Pages

Thursday, June 9, 2011

மவ்தூதியை மகானாக்க முயலும்
ஜமாஅதே இஸ்லாமியின் முரீதுகள்
எம்.டீ.எம்.பர்ஸான் - சிலாபம்
சத்திய இஸ்லாத்தின் அறிவார்ந்த கருத்துக்களை, தங்கள் கைச்சரக்குகள் மூலம் திரிபுபடுத்தி, முஸ்லிம் சமுதாயத்தின் ஈமானிய அடிப்படையை தகர்த்தெரியும் தரம் கெட்ட திட்டங்களை லாவகமாய் நிறைவேற்றும் தீய சக்திகள் வரலாறு நெடுகிலும் வளர்ந்து வந்திருப்பது உலகறிந்த பேருண்மை.
இஸ்லாத்தை ஒழிப்பதற்காய் இஸ்லாமிய முழாம் புசிய கோடாரிக் காம்புகளை அதற்குள் இருந்தே உற்பத்தி செய்து உலாவிடும் போக்கு யுதர்கள் கைக்கொண்டு வரும் பிரதான உக்திகளில் ஒன்று. இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையான ஏகத்துவம், தூதுத்துவம் உள்ளிட்ட அம்சங்களில் சீர் கெட்ட சிந்தனைகளை நுழைத்து, முஸ்லிம் சமுதாயத்தை கூறுபோடுவதற்காய் உருவாக்கப்பட்ட சில கோடாரிக் காம்புகளே ஷீயாக்களும் தரீகாக்களும் ஆகும்.
தங்கள் தரீகத்துத் தலைவரை நபியின் ஸ்தானத்துக்கு உயர்த்தி, அவருக்குள் இறைபுறத்திலிருந்து வஹி வருகிறது எனும் போலித் தோற்றத்தை ஏற்படுத்தி, நரகிலிருந்து தற்காப்புப் பெறவேண்டுமாயின் தங்கள் தலைவரான ஷைஹூ நாயகத்துக்கு பைஅத் செய்து முரீதாக மாற வேண்டும் எனும் விஷக் கருத்தை உள்ளத்தில் விதைத்து, வழிகேட்டுக்கு பாதை அமைத்தோரே இந்த ஷீயாக்களும் தரீகாவாதிகளும்.
தாம் சார்ந்த தரீகாவின் கருத்துக்கள் சமுதாயத்தில் சரிகாணப்பட வேண்டுமாயின், தமது தரீகா தலைவர்களை பெரும் ஆன்மீக வாதிகளாகவும், இறைநேசச் செல்வர்களாகவும் சித்தரித்து வழிகேட்டுக்கு ஆன்மீகச் சாயல் புச வேண்டிய  அவசியம் இவர்களுக்கு ஏற்பட்டன. இதன் விளைவே நபிகளாரை மிஞ்சிய மகான்களாக, கராமத்துக் காட்டும் புனிதர்களாக ஸூபியாக்கள் எனும் வழிகேட்டுக் கும்பல் உருவாக்கப்பட்டமை.
எப்படி தரீகா வாதிகள் தங்கள் நச்சுக்கருத்துக்களை விதைப்பதற்காக தம் ஸ்தாபகர்களை பெரும் ஆன்மீக வல்லமை பெற்ற மகான்களாக சித்தரிக்க முற்பட்டனரோ, அதே பாணியில் இன்று நடைபயிலும் ஒரு நவீன தரீகா அமைப்பே “ஜமாஅதே இஸ்லாமி” ஆகும்.
ஜமாஅதே இஸ்லாமி எனும் தங்கள் அமைப்பின் கருத்துக்களை நிலைநாட்டுவதற்காக, அதன் ஸ்தாபகர் மவ்லானா மவ்தூதியை மகானாக்க முயன்றமை இவர்களும் தரீகாவாதிகளும் ஒன்றுதான் என்பதற்கு தக்க சான்றாக உள்ளது. மவ்லானா மவ்தூதியின் வாழ்க்கை வரலாற்றை அவர் மகள் ஹூமைரா மவ்தூதி ‘அல்முஜ்தமஃ’ எனும் அரபுச் சஞ்சிகையில் தொடராக எழுதுகிறார். அதனை தமிழுக்கு மொழியாக்கம் செய்திருக்கிறார்  இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீரான ரஷீத் ஹஜ்ஜூல் அக்பரின் மூத்த மகன் அப்துல் ஹலீம் (நளீமி). இம்மொழியாக்கம் “வேர்களை வாசிக்கும் விழுதுகள்” என்ற பெயரில் இலங்கை ஜமாஅதே இஸ்லாமியின் அமீர் ஹஜ்ஜூல் அக்பரின் அணிந்துரையுடனும், அஷ்ஷெய்க் அகார் முஹம்மத் (நளீமி) அவர்களின் மதிப்புரையுடனும் அல்ஹஸனாத் பதிப்பகத்தால் வெளியிடப் பட்டுள்ளது.

