிலையின் விளிம்புக்கு கொண்டு வரும் எத்தனங்கள் தொடர்வதானது எதிர்மறை விளைவுகளையே சமூக தளத்தில் தோற்றுவிக்கும். டியுனிஸியா, எகிப்து, லிபியா, மாலைதீவு உள்ளிட்ட தேசங்களில் ஏற்பட்ட மக்கள் புரட்சிகளின் பின்புலம் பொருளாதார ரீதியில் நாடு சந்தித்த சரிவுகளே என்பதனை நம் நாட்டு அரசு மறந்துவிடலாகாது.

அதே சமயம், ர் ஆட்சிபீடம் அரங்கேற்றும் அடாவடித்தனங்கள் அல்லது பொது மக்கள் சுமையை அதிகரிக்கும் படியான செயற்பாடுகளின் போது மக்கள் தம் சிந்தையில் கொள்ள வேண்டிய சில அம்சங்களும் உண்டு. 30 ஆண்டு கால யுத்தத்தினால் எரியுண்டு சுடுகாடாய் சுவடிழந்து நிற்கும் ஒரு தேசத்தை, மீண்டும் புத்துயிர்ப்புடன் எழுச்சிப் பாதையில் எழுந்து நிற்க வைப்பதும், பொருளாதார முன்னேற்றத்தின் பால் வழிநடாத்துவதும் இலகுவான காரியமல்ல. உள்நாட்டு உட்புசல்கள், எதிர்க்கட்சிகளின் எள்ளிநகையாடல்கள், வெளிநாட்டுச் சக்திகளின் கருவறுப்பு முயற்சிகள் என்ற அனைத்து தடைகளையும் தாண்டி அபிவிருத்தியை நோக்கி நாட்டை நகர்த்துவதற்கு காலதாமதம் எடுப்பதும், அதன் போது சில இழப்புகளை எதிர்கொள்ள வேண்டியதும் இயல்பானதே!

ஒரு நாட்டின் இத்திரிசங்கு நிலையை கருத்திற் கொண்டு, நாட்டின் எதிர்கால எழுச்சிக்காய் எம் நலன்களை சற்று இழப்பதும், சுமைகளை சுகமாய் தாங்கிக் கொள்வதும் ஒவ்வொரு பிரஜையினதும் தார்மீகக் கடமையுமாகும். தம் மதியிழந்து, மனக்கட்டுப்பாட்டை இழந்து, தம் உரிமையை பெறுவதற்காய் இன்னுமொரு மனிதனின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் மனிதநேயமற்ற செயற்பாடுகளில் ஒருபோதும் களமிறங்கிவிடக்கூடாது. பறிக்கப்படும் தம் உரிமைகளை வென்றெடுப்பதற்காய் வீதிக்கு இறங்குவதும் சாத்வீக போராட்டங்களில் ஈடுபடுவதன் மூலம் அரசின் கவனக்குவிப்பை தம் நியாய புர்வமான கோரிக்கைகளின் பால் ஈர்க்கப்படுவதற்கான எத்தனங்கள் செய்வதும் அவசியமானவை. மறுதலிக்க முடியாதவை! ஆனால், ஒரு நலனை பெறுவதற்காக களமிறங்கி வீதிகளை வளைத்து சாலை மறியல் போராட்டங்களை மேற்கொள்ளும் எம் எதிர் நடவடிக்கைகளால் சாதாரண பொது மகனின் பல உரிமைகளை தட்டிப்பறிக்கும் ஈனச்செயலில் நாம் இறங்கிவிடக்கூடாது. நடைபாதையில் தடைவிதித்ததால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகள், செல்லும் வழி அறியாது கால் கடுக்க காத்து நின்ற வயோதிபர்கள், காலதாமதத்தால் காலாவதியாகிப் போன வேலைவாய்ப்புகள், தவறிப்போன கல்யாண மற்றும் கருமாதி நிகழ்வுகள், ரிய வேளையில் மருத்துவமற்று மாய்ந்து போகும் அப்பாவி ஜீவன்கள் என்று சாலை மறியல் போராட்டங்களால் தொடரும் மனிதநேயம் மழுங்கிப்போகும் தன்மைகள் ஏராளம்!

சீரான முறையில் ஓர் ஆட்சி நடைபெற்று அமைதி வழியில் ஒரு தேசம் கட்டியெழுப்பப்பட வேண்டுமாயின் அதற்கான ஒரே வழி இஸ்லாம் இயம்பும் இனிய போதனை மறுமையை மறக்காதீர்!’ எனும் மறுமை கோட்பாட்டை விசுவாசிப்பது மட்டுமே!.மறு உலக வாழ்வு குறித்த நம்பிக்கை ஒன்று மட்டும் தான் உலகில் யாருக்கும் பதில் சொல்லாவிட்டாலும் மறுமையில் இறைவன் சந்நிதானத்தில் ஒரு நாள் என் இவ்வுலக செயற்பாடுகளுக்காய் பதில் சொல்லியாக வேண்டும்என்ற உணர்வுப் பிரவாகத்தின் அடிப்படையில் வாழ வழிவகுக்கும். ஆட்சியாளர்கள், குடிமக்கள் எனும் இரு தரப்பும் இணைந்து ஓர் ஆட்சியை சீறிய வழியில் நெறிப்படுத்தி நீதம், நியாயம், மனித நேயம் போன்றன இந்நாட்டில் செழித்தோங்க வழிவகுக்கும்.

ஆதலால், அக்கிரமம், அநீதிக்கு எதிராய் இமயமாய் எழுந்து நிற்போம்! ஆனால், இன்னுமொரு குடிமகனின் உரிமையும் உணர்வுகளும் புண்படாதபடி நடந்து கொள்வோம்! எதிர்ப்புப் போராட்டங்களால் மனிதநேயம் கருகிப்போகாமல் பாதுகாப்போம்! மறுமையை முன்னிறுத்தி இம்மையில் செயற்படுவோம்!

No comments:

Post a Comment

சொல்வதைத் தெளிவாகச் சொல்லுங்கள்