  இந்நூல் தங்கள் இயக்க ஊழியர்கள் அவசியம் வாசித்தாக வேண்டிய நூற்களில் ஒன்றாக உயர் பீடத்தால் வலியுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். மவ்தூதியின் வாழ்க்கை நிகழ்வுகளை விபரித்துக் கொண்டு வரும் சாட்டில், இஸ்லாத்தின் அடிப்படையை தகர்க்கும் ஸூபித்துவ வாடை வீசும் தரீகத்து நரித்தந்திரத்தை இந்நூலில் சுசகமாக உள்நுழைத்துள்ளமை வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய வழிகேட்டுப் போக்காகும்.
காதியானிகளுக்கு எதிராக கட்டுரை எழுதி சிறையில் அடைக்கப்படுகிறார் மவ்தூதி. மவ்தூதியின் சிறைவாசத்தின் போது, அவாpன் மீது தீவிர பக்தி கொண்ட ஒரு சீடர்  உரங்கும் போது ஒரு கனவு காண்கிறார். அக்கனவு குறித்த விபரம் மேற்படி புத்தகத்தில் பின்வருமாறு பதியப்பட்டுள்ளது.
“நீதி மன்றம் ஷேய்க் அபுல் அஃலா மௌதூதி அவர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை கனவில் கண்டேன். அவர் அல்லாஹ்விடம் இவ்வாறு பிரார்த்தித்துக் கொண்டிருந்தார். ‘யா அல்லாஹ், நிச்சயமாக மௌதூதி எனது மார்க்கத்தின் பக்கம் மக்களை அழைப்பவராக இருக்கின்றார். உன்னுடைய மார்க்கம் ஓங்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார். எனவே, யா அல்லாஹ், அவரது உயிரைக் காப்பாற்றுவாயாக!’. அப்போது திடீரென்று ஒரு சப்தத்தைக் கேட்டேன். “முஹம்மதே! உம்முடைய துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது” என்பதே அந்த சப்தமாகும்.”
(நூல்: வேர்களை வாசிக்கும் விழுதுகள்    பக்கம்: 53,54)
மேற்படி சம்பவத்தை இந்நூலில் குறிப்பிடுவதன் மூலம் ஜமாஅதே இஸ்லாமி எதிர் பார்ப்பது என்ன? ‘எல்லாம் அல்லாஹ்’ எனும் அத்வைத சித்தாந்தத்தை வரிந்துக்கட்டிக் கொண்ட தரீகாக்கள் எப்படி தம் ஸூபிமகான்களை இறை நேசர்களாகவும், இறைவனை கனவில் தரிசிப்பவர்களாகவும் சித்தரித்தனவோ, அல்லாஹ்வோடு கனவில் பேசிய பெரியார்கள், நபிகளாரை கனவில் கண்ட ஞானவான்கள் என்று தப்லீக் தஃலீம் தொகுப்பில் ஜகரிய்யா ஸாஹிப் எப்படி உலரிக் கொட்டியுள்ளாரோ, அதற்கும் ஜமாஅதே இஸ்லாமியின் மவ்தூதி குறித்த இந்தக் குறிப்புக்கும் என்ன வித்தியாசம் தான் உண்டு? தரீகா, தப்லீகைப் போன்று கப்ஸாக்களை கட்டவிழ்த்து விடும் ஜமாஅத்தினரே நாங்கள் என்பதை ஜமாஅதே இஸ்லாமி இங்கு அடையாளப்படுத்தியுள்ளது.
தமது இயக்க ஸ்தாபகரின் மேல் மவுஸை ஏற்படுத்துவதற்காக எழுதப்பட்ட இக்குறிப்பில் உட்பொதிந்துள்ள வழிகேட்டுக்கருத்துக்கள், மார்க்கத்தின் அடிப்படையை தகர்ப்பவையாக இருப்பது ஏனோ இந்த ஞான சுனியங்களின் கண்களுக்குப் படவில்லை. இஸ்லாத்தின் மேல் உள்ள பிடிப்பை விட தம் இயக்கத்தின் மேல் உள்ள குருட்டு பக்தியானது வழிகேட்டைக் கூட சரிகாணும் அளவுக்கு இவர்களை இட்டுச் சென்றுள்ளது. மவ்தூதியை மகானாக்க முயலும் இக்குறிப்பிலுள்ள அபத்தங்களை இப்போது பார்ப்போம்.
அபத்தம் - 01
01-  நபிகளாரை கனவில் காண முடியுமா?
ஒருவர் இறை நேசராக ஆகிறார் என்றால் அதற்கான அடையாளம் நபிகள் நாயகத்தைக் கனவில் காண்பது தான் எனவும் மார்க்க அறிவு குறைந்த சிலர் நினைக்கின்றனர். இந்தப் பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு ஏமாற்றுப் பேர்வழிகள் தாங்கள் கனவில் நபிகள் நாயகத்தைக் கண்டதாகப் புளுகி மக்களிடம் இறை நேசர் என்ற பட்டத்தைப் பெற்று விடுகின்றனர். முரீது என்ற பெயரால் மக்களை வழிகெடுக்கும் பித்தலாட்டக்காரர்களும் கூட தாங்கள் நபிகள் நாயகத்தைக் கனவில் கண்டதாகக் கூறித் தான் ஆள் பிடிக்கும் வேலையில் இறங்குகிறார்கள்.
எனவே, மவ்தூதிக்காக நபிகளார் துஆ கேட்டதை ஏற்கலாமா? என்பதை பார்ப்பதற்கு முன், நபிகளாரை கனவில் காண முடியுமா? என்பது பற்றி அறிந்து கொள்வது அவசியமாகும்.
'யார் என்னைக் கனவில் காண்கிறாரோ அவர் என்னையே கண்டார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)     நூல்: புகாரி 610, 6197
இந்தச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு தான் நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்று சிலர் வாதிட்டு வருகின்றனர். இந்த நபிமொழியை இவர்கள் தவறாக விளங்கியுள்ளனர். இந்த நபிமொழியை எவ்வாறு விளங்குவது என்பதற்கு மற்றொரு நபிமொழி துணை செய்கிறது.
'என்னை யாராவது கனவில் கண்டால் விழித்தவுடன் என்னைக் காண்பார். ஏனெனில் ஷைத்தான் என் வடிவில் வரமாட்டான்” என்பது தான் அந்த நபிமொழி.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)     நூல்: புகாரி 6993
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை எவர்கள் கனவில் காண இயலும் என்பதை இந்த நபிமொழி விளக்குகிறது.
'என்னைக் கனவில் காண்பவர் விழித்தவுடன் நேரிலும் காண்பார்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறுகின்றனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உலகில் உயிரோடு வாழும் போது மாத்திரம் தான் இது சாத்தியமாகும். அவர்கள் உயிரோடு இந்த உலகில் வாழும் போது ஒருவர் கனவில் அவர்களைக் கண்டால் விழித்தவுடன் அவர்களை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார் என்று இந்த நபிமொழி கூறுகிறது. இன்று ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டதாகக் கூறினால் விழித்தவுடன் அவர் நேரிலும் அவர்களைக் காண வேண்டும். நகமும் சதையுமாக அவர்களை நேரில் காணவில்லையானால் அவர் கனவிலும் அவர்களைக் காணவில்லை என்பது உறுதி.
எனவே நபிகள் நாயகம் (ஸல்) காலத்துக்குப் பிறகு எந்த மனிதரும், எந்த மகானும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்க்கவே இயலாது என்பதை இரண்டாவது கருத்துக்கு இடமில்லாமல் இந்த நபிமொழி தெரிவிக்கிறது. இந்த இடத்தில் சிலருக்கு ஏற்படும் ஒரு சந்தேகத்தையும் அதற்கான விளக்கத்தையும் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
கனவில் ஒருவர் தோன்றி, ‘நான் தான் முஹம்மத் நபி’ என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நபிகள் நாயகத்தின் வடிவில் ஷைத்தான் வரமாட்டான் என்ற நபிமொழியின் அடிப்படையில் கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் வந்தார்கள் என்று கருதலாம் அல்லவா? என்பது தான் அந்தச் சந்தேகம்.
‘நான் தான் முகம்மது நபி’ என்று ஒருவர் கூறுவது போல் கனவு கண்டாலும் அது நபிகள் நாயகம் அல்லர். ஷைத்தான் அவர்களின் பெயரைப் பயன்படுத்தியுள்ளான் என்று தான் புரிந்து கொள்ள வேண்டும். ஷைத்தான் நபிகள் நாயகத்தின் வடிவத்தை எடுக்க மாட்டான் என்று தான் அந்த நபிமொழி உத்தரவாதம் தருகிறது. ஷைத்தான் தனக்கே உரிய வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று அந்த நபிமொழி கூறவில்லை.
'என் வடிவில் ஷைத்தான் வர மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர். கனவில் ஒருவர் வந்தால் அவர் நபிகள் நாயகமா அல்லவா? என்று முடிவு செய்வதாக இருந்தால் அவர் நபிகள் நாயகத்தை நேரில் பார்த்தவராக இருக்க வேண்டும். நேரில் அவர்களை எந்த வடிவத்தில் பார்த்தாரோ அதே வடிவில் கனவிலும் வந்தால் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்று அவரால் அறிந்து கொள்ள இயலும். நபிகள் நாயகத்தின் வடிவத்தைக் காணாத ஒருவரால் இதை அறிந்து கொள்ள இயலாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தை எடுப்பதை விட்டும் தான் ஷைத்தான் தடுக்கப்பட்டுள்ளான். வேறு வடிவத்தில் வந்து நான் தான் நபிகள் நாயகம் என்று கூற மாட்டான் என்று எந்த நபிமொழியும் இல்லை.
நபிகள் நாயகத்தை ஏற்கனவே நேரடியாகக் கண்டவர் தான் கனவில் காண முடியும். அல்லது கனவில் கண்டவர் பின்னர் நேரில் காண முடியும் என்பதைத் தான் இரண்டு நபிமொழிகளும் கூறுகின்றன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பிறகு 'நபிகள் நாயகத்தை இந்தப் பெரியார் கனவில் கண்டார், அந்த மகான் கண்டார், நபியவா;கள் மவ்தூதிக்காக துஆ செய்வதை நான் கனவில் கண்டேன்” என்றெல்லாம் கூறப்படுமானால் அது கட்டுக்கதையாகத் தான் இருக்க முடியும். அல்லது ஷைத்தான் நபிகள் நாயகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவரை ஏமாற்றியிருக்க வேண்டும் என்பதில் எள்முனையளவும் சந்தேகம் இல்லை.
எனவே, மேற்குறித்த விளக்கங்களிலிருந்து நபிகள் நாயகத்தை இன்று கனவில் காண இயலாது என்பது நிரூபணமாகிறது. அப்படியிருக்க மவ்தூதிக்காக நபிகளார் பிரார்த்தித்ததை நான் கனவில் கண்டேன் என்று ஒருவர்  புளுகுவதை ஜமாஅதே இஸ்லாமி சரியென்று வாதிடுகிறதா? நேற்று ஒருவர் நபிகளாரை கனவில் கண்டேன் என்பார். பிறகு நபிகளார் கனவில் தோன்றி மார்க்க சட்டங்களை சொல்லித்தருவதாக கதையளப்பார். இப்படியான வழிகேட்டுக்கான வாயிலைத்தான் ஜமாஅதே இஸ்லாமி திறந்துவிட்டிருக்கிறது.
அபத்தம் - 02
02-  மரணித்த பின்னரும் நபிகளார் உலக நடப்புகளை அறிவார்களா?
மவ்தூதி குறித்த மேற்படி சம்பவத்தில் நபிகளார் அவர்கள் மவ்தூதியுடைய மார்க்கப்பணியை அல்லாஹ்விடம் முறையிட்டு, அவரை சிறையிலிருந்து மீட்டு அவர் உயிரை காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் வேண்டுகோள் விடுப்பதாக எழுதப்பட்டுள்ளது.
ஒருவர் மரணித்ததற்குப் பின் அவருக்கும் உலகுக்குமிடையிலான சகல தொடர்புகளும் துண்டிக்கப்பட்டு விடுகின்றன. உலகில் யார் யார் உயிர் வாழ்கிறார்கள், அவர்கள் மார்க்கத்துக்காக என்னவெல்லாம் செய்கிறார்கள் என்பன போன்ற எந்தத் தகவலாக இருப்பினும் எதுவொன்றுமே மரணித்து மண்ணறையில் வாழ்பவரால் அறிந்து கொள்ள முடியாது என்று அல்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது.
‘அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது.(23:100)
இந்த நிலையிலிருந்து நபிகளார் கூட விதிவிலக்குப் பெவில்லை என்பதனை பின்வரும் செய்தி உறுதிப்படுத்துகிறது.
“நான் கவ்ஸர் எனும் தடாகத்தில் உங்களை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் என்னைக்கடந்து செல்கிறாரோ அவர் அதனை அருந்துவார். யார் அதனை அருந்துகிறாரோ அவருக்கு ஒரு போதும் தாகம் ஏற்படாது.என்னிடம் சில கூட்டத்தினர் வருவார்கள். அவர்களை நானும் அறிவேன். அவர்களும் என்னை அறிவார்கள். பின்னர் எனக்கும் அவர்களுக்குமிடையே திரையிடப்படும். ‘அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்’ என்று கூறுவேன். ‘உமக்குப் பின்னால் அவர்கள் எதையெல்லாம் புதிதாக உருவாக்கி விட்டனர் என்பது உமக்குத் தெரியாது’ என்று கூறப்படும். ‘எனக்குப் பின் மார்க்கத்தை மாற்றியவர்களுக்குக் கேடு தான், கேடு தான் என்று நான் கூறுவேன்’என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : ஸஹ்ல் இப்னு ஸஅது (ரலி)   நூல் : புகாரி - 6585, 4740, 3349
மேற்படி நபிமொழி எமக்குச் சொல்லும் செய்தி என்ன? நபிகளாருக்குப் பின் உயிர் வாழ்ந்தவர்கள் செய்த நடவடிக்கைகள் குறித்த அறிவு நபிகளாருக்கு இல்லை என்பதை ஐயம் திரிபற சொல்கிறது. இந்த நபிமொழியை மறுக்கும் விதத்தில், மவ்தூதியுடன் தொடர்புடைய மேற்படி சம்பவம் எழுதப்பட்டுள்ளமை சிந்திக்க வேண்டிய அம்சமாகும். சத்திய ஸஹாபாக்கள் செய்த வற்றையே நபிகளாரால் அறிய முடியவில்லை எனும் போது, அவர்களுக்கெல்லாம் பல்லாண்டுகளுக்குப்பின் வாழ்ந்த மவ்தூதியின் மார்க்கப்பணியை நபிகளார் அறிந்து வைத்திருந்தார் என்று ஒருவர் எழுதுவாராயின் அது வடிகட்டிய அறியாமை என்பது புலப்படுகிறது.
அபத்தம் - 03
03-  அல்லாஹ்வின் வார்த்தைகளை அற்பர்களால் செவிமடுக்க முடியுமா?
ஒரு நபிக்கும் சாதாரண மனிதனுக்கும் இடையிலுள்ள அடிப்படை வித்தியாசம் வஹி எனும் இறைச் செய்தியாகும். நபிமார்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹி வரும். சாதாரணமானவர்களுக்கு வரமாட்டாது. வஹி அருளப்படும் முறைகளில் ஒன்று அல்லாஹ் நபிமார்களுடன் நேரடியாக உரையாடுவதாகும். மூஸா (அலை) அவர்களை தூர் ஸினா மலையடிவாரத்துக்கு அழைத்து உரையாடியமை, முஹம்மது (ஸல்) அவர்களை மிஃராஜின் போது அழைத்து உரையாடியமை இவற்றுக்கான சான்றுகளாகும்.
நபிமார்களை விடுத்து வேறு எவராலும், எவ்வளவு பெரிய ஆன்மீகவாதியாளும் அல்லாஹ்வின் உரையாடலை செவியேற்க முடியாது. அவ்வாறு ஒருவர் ‘நான் அல்லாஹ்வுடன் பேசினேன், அல்லது அல்லாஹ் பேசுவதை நான் செவியேற்றேன்’ என்று கூறுவாராயின் அவர் தன்னை நபியென்கிறார் என்பதே அர்த்தமாகும். இப்படியிருக்க, மவ்தூதிக்காக நபிகளார் அல்லாஹ்விடம் பிரார்த்தித்ததாகவும், நபிகளாரின் பிரார்த்தனையை ஏற்றுக் கொள்ளும் விதமாக ‘முஹம்மதே! உம்முடைய துஆ ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது’ என்ற சப்தம் வந்ததாகவும், அதனை தான் செவிமடுத்ததாகவும் ஒரு கிறுக்கன் உலரி வைத்துள்ள உலரல் ஜமாஅதே இஸ்லாமியின் அறிவுக்கண்களுக்கு எட்டாமல் போனது வியப்பாக உள்ளது. இதனை இவர்கள் தரிந்து தான் செய்தார்களா? அல்லது தம் இயக்க ஸ்தாபகரின் கீர்த்தியை உயர்த்துவதற்காக கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்களா?
அபத்தம் - 04
04-  ஒருவரை நல்லவரென்று உலகத்தில் தீர்மானிக்க முடியுமா?
இறைநேசர்கள் யார் என்பதை திருமறைக்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகிறது.
“அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் நேசர்கள் எதற்கும் அஞ்ச மாட்டார்கள். எதற்காகவும் கவலைப்படவும் மாட்டார்கள்.அவர்கள் விசுவாசம் கொண்டு, (இறைவனை) அஞ்சி நடப்பார்கள்.”  (10:62-63)
யாருடைய உள்ளத்தில் ஈமானும் இறைவனை அஞ்சி நடக்கும் தக்வாவும் உள்ளதோ அவர்கள் அனைவரும் இறைநேசர்கள் என்று இவ்வசனம் சொல்கிறது. இவ்விரண்டு பண்புகளையும் மனிதக்கண்களால் எடைபோட முடியாது. உலகில் எமது பார்வையில் மகானாகத் திகழ்ந்தவர் மறுமையில் மகாபாவியாக இருக்கலாம். உலகில் எமது கண்ணோட்டத்தில் பாவியாக இருப்பவன் மறுமையில் மிகச் சிறந்த பேறுபெற்றவனாகத் திகழலாம். எனவே, ஒருவரை நல்லவர் கெட்டவர் என்று தீர்மானிக்கும் அதிகாரம் இறைவனுக்கு மட்டுமே உரிய அதிகாரமாகும். யாரைப்பற்றி இறைவன் நபிகளாருக்கு இவர் நல்லவர்  என்று அறிவித்துக் கொடுத்தானோ அவரைப்பற்றி மட்டும் அல்லாஹ்வின் தூதர் ‘இவர் சுவர்க்க வாசி’ என்று கூறியுள்ளார்கள். சுவனத்தைக் கொண்டு நற்செய்தி கூறப்பட்ட 10 நபித்தோழர்களும் இவ்வாறு இறைவனால் நபிகளாருக்கு அறிவிப்புச் செய்யப்பட்டவர்களே.
நபிகளார் யாரைப் பற்றி எதுவும் சொல்ல வில்லையோ அவரின் மறுமை முடிவு அல்லாஹ்விடம் மட்டுமே உள்ளது. இதுவே ஒரு முஃமினுடைய அடிப்படை நம்பிக்கை. ஆனால், ஜமாஅதே இஸ்லாமி இந்த அடிப்படையையும் தகர்க்கும் விதமாக எல்லைக்கடந்து போய் தமது இயக்கத்தலைவரை புகழ்ந்துரைக்கும் விதமாகவே மேற்படி சம்பவம் உள்ளது.
மவ்தூதி நரகவாதியென்று நாம் ஒருபோதும் கூறவில்லை. கூறுவும் மாட்டோம். கூறவும் கூடாது. ஆனால், மவ்தூதியை சுவனவாதியாக சித்தரிக்க முனைவதைத்தான் நாம் தவறு என்கிறோம். நபிகளார் ‘மவ்தூதி இந்த மார்க்கம் ஓங்க வேண்டும் என்பதற்காக உழைக்கிறார். அவரது உயிரை காப்பாற்று!’ என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கிறார். அல்லாஹ்வும் நபிகளாரின் பிரார்த்தனையை தான் அங்கீகரித்து விட்டதாக பதிலுரைக்கிறான் என்றால், இதன் அர்த்தம் என்ன?
‘நபிகளாரின் பிரார்த்தனைக்கும், அல்லாஹ்வின் மன்னிப்புக்கும் உரித்தான மா மனிதரே மவ்தூதி! அல்லாஹ் அவரின் மார்க்கப்பணியை அங்கீகரித்து விட்டான். எனவே, மவ்தூதி ஓர் இறை அங்கீகாரம் பெற்ற நல்லடியார். அவரின் கருத்துக்களும், பிரச்சாரங்களும், உரைகளும், எழுத்துக்களும் இறைவனால் பொருந்திக்கொள்ளப்பட்டவை. யாரும் அவாpன் பிரச்சாரத்தை கண்மூடி பின்பற்றலாம்’ என்ற நச்சுக்கருத்தைத் தானே இச்சம்பவத்தின் ஊடாக மேற்படி நூலில் விதைக்கப்பட்டுள்ளது.
ஜமாஅதே இஸ்லாமி என்ற இயக்கத்தை மக்கள் அங்கீகரிக்க வேண்டுமாயின், அதன் பால் மக்கள் அணியணியாக திரள வேண்டுமாயின் அதன் தலைவர் மவ்தூதியை மகானாக்க வேண்டும். இறை அங்கீகாரம் பெற்ற மனிதராக தரமுயர்த்த வேண்டும். ஆன்மீக ரீதியான உயர் அந்தஸ்தை வழங்க வேண்டும். அப்போது தான் இலக்கை எட்டலாம். அல்லாஹ்வின் தூதரே மவ்தூதிக்காக பிரார்த்தித்திருக்கும் போது நீ எப்படி மவ்தூதியின் பிரச்சாரத்தை, கருத்துக்களை தவறு என்று கூறலாம்’ என்ற நிலையை பொது மக்கள் மத்தியில் ஏற்படுத்த வேண்டும் என்ற குள்ள நரிச்சிந்தனையின் வெளிப்பாடாகவே இக்கருத்துக்கள் புனையப்பட்டுள்ளன.
ஈமானிய அடிப்படையை தகர்க்கும் இத்துனை நச்சுக்கருத்துக்களை உள்ளடக்கிய மேற்படி சம்பவத்தை ஜமாஅதே இஸ்லாமியினாலும், ஹஜ்ஜூல் அக்பரினாலும், அகார் முஹம்மதினாலும் எப்படி ஜீரணிக்க முடிந்தது? இயக்கப்பக்தி இவர்களின் அறிவுக்கண்களை அடைத்து விட்டது என்பதை விட வேறு எதனையும் நமக்கு பதிலாக கூறமுடியவில்லை.
‘அறிவியல் உலகை மூடியிருக்கும் அறியாமை இருள்’ எனும் கருப்பொருளில் இஜ்திமா நடாத்தும் ஜமாஅதே இஸ்லாமியினரே! முதலில் உங்கள் சிந்தனையை மூடியிருக்கும் இருளை அகற்ற முயற்சி செய்யுங்கள். சத்தியத்துடன் அசத்தியத்தை இரண்டரக்கலந்து தன்னை நம்பி வரும் முஅய்யித், முஸாயித், முன்தஸிப் ஊழியர்களை வழிகேட்டின் பால் அழைத்துச் செல்லும் அயோக்கியத்தனத்திலிருந்து இதன் பிறகாவது உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள். பொது மக்கள் இவர்களின் வெளிவேஷத்தில் மயங்கி தம் சிந்தனையை அடகு வைத்து விடாது அறிவு புர்வமாக நடந்து கொள்ளுங்கள். யார் எதை சொன்னாலும் அது மார்க்கம் தான் என்ற தக்லீது கலாச்சாரத்திலிருந்து மீண்டு, எவருடைய கருத்தையும் ‘குர்ஆன் ஸூன்னா’ எனும் உரை கல்லில் உரசிப்பார்த்து தெரிவு செய்யும் போக்கை கைக்கொள்ளாத வரை இவர்கள் போன்றவர்கள் வளரவே செய்வார்கள்.
அல்லாஹ் எம் அனைவருக்கும் சத்தியத்தை சத்தியமாகவும், அசத்தியத்தை அசத்தியமாகவும் வேறு பிரித்துக் காட்டுவானாக!

Sunday, June 5, 2011

உன்னத உம்மத்தின் உயர்பண்பு : தீமை ஒழிப்பு!


“நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்! (3:110)

ஆதி பிதா ஆதம் (அலை) அவர்கள் என்று படைக்கப்பட்டார்களோ, அன்று முதல் இன்று வரை சத்தியத்திற்கும் அசத்தியத்திற்கும் இடையிலான கொள்கைப் போராட்டம் ஆரம்பித்து விட்டதை நாம் அறிவோம். சத்தியவான்கள் நன்மைகளை வாழ வைக்கும் பணியிலும், அசத்திய வான்கள் தீமைகளை கட்டவிழ்த்து விடும் கயமைத்தனத்திலும் களமிறங்கியிருப்பதை பார் எங்கும் பரவலாக அவதானிக்க முடிகிறது.

ஷைத்தானிய சுழ்ச்சியில் சிக்குண்ட மனித குலம், தம் அற்பத்தனமான ஆசைகளை அடைவதற்காய், மானிடப் பண்புகளை மறந்து, ஈவிரக்கமற்ற மா பாதகச் செயல்களை கூட நாணமற்றுச் செய்யும் நிலைக்கு தரம் தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறது. எத்திசை நோக்கினும் தீமைகளின் சுவாலை சுட்டெறித்த சுவடுகள் எச்சங்களாய் எஞ்சியிருப்பதை காணமுடிகிறது.
பள்ளிப் பாலகன், முதல் பட்டம் பெற்ற பட்டதாரிகள் வரை ஆண் - பெண் வித்தியாசமின்றி குற்றச் செயல்கள் இழைத்து குற்ற வாளிக் கூண்டில் நிறுத்தப்படும் அவலம் சர்வசாதாரணமாய் அரங்கேறி வருகிறது, எதிர் காலம் குறித்த ஐயப்பாடுகள் அனைவர் அகத்திலும ஆழமாய் வேரூண்றி வருகிறது என்றால் மிகையாகாது.

உலகையே ஆக்ரமித்து ஆரத்தழுவியிருக்கும் அராஜகங்களின் பிடியிலிருந்து இம்மனித குலத்தை மீட்டெடுக்கும் மகத்தான பொறுப்பு, ஏகன் அல்லாஹ்வை ஏற்றிருக்கும் ஏகத்துவ வாதிகளின் தோள்களின் மீது சுமத்தப்பட்டுள்ளதை நம்மவர்கள் புரிந்து கொள்ளாமை கசப்பான உண்மையாகும்.

ஒரு புறத்தில், ஈமானைப்பறித்து மனிதர்களை நரகின் நிரந்தர எறிகற்களாய் மாற்றும் முஸ்தீபுகளில் பல வழிகெட்ட இயக்கங்கள் முனைப்புடனும், திட்டமிட்ட அடிப்படையிலும் இந்நாட்டில் வேர் பிடித்து வளர்ந்து வருகின்றன. அல்குர்ஆனை மறுத்து, அருமை ஸஹாபாக்களை காபிர்களாக்கும் ஷீயாயிஸம், போராக்கள், தஃவதே இஸ்லாமி போன்ற சீர்கெட்ட சிந்தனைகள் நுணுக்கமாய் தம் காய் நகா;த்தல்களில் ஈடுபடுவதை காணமுடிகிறது. வெளிகமையைச் சேர்ந்த மிலேனியம் கல்வி ஸ்தாபனம், ஓட்டமாவடியைச் சேர்ந்த மன்பஉல் ஹூதா அரபுக்கல்லூரி  போன்ற கல்வி நிறுவனங்கள் ஊடாகவும், முஸ்லிம் வர்த்தகச் சேவையில் ‘வாழ்வும் பண்பாடும்’ என்ற நிகழ்ச்சியின் மூலமும், கருத்துக்களம் என்ற தொடர் வெளியீடுகள் வாயிலாகவும் இவர்களின் கருத்துகள் முஸ்லிம்களின் காதுகளுக்கு கடத்தப்பட்டு வருகின்றன.

மறுபுறத்தில் இறுதி நபித்துவத்தை மறுதலித்து, மீண்டும் ஒரு நபி வருவார் எனும் நச்சுக்கருத்தைக் கொண்ட காதியானிஸம், மஹ்தி பவுண்டேஷன் உள்ளிட்ட வழிகேடுகள் நீர்கொழும்பு , கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் வேகமாய் படர்ந்து வருகின்றன. இன்னொரு புறம், இயற்கை பொருட்கள் யாவும் அல்லாஹ் எனும் அத்வைத சிந்தனையை ஏந்திப்பிடிக்கும் ‘தரீகதுல் முப்லிஹீன்’, யாழ்ப்பாணம் ஸூபி பாவா முஹியத்தீன்,காத்தான்குடி அப்துர் ரஊப் போன்றோரின் கருத்துக்கள் இன்றளவும் துளிர் விட்டவன்னம் உள்ளன. பிரிதொரு புறம், மரணித்தவர்களின் சமாதிகளில் வீழ்ந்து, அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் தர்கா வழிபாடு, தரீகா களியாட்டங்கள் தென் மாகாணம், கிழக்கு மாகாணம் உள்ளிட்ட சகல பகுதிகளிலும் புறையோடி வருகின்றன. மறுபுறம், முஸ்லிம்களை காபிராக்கும் ஜமாஅதுல் முஸ்லிமீன், கிலாபத் கோஷமிடும் ஜமாஅதே இஸ்லாமி, ஹிஸ்புத்தஹ்ரீர், இஹ்வானிஸம் போன்ற நவீனத்துவ வாதிகள் எழுச்சியடைந்து வருகின்றனர்.

நபிவழியை கொச்சை படுத்தும் கத்தம், பாதிஹா, கொடியேற்றம், வெட்டு குத்து ராதிபு, கந்தூரி, மீலாது, மவ்லூது போன்ற அனாச்சாரங்கள் முன்பைவிட உத்வேகத்தோடு எழுச்சி பெறுவதை காணமுடிகிறது. கொள்கை ரீதியான இத்தீமைகள் ஒருபுறம் வளர, மறுபுறம் சமூகத்தை சிதறடிக்கும் தீமைகள் வேகமாய் அதிகரித்தும் வருகின்றன.
விபச்சாரம், ஆபாசம், கற்பழிப்பு, சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் சேஷ்டைகள், கொலை, கொள்ளை, மது, சுது, சீதனம், அரசியல் பலிவாங்கள்கள், கருத்துச் சுகந்திரம் பறிக்கப்படல் போன்ற வன்கொடுமைகள் களைகட்டி வலம் வந்தவன்னம் உள்ளன.

இத்துனை தீமைகளுக்கும் முன்னால் எதிர்த்து நின்று போராட வேண்டிய தவ்ஹீதுவாதிகள் இத்தீமைகளை கண்டுகொள்ளாது மௌனம் சாதிப்பது எம் பொறுப்புக்களை உதாசீனப்படுத்துவதாக மாட்டாதா? தீமையை கண்டால் கரத்தால் தடுக்க வேண்டிய சமூகம் கையாலாகாத சமூகமாய் கைக்கட்டி வாய் பொத்தி நின்றால் அது தீமைகளுக்கு துணைபோனதாக மாட்டாதா? உன்னத சமூகமென படைத்தவனால் பட்டம் சுட்டப்பட்ட நாம் தீமைகளுக்கு முன் உயிர்த்துடிப்பற்று உறக்க நிலையில் இருக்கலாமா?

கொள்கைவாதிகளே! உங்கள் பணியின் சுமையை உணர்ந்து களப்பணி புரிய உங்களை அன்புடன் அழைக்கிறது ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத். ஓன்று படுவோம்! ஓரணிப்படுவோம்! தீமைகளுக்கெதிராய் குரல் கொடுக்கும் உன்னத சமூகமாய் எழுந்து நிற்போம்!        

Tuesday, May 31, 2011

கீழாடையும் அதன் எல்லையும்


எஸ். அப்பாஸ் அலீ, எம்.ஐ.எஸ்.சி.
கரண்டைக் காலில் ஆடை படும் வகையில் கீழாடை அணிவது தொடர்பாக இன்றளவும் மக்களிடையே தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இப்பிரச்சனை தொடர்பாக பல கோணங்களில் சிந்திப்பதற்கு ஏற்ற வகையில் ஆதாரங்கள் அமைந்திருப்பதால் இதில் பலத்த சர்ச்சை நீடித்து வருகின்றது.

ஒருவர் பெருமையின்றி ஆடை தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அது தவறில்லை என்ற கருத்தை நாம் கூறிக் கொண்டு வருகிறோம்.

நம்மைப் போல் சில அறிஞர்களும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றனர்.
இதற்கு மாற்றமாக கரண்டையில் ஆடை படவே கூடாது என்றும் கரண்டைக்கு மேல் வரை மட்டுமே ஆடை அணிய வேண்டும் என்றும் சில அறிஞர்கள் கூறிக் கொண்டிருக்கின்றனர்.

பெருமை உள்ளவரும் பெருமை இல்லாதவரும் அனைவரும் இவ்வாறே அணிய வேண்டும் என்பது இவர்களின் வாதம்.

பெருமையை மையமாக வைத்து சட்டம் மாறுபடுவதாக நாம் கூறுகின்ற கருத்தை இன்றைக்கு பலர் விமர்சனம் செய்து கரண்டையில் ஆடை படவே கூடாது என்ற தங்களது கருத்து தான் சரியானது என்று வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் கருத்தை நம்பிய பலர் தங்களுடைய கீழாடை கரண்டையில் படாத அளவிற்கு அதன் நீளத்தை குறைத்துக் கொண்டனர். இவ்வாறே ஆடை அணிய வேண்டும் என்று மற்றவர்களையும் வற்புறுத்தி வருகின்றனர். கரண்டையில் ஆடை படும் வகையில் ஆடை அணிபவர்களை விமர்சித்தும் வருகின்றனர்.

பெருமையுடன் அணிவது கூடாது; பெருமையின்றி அணியலாம் என நாம் வேறுபடுத்துவது தவறு என்ற இவர்களின் விமர்சனம் சரியா? தவறா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஒரு பேச்சுக்கு இவ்வாறு வேறுபடுத்துவது தவறு என்று ஏற்றால் கூட ஆடை கரண்டையில் கீழாடை படக்கூடாது என்று கூற முடியாது. மாறாக கீழாடை கரண்டையில் படுவதாலோ கரண்டையை மூடினாலோ தரையில் இழுபடாத வரை தவறில்லை என்ற நமது கருத்தே அப்போதும் மேலோங்கி நிற்கும்.

இதை விளக்குவதற்காக இந்த ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. ஆடையைக் கீழே தொங்க விடுவது தொடர்பாக வரும் ஹதீஸ்களில்

  • ஜர்ரு (ஆடையை தரையில் படுமாறு இழுத்துச் செல்வது) மற்றும்
  • இஸ்பால் (தரையில் படுமளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது)

ஆகிய இரண்டும் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இவ்விரு அரபுச் சொற்களுக்கு அரபு அகராதியில் என்ன பொருள் என்று பார்த்தாலே இப்பிரச்சனைக்கு இலகுவாக முடிவு கண்டு விடலாம்.

ஜர்ரு மற்றும் இஸ்பால் என்பதன் பொருள்

ஜர்ரு என்றால் இழுத்துச் செல்லுதல் என்பது அதன் பொருளாகும். ஒரு பொருளை தரை தாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அப்பொருளை நகர்த்துவதற்கே இழுத்துச் செல்லுதல் என்று கூறப்படுகிறது.

பின்வரும் செய்தியில் ஜர்ரு (ஆடையை இழுத்துச் செல்வது) கண்டிக்கப்படுகின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தனது ஆடையைத் (தரையில் படும்படி) தற்பெருமையுடன் இழுத்துக் கொண்டு சென்றவனை அல்லாஹ் (மறுமையில்) ஏறெடுத்தும் பார்க்க மாட்டான்.
இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
 புஹாரி 5783

தரையில் படுமாறு இழுத்துச் செல்லுதல் என்ற அர்த்தத்தில் ஜர்ரு என்ற வார்த்தை பல ஹதீஸ்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்வார்த்தைக்கு இதுவே சரியான பொருள் என்பதை அரபு படித்த அனைவரும் அறிவர். நமது கருத்துக்கு எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் கூட இந்த வார்த்தைக்கு நாம் கூறும் அர்த்தத்தையே கொடுக்கிறார்கள். அடுத்து இஸ்பால் என்ற வார்த்தையின் பொருளைப் பார்ப்போம். 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கரண்டைகள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம்
நூல் : அபூதாவூத் (3562)

மேற்கண்ட செய்தி இஸ்பால் செய்யக் கூடாது என்று கூறுகிறது. இஸ்பால் என்றால் தரையைத் தொடும் அளவிற்கு ஆடையைத் தொங்க விடுவது என்பது பொருள் என அரபு அகராதி நூல்களும் அறிஞர்களும் குறிப்பிடுகின்றனர்.

ஒருவர் தன் ஆடையை இஸ்பால் செய்தார் என்றால் அதன் பொருள் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விட்டார் என்பதாகும்.
லிசானுல் அரப் (பாகம் : 11 பக்கம் : 319)

நடக்கும் போது தன் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுபவரே இஸ்பால் செய்பவர்.
நூல் : அந்நிஹாயது ஃபீ ஃகரீபில் அஸர் (பாகம் : 2 பக்கம் : 846)

இஸ்பால் என்றால் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுதலாகும் என்று கத்தாபீ என்பவர் கூறியுள்ளார்.
நூல் : துஹ்ஃபதுல் அஹ்வதீ (பாகம் : 1 பக்கம் : 407)

இஸ்பால் என்றால் நடக்கும் போது ஆடையைத் தரையில் படும் அளவிற்குத் தொங்க விடுவதாகும்.
நூல் : அவ்னுல் மஃபூத் (பாகம் : 2 பக்கம் : 340)

எனவே இஸ்பால் என்றாலும் ஜர்ரு என்றாலும் ஆடையைத் தரையில் படும் அளவிற்கு தொங்க விடுவதே இவ்விரு வார்த்தைகளின் பொருளாகும். இந்த அடிப்படையில் இவையிரண்டும் ஒரே பொருள் கொண்ட வார்த்தைகளாகும். இவ்வாறு ஆடை அணிவது கூடாது என்றே ஹதீஸ்கள் கூறுகின்றன. 

இதை இங்கே நாம் குறிப்பிடுவதற்குக் காரணம் இஸ்பால் என்றால் கரண்டையைத் தொடுமாறு ஆடை அணியுதல் என்று சிலர் தவறாகக் கூறி வருகின்றனர். இஸ்பால் செய்வது ஹதீஸ்களில் கண்டிக்கப்படுவதால் கரண்டையில் ஆடை செல்லக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

இவர்களின் வாதம் தவறு என்பதை மேற்கண்ட ஆதாரங்கள் தெளிவாக எடுத்துரைக்கின்றன
கரண்டையைத் தாண்டி தரையில் இழுபடுவதைத் தடுக்கும் ஹதீஸ்களை கரண்டையில் படுவதைத் தடுப்பதாக கூறுவதை ஏற்க முடியாது.

கீழாடை கணுக்கால்களைத் தொடலாமா?

கீழாடையின் எல்லையைப் பற்றி பேசும் ஹதீஸ்கள் பல நபித்தோழர்கள் வழியாக வந்துள்ளன. இந்த ஹதீஸ்கள் யாவும் கரண்டையில் ஆடை படவே கூடாது என்று கூறவில்லை. மாறாக கரண்டையையும் சேர்த்து அதை மூடும் வகையில் ஆடை அணிந்தால் தவறில்லை என்றே கூறுகின்றன.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணுக் கால்களுக்குக் கீழே தொங்கும்  கீழாடை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : புகாரி (5787)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
கணுக்கால்களுக்கு கீழே செல்லும் கீழாடை நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : சமுரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (19309)

இவ்விரு செய்திகளில் கணுக் கால்களுக்குக் கீழே ஆடை அணிவது தான் தவறு என்று கூறப்படுகின்றது. எனவே கணுக்காலில் ஆடை அணிவதை இச்செய்தி அனுமதிக்கின்றது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக் கால்கள் வரை (அணிந்து கொள்). ஆடையை இஸ்பால் செய்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் பின் சுலைம் (ரலி)
நூல் : அபூதாவுத் (3562)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். கீழாடை கெண்டைக்காலின் பாதி வரையும் கணுக்கால்கள் வரையும் இருக்கலாம். இதற்குக் கீழே செல்வதில் எந்த நன்மையும் இல்லை.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (13115)

கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்று இங்கே கூறப்படுகின்றது. கணுக்கால்கள் வரை என்றால் அதன் முடிவுப் பகுதி வரை அணிந்து கொள்ளலாம் என்பதே இதன் நேரடிப் பொருள். எனவே கீழாடை கணுக்கால்களை தொடும் வகையில் அணிவது தவறல்ல.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு முஸ்லிமுடைய கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்க வேண்டும். அல்லது கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு (அழைத்து)ச் செல்லும். யார் தனது கீழாடையை ஆணவத்துடன் இழுத்துச் செல்கிறாரோ அவரை அல்லாஹ் பார்க்கமாட்டான்.
அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி)
நூல் : அபூதாவுத் (3570)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
ஒரு இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். கெண்டைக்காலுக்கும் கணுக்கால்களுக்கும் இடையே இருந்தால் அதில் தவறு ஏதும் இல்லை. கணுக்கால்களுக்கு கீழ் செல்பவையே நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)
நூல் : தப்ரானீ

மேலுள்ள செய்திகள் அனைத்தும் கீழாடை கணுக்கால்களைத் தொடக்கூடாது என்று கூறவில்லை. மாறாக கீழாடை கணுக்கால்களைத் தொடுவதை அனுமதிக்கின்றன. கணுக்கால்களுக்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும் என்ற வாசகம் கணுக்கால்களில் ஆடை பட்டால் தவறில்லை என்பதைத் தெளிவாக உணர்த்துகின்றது.
இந்தச் செய்திகள் அனைத்தும் ஒரே கருத்தைக் கொண்டிருந்தாலும் இவை வெவ்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் வெவ்வேறான அறிவிப்புக்களாகும். கணுக்கால்களைத் தொடும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று கூறுவோருக்கு மறுப்பாக இந்த ஆதாரங்கள் அமைந்துள்ளன.

கணுக்கால்களுக்குக் கீழ் என்பதன் விளக்கம்

மேலே நாம் சுட்டிக் காட்டிய செய்திகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்றும் கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்பதின் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பது தான். கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்ற உத்தரவை இந்தக் கருத்தில் தான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதைப் பின்வரும் செய்திகள் தெளிவுபடுத்துகின்றது.

ஹுஜைம் குலத்தைச் சார்ந்தவரான ஜாபிர் பின் சுலைம் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்) நீ கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை உடுத்திக்கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால் வரை (உடுத்திக் கொள்). கீழாடையை (தரையில்) இழுத்துச் செல்வதை விட்டும் உம்மை எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : பைஹகீ (5853) அபூதாவுத் (3562)

இந்தச் செய்தியில் கணுக்கால் வரை அணியலாம் என்று முதலில் கூறப்படுகின்றது. இதன் பிறகு கீழாடையைத் தரையில் இழுத்துச் செல்லக் கூடாது என்று கூறப்படுகின்றது. அதாவது கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்ற வாசகத்தைக் கூற வேண்டிய இடத்தில் தரையில் ஆடையை இழுத்துச் செல்லக் கூடாது என கூறப்பட்டுள்ளது. எனவே கணுக்கால்களுக்குக் கீழ் அணியக் கூடாது என்றால் தரையில் இழுபடுமாறு அணியக் கூடாது என்பதே அதன் பொருள் என இந்த ஹதீஸ் தெளிவாக்கி விட்டது.
சுருங்கச் சொல்வதென்றால் ஆடை தரையில் இழுபடாத அளவிற்கு நீட்டிக் கொள்ள நபியவர்கள் அனுமதி கொடுத்துள்ளார்கள் என்பதே இந்த ஆய்வின் சுருக்கம். அதாவது கணுக்கால்கள் வரை ஆடையை நீட்டலாம் என்பதும் தரையில் இழுபடாமல் ஆடையை அணியலாம் என்பதும் வெவ்வேறான கருத்துக்கள் அல்ல. மாறாக ஒரே கருத்தாகும்.
தரையில் இழுபடுமாறு ஆடை அணியக் கூடாது என்பதே சட்டம். இந்தச் சட்டத்தைச் சரியாகச் செயல்படுத்துவதற்கு கணுக்கால்கள் வரை உடுத்திக் கொள்ளலாம் என்று கூறப்படுகின்றது.

ஆடை தரையில் இழுபடாத வகையில் ஒருவர் அதிகபட்சமாக எவ்வளவு கீழே இறக்கினாலும் அவர் கணுக்கால்கள் வரை உடுத்தியதாகவே எடுத்துக் கொள்ளப்படும்.

நபியவர்களால் கண்டிக்கப்பட்டவர்கள்

கணுக்கால்களில் ஆடை படும் வகையில் அணிந்த ஒருவரை நபி (ஸல்) அவர்களோ நபித்தோழர்களோ கண்டித்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.
மாறாக ஆடை தரையில் படுமாறு இழுத்துச் சென்றவரை மட்டுமே நபியவர்கள் கண்டித்ததாக ஆதாரங்கள் உள்ளன. இதே போன்று நபித் தோழர்களும் ஆடையைத் தரையில் இழுத்துச் செல்பவர்களை மட்டுமே கண்டித்துள்ளார்கள்.

ஷரீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
தனது கீழாடையை இழுத்துச் சென்ற ஒருவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். உடனே அவரிடம் விரைந்து அல்லது ஓடிச் சென்று அல்லாஹ்வை அஞ்சிக் கொள். உனது கீழாடையை உயர்த்து என்று கூறினார்கள். நான் கவட்டைக் கால்களைக் கொண்டவன். என்னுடைய இரு முட்டுக்களும் மோதிக் கொள்ளும் (எனவே தான் இவ்வாறு அணிந்துள்ளேன்) என்று அவர் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உனது கீழாடையை உயர்த்திக் கொள். மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ்வின் படைப்பு அனைத்தும் அழகானதே என்று கூறினார்கள். இதற்குப் பிறகு அம்மனிதரின் கீழாடை கெண்டைக்காலின் பாதிவரை இருக்கும் நிலையிலேயே அம்மனிதர் தென்பட்டார்.
நூல் : அஹ்மது (18656)

முஸ்லிம் பின் யந்நாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், ஒரு மனிதர் தமது ஆடையைத் தரையில் இழுபடும்படி இழுத்துச் செல்வதைக் கண்டார்கள். அப்போது, "நீர் யார்?'' என்று கேட்டார்கள். அவர் தமது குடும்பத்தைப் பற்றித் தெரிவித்தார். அவர் பனூ லைஸ் குலத்தைச் சேர்ந்தவராயிருந்தார். அவரை யாரென அறிந்து கொண்ட பின், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "தற்பெருமையடிக்கும் நோக்கத்துடனே தனது கீழாடையை (தரையில் படும் படி) இழுத்துச் சென்றவனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்' என்று கூறியதை நான் இந்த என் இரு காதுகளால் கேட்டுள்ளேன்'' என்றார்கள்.
முஸ்லிம் (4236)

முஹம்மத் பின் ஸியாத் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
அபூஹுரைரா (ரலி) அவர்கள் பஹ்ரைன் நாட்டின் (ஸகாத் வசூலிக்கும்) அதிகாரியாக இருந்த போது, ஒரு மனிதர் தமது கீழாடையைத் தரையில் படும்படி இழுத்துக் கொண்டு செல்வதைக் கண்டார்கள். அப்போது தமது காலால் பூமியில் தட்டியவாறு "(இதோ! பெரிய) தலைவர் வருகிறார். (பெரிய) தலைவர் வருகிறார்'' என்று (இடித்துக்) கூறலானார்கள்.
பிறகு "அல்லாஹ்வின் துதர் (ஸல்) அவர்கள் "அகம்பாவத்துடன் தனது ஆடையை (தரையில் படும்படி) இழுத்துச் செல்பனை அல்லாஹ் மறுமையில் ஏறெடுத்துப் பார்க்க மாட்டான்' என்று கூறினார்கள்'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (4239)

அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் :
(உமர் (ரலி) அவர்களிடமிருந்து ஒரு) இளைஞர் திரும்பிச் சென்ற போது அவரது கீழங்கி தரையைத் தொட்டுக் கொண்டிருந்தது. (இதைக் கண்ட) உமர் (ரலி) அவர்கள், "அந்த இளைஞரை என்னிடத்தில் திரும்ப அழைத்து  வாருங்கள்'' என்று கூறினார்கள். (அவர் திரும்பி வந்த போது), "எனது சகோதரரின் மகனே! உனது ஆடையை (பூமியில் படாமல்) உயர்த்திக் கட்டு! இது உன் ஆடையை நீண்ட நாள் நீடிக்கச் செய்யும்; உனது இறைவனுக்கு  அஞ்சி நடப்பதுமாகும்'' என்று கூறினார்கள்.
புகாரி (3700)

கணுக்காலில் ஆடை படக்கூடாது என்போரின் ஆதாரங்கள்

முதல் ஆதாரம்

ஹுஜைமீ குலத்தைச் சார்ந்த நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் :
நான் நபி (ஸல்) அவர்களிடம் கீழாடையைப் பற்றிக் கேட்டேன். நான் கீழாடையை எது வரைக்கும அணியலாம் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் தனது முதுகை வளைத்து தன் கெண்டைக்காலின் எலும்பைப் பிடித்து இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் இதற்குக் கீழே இது வரை அணிந்து கொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்கு மேல் இது வரை அணிந்து கொள். இதையும் நீ விரும்பாவிட்டால் பெருமையடித்து ஆணவத்துடன் நடக்கும் யாரையும் மாண்பும் வலிமையும் மிக்க அல்லாஹ் விரும்ப மாட்டான் என்று கூறினார்கள்.
நூல் : அஹ்மது (15389)

இந்தச் செய்தியில் ஆடையை நீட்டுவதற்குக் கடைசி எல்லையாக கணுக்கால்களின் மேல் பகுதி கூறப்பட்டுள்ளது. இதை ஆதாரமாக வைத்து கணுக்காலில் ஆடை விழக் கூடாது. கணுக்காலுக்கு மேல் வரை மட்டுமே ஆடையை இறக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
இந்த அறிவிப்பை அபூ தமீமா என்பாரிடமிருந்து அபுஸ்ஸலீல் என்பவர் அறிவிக்கின்றார்.  இந்தச் செய்தியை அபூ தமீமாவிடமிருந்து அபுஸ் ஸலீல் மட்டும் அறிவிக்கவில்லை. அபூ தமீமாவிடமிருந்து அபுஸ்ஸலீல் உட்பட காலித் மற்றும் அபூ ஃகிஃபார் ஆகிய மூவர் அறிவித்துள்ளனர்.

இந்த மூவரும் நம்பகமானவர் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் அபுஸ்ஸலீல் காலிதுக்கும் அபூ ஃகிஃபாருக்கும் மாற்றமாக இந்தச் செய்தியை அறிவித்துள்ளார்.

காலிதுடைய அறிவிப்பிலும் அபூஃகிஃபாருடைய அறிவிப்பிலும் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது கணுக்கால்களின் மீது ஆடை படுவது தவறல்ல என்றே கூறப்பட்டுள்ளது. ஆனால் மேற்கண்ட அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பவில் கணுக்கால்கள் மீது ஆடை விழவே கூடாது என்று இதற்கு மாற்றமாகக் கூறப்பட்டுள்ளது.
அபுஸ்ஸலீலை விட காலிதே உறுதியானவர் என்பதாலும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு காலிதுடைய அறிவிப்புக்கு மேலும் வலு சேர்ப்பதாலும் கீழாடை கணுக்கால்களைத் தொடலாம் என்று கூறும் காலிதுடைய அறிவிப்பே சரியானதாகும். கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய மேற்கண்ட அறிவிப்பு பலவீனமாகும்.

காலிதுடைய அறிவிப்பு

கெண்டைக்காலின் பாதிவரை கீழாடையை அணிந்துகொள். இதை நீ விரும்பாவிட்டால் கணுக்கால்கள் வரை அணிந்துகொள். கீழாடையை (தரையில் படுமாறு) நீட்டுவதை விட்டும் உம்மை நான் எச்சரிக்கிறேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். பெருமை கொள்வதை அல்லாஹ் விரும்பமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அஹ்மது (22121)

அபூ ஃகிஃபாருடைய அறிவிப்பு

உனது கீழாடையைக் கெண்டைக்காலின் பாதி வரை உயர்த்திக் கொள். இதை நீ விரும்பா விட்டால் கணுக்கால்கள் வரை (அணிந்து கொள்). கீழாடையை (தரையில்) தொங்க விடுவதை விட்டும் உம்மை எச்சரிக்கின்றேன். ஏனென்றால் அது பெருமையின் ஒரு அங்கமாகும். அல்லாஹ் (நாம்) பெருமை கொள்வதை விரும்ப மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : அபூதாவுத் (3562)

அபூஹுரைரா (ரலி) இப்னு உமர் (ரலி) அபூசயீத் (ரலி) அனஸ் (ரலி) சமுரா (ரலி) ஆகிய ஐந்து நபித்தோழர்கள் வழியாக வந்த அறிவிப்புகளை முன்னர் பார்த்தோம். இந்த அறிவிப்புகளும் கணுக்காலில் ஆடை படுவதை அனுமதிக்கின்றன.
எனவே கணுக்காலில் ஆடை படக்கூடாது என்று கூறும் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு காலித் மற்றும் அபூஃகிஃபாருடைய அறிவிப்புக்கும் அந்த ஐந்து நபித்தோழர்கள் வழியாக வரும் அறிவிப்புகளுக்கும் மாற்றமாக இருப்பதால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு தவறானதாகும்.

மேலும் காலித் மற்றும் அபூ ஃகிஃபாருடைய அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அணியலாம் என்று கூறப்படுவதைத் தொடர்ந்து தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்றும் சேர்த்து கூறப்படுகின்றது.

ஆனால் அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பில் தரையில் படும் வகையில் ஆடை அணியக் கூடாது என்ற தகவல் கூறப்படவில்லை. எனவே அபுஸ்ஸலீலுடைய அறிவிப்பு முழுமையற்றதாகவும் பிழையானதாகவும் உள்ளது.

பல நம்பகமானவர்களின் அறிவிப்புகளுக்கு ஒருவரின் அறிவிப்பு மாற்றமாக இருந்தால் அவரது அறிவிப்பு ஏற்றுக் கொள்ளப்படாது என்ற ஹதீஸ் கலை விதியின் படி இதை ஏற்றுக் கொள்ள முடியாது.

இரண்டாவது ஆதாரம்

அபுல் காசிம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக் கால்களின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் இதற்குக் கீழே கணுக்கால்களுக்கு மேல் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்பவை நரகத்திற்குச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்
நூல் : அஹ்மது (10151)

இந்தச் செய்தியில் கணுக்காலின் மேல் பகுதி இறுதி எல்லையாகக் கூறப்படுவதால் இதையும் ஆதாரமாக காட்டுகிறார்கள். இந்தச் செய்தியில் முஹம்மது பின் அம்ர் என்பவர் இடம் பெறுகிறார். இவர் நம்பகமானவர் எனினும் இவரிடமிருந்து தவறுகள் பல ஏற்படும் என்று இமாம் இப்னு ஹஜர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட இந்தச் செய்தியில் இவர் தவறிழைத்துள்ளார் என்பது சந்தேகத்திற்கிடமின்றி தெளிவாகியுள்ளது. ஏனென்றால் இந்தச் செய்தியை அவர் அப்துர் ரஹ்மான் பின் யஃகூப் என்பாரிடமிருந்து அறிவிக்கின்றார்.

அப்துர் ரஹ்மான் பின் யஃகூபிடமிருந்து முஹம்மது பின் இப்ராஹீம் என்பாரும் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். கீழாடை கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும் என்றே இவரது அறிவிப்பில் உள்ளது. அதாவது கீழாடை கணுக்கால்களைத் தொடுவது தவறல்ல என்றே இவருடைய அறிவிப்பில் உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
இறை நம்பிக்கையாளரின் கீழாடை கெண்டைக்கால்களின் சதைப்பகுதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் கெண்டைக்காலின் பாதி வரை இருக்க வேண்டும். இல்லையென்றால் அவரது கணுக்கால்கள் வரை இருக்க வேண்டும். இதற்குக் கீழே செல்லும் ஆடை நரகத்திற்கு(அழைத்து)ச் செல்லும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : அஹ்மது (7519)

முஹம்மது பின் இப்ராஹீம் உறுதியானவர் நம்பகமானவர். இவர் முஹம்மது பின் அம்ரை விட வலிமையானவர். எனவே இவருக்கு மாற்றமாக அறிவிக்கும் முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பை ஏற்க இயலாது. 

மேலும் இதே செய்தி அபூ சயீத் மற்றும் இப்னு உமர் (ரலி) அவர்கள் ஆகிய இருவர் வழியாகவும் வந்துள்ளது. இந்த சரியான அறிவிப்புகளில் கணுக்கால்கள் வரை அதாவது கணுக்கால்களை கீழாடை தொடலாம் என்றே கூறப்பட்டுள்ளது. கணுக்கால்களுக்கு மேல் வரை அணிய வேண்டும் என்று கூறப்படவில்லை. இந்த அறிவிப்புகளை முன்பே நாம் பார்த்து விட்டோம்.

எனவே முஹம்மது பின் அம்ருடைய அறிவிப்பு நம்பகமானவர்களின் அறிவிப்புக்கு மாற்றமாக இருப்பதால் கணுக்கால்களுக்கு மேல் அணிய வேண்டும் என இவர் தவறுதலாக அறிவித்திருப்பது தெளிவாகி விட்டது. இந்த தவறான அறிவிப்பை ஆதாரமாக எடுக்க இயலாது.

மூன்றாவது ஆதாரம்

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடம். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பா விட்டால் கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)

இந்தச் செய்தியில் ஹுதைஃபா (ரலி) முஸ்லிம் பின் நதீர் அபூ இஸ்ஹாக் அபுல் அஹ்வஸ் மற்றும் குதைபா ஆகியோர் அறிவிப்பாளர்களாக இடம் பெற்றுள்ளனர்.
இதில் இரண்டாவதாக இடம்பெறும் அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீர் நம்பகமானவர் என்று அறிஞர்களால் நிரூபிக்கப்படவில்லை. இமாம் இப்னு ஹிப்பான் மட்டுமே இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இப்னு ஹிப்பான் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை எல்லாம் நம்பகமானவர் என்று கூறும் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவரது கூற்றை ஏற்க முடியாது.

நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாதவர்களை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் மக்பூல் என்ற வாசகத்தால் குறிப்பிடுவது வழக்கம். அறிவிப்பாளர் முஸ்லிம் பின் நதீரை இமாம் இப்னு ஹஜர் மக்பூல் என்றே குறிப்பிட்டுள்ளார்.

இவரது அறிவிப்பை முக்கிய ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மற்ற செய்திகளை வலுவூட்டுவதற்கு துணைச்சான்றாக எடுத்துக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் தஹபீ மற்றும் அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.

மேற்கண்ட செய்தியை ஹுதைஃபா (ரலி) அவர்களிடமிருந்து இவர் மட்டுமே தனித்து அறிவிக்கின்றார். அத்துடன் கீழாடை கணுக்கால்களைத் தொடுவதால் தவறல்ல என்று கூறும் ஏராளமான சரியான அறிவிப்புகளுடன் முரண்படும் வகையில் அறிவித்துள்ளார். இவர் தனித்து அறிவித்தாலே ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றால் ஆதாரப்பூர்வமான செய்திகளுக்கு மாற்றமாக அறிவித்தால் அறவே ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே இந்த அறிவிப்பை ஏற்க இயலாது.

இவர் மேற்கண்ட செய்தியைப் பிழையாக அறிவித்திருந்தாலும் வேறு ஒரு நேரத்தில் சரியாக அறிவித்துள்ளார்.

ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் கெண்டைக்காலின் சதைப் பகுதியைப் பிடித்து இதுவே கீழாடையின் (எல்லையாக உள்ள) இடமாகும். இதை நீ விரும்பா விட்டால் இதற்குக் கீழே அணிந்து கொள்ளலாம். இதையும் நீ விரும்பாவிட்டால் கணுக்கால்களுக்குக் கீழ் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறினார்கள்.
நூல் : திர்மிதி (1705)

இந்த அறிவிப்பில் கணுக்கால்களுக்குக் கீழே எந்த உரிமையும் இல்லை என முஸ்லிம் பின் நதீர் சரியாக அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பே மற்ற சரியான ஆதரங்களுடன் ஒத்துப் போகின்றது. எனவே கணுக்கால்களில் கீழாடைக்கு எந்த உரிமையும் இல்லை என அவர் அறிவித்தது தவறு என்பது இதன் மூலமும் தெளிவாகிறது.

ஆய்வின் சுருக்கம்

கீழாடை தரையில் படுமாறு ஆடையை இறக்கி அணிவதையே மார்க்கம் தடை செய்கின்றது. கணுக்கால்கள் வரை ஆடை அணியலாம் என்பதன் கருத்து ஆடை தரையில் இழுபடாத வகையில் அணியலாம் என்பதாகும். கணுக்கால்களுக்குக் கீழ் ஆடை செல்லக் கூடாது என்பதன் கருத்து தரையில் ஆடை படுமாறு அணியக் கூடாது என்பதாகும்.
கணுக்கால்களின் முன் பகுதியே கீழாடையின் இறுதி எல்லை என்ற கருத்தில் வரும் செய்திகள் பலவீனமானவை. கணுக்கால்களின் மீது ஆடை படும் வகையில் அணிந்தால் தவறில்லை என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் ஆதாரமாக உள்ளன. 

எனவே ஒருவர் தன் கீழாடையைத் தரையில் இழுபடாத வகையில் அணிந்தால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை. இது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வழிமுறையாகும்.

அதே நேரத்தில் ஆடையை அனுமதிக்கப்பட்ட எல்லையைக் காட்டிலும் மேலே உயர்த்தி அணிவது சிறந்ததாகும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கெண்டைக்காலின் பாதி வரை அணிய வேண்டும் என்பதை முதல் உத்தரவாக பிறப்பிக்கின்றார்கள். இதை விரும்பா விட்டாலே இதற்கு அடுத்த நிலையை கடைப்பிடிக்குமாறு கூறுகிறார்கள். எனவே ஆடையை உயர்த்திக் கட்டுவது மார்க்கத்தில் சிறந்த நிலையாகும்